Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தீபக் ஒப்ராய் வைத்த மலர் வளையத்தில் வன்முறைகளில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக்கும் என்று மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட வெள்ளை நிறப்பட்டியொன்றும் வைக்கப்பட்டிருந்தது.

அதுஒன்றே அதுபோரில் இறந்த படையினரையோ புலிகளையோ உள்ளடக்கிய அஞ்சலி நிகழ்வு அதுவல்ல என்பதற்கான அடையாளமாக இருந்தது. அடுத்து, ஆனையிறவில் புலிகளின் எந்தநினைவிடமும் இல்லை.

மனிதஉரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் எடுத்த முடிவினால் கடுப்பாகியிருந்த இலங்கை அரசாங்கத்துக்கு கனடாவின் இன்னொரு நடவடிக்கை கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.

கனடாவின் பிரதிநிதியாக கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த, வெளிவிவகார மற்றும் சர்வதேச மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய், கடந்த செவ்வாய்க்கிழமை ஆனையிறவில் மலர்வளையம் வைத்த விவகாரம்தான் அது.

இணையமைச்சர் பதவிக்கு இணையான நாடாளுமன்றச் செயலரான தீபக் ஒப்ராயை, கொமன்வெல்த் மாநாட்டுக்கான தமது தலைமைப் பிரதிநிதியாக கொழும்புக்கு அனுப்பியிருந்தது கனடா. இவர் தன்சானியாவில் பிறந்த, ஒரு இந்தியவம்சாவளி கனேடியர்.

அவர்,கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்று கத்தோலிக் கத்திருச்சபையின் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரைச் சந்தித்திருந்தார்.

தீபக் ஒப்ராயுடனான சந்திப்பின்போது, இறந்தவர்களுக்கு நினைவுகூரும் உரிமைகூட இல்லாதவர்களாக தமிழ் மக்கள் இருப்பது குறித்து யாழ்.ஆயர் கவலை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண பயணத்தை முடித்துக் கொண்டு, தரை வழியாகத் திரும்பிய கனேடிய நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய், ஆனையிறவில் அமைந்துள்ள படையினரின் போர் வெற்றிச் சின்னத்துக்கு 1கி.மீ தொலைவில், கடல் நீரேரி ஓரமாகச் சென்று மலர் வளையம் ஒன்றை வைத்து, அஞ்சலி செலுத்தியிருந்தார்.

தீபக் ஒப்ராயும், கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்னிங்கும் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, தாம் எடுத்து வந்த மலர்வளையத்தையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டனர்.

முன்னதாக, அந்த இடத்தில் மலர் வளையம் வைப்பதற்கு அவர்களுடன் சென்ற இலங்கை அரச அதிகாரி ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், ஆனால் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கனடாவின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், ஆனையிறவில் மலர்வளையம் வைத்தபடத்துடன் செய்தி வெளியானதும், அரசதரப்புக்கு கடும் சீற்றம் ஏற்பட்டது.

அதன்விளைவு-மறுநாள் ஆங்கில நாளிதழ், ஒன்றில் கனேடியப் பிரதமரின் பிரதிநிதி, உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு ஆனையிறவில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என்ற தலைப்புச் செய்தியுடன் வெளியானது.

ஏரிக்கரை ஊடகங்கள் அரச கட்டுப்பாட்டில் இருந்தாலும், குறித்த ஆங்கில நாளிதழையே, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தமது பிரசாரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.

பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் அந்த ஆங்கில நாழிதள் மூலமாகவே, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதுண்டு.

குறிப்பாக மேற்குலகிற்கு எதிரான கருத்துகள், போர்க்குற்றங்களுக்கு எதிரான மறுப்புகள், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிரான கருத்துகள், மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதற்கு எதிரான கருத்துகள், இந்தியாவை சீண்டும் கருத்துகள், ஐ.நாவை விமர்சிக்கும் கருத்துகளை அவர், இந்தநாளிதழ் மூலமே அடிக்கடி வெளியிடுவது வழக்கம்.

அரசாங்கத்துக்கு சாதகமாக எவ்வாறு செயற்படுவது என்பதை குறித்த நாளிதழை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று அரச கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களிடம் அவர் கூறியதான தகவல்களும் ஏற்கனவே வெளியானது தான்.

சில சந்தர்ப்பங்களில், சர்ச்சைக்குரிய கருத்துகளை, அல்லது தகவல்களை அவர், வெளியிடும் போது தனது பெயரைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.தனியே மூத்த அரசாங்க பாதுகாப்பு உயரதிகாரி என்று மட்டும் அடையாளப்படுத்தப்படுவார்.

இது பல சந்தர்ப்பங்களில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக, அரசாங்க அமைச்சர்களும், அதிகாரிகளும் கையாளும் வழக்கமான வழிமுறைதான்.

கனேடியப் பிரதிநிதி தீபக் ஒப்ராய், கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாகவும், கனடாவில் உள்ள விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களைத் திருப்திப்படுத்தவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் மூத்தபாதுகாப்பு உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவே, அந்த ஆங்கில நாழிதழில் வெளியான செய்தி அமைந்திருந்தது.

அந்தச் செய்தி உள்நோக்கம் நிறைந்தது என்பதை எவராலும் புரிந்து கொள்ளமுடியும் .ஏனென்றால், தீபக் ஒப்ராய் வைத்த மலர் வளையத்தில் வன்முறைகளில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக்கும் என்று மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட வெள்ளை நிறப்பட்டியொன்றும் வைக்கப்பட்டிருந்தது.

அது ஒன்றே அதுபோரில் இறந்த படையினரையோ புலிகளையோ உள்ளடக்கிய அஞ்சலி நிகழ்வு அதுவல்ல என்பதற்கான அடையாளமாக இருந்தது. அடுத்து, ஆனையிறவில் புலிகளின் எந்த நினைவிடமும் இல்லை.

முள்ளிவாய்க்காலுக்கு அடுத்து போரின் அதிகவடுவைசந்தித்த இடமாக ஆனையிறவு உள்ளது. அந்தவகையில், கனேடியப்பிரதிநிதி ஆனையிறவில் மலர்வளையம் வைத்தது புலிகளுக்காகவே என்றால்கூட அதைப்படையினருக்கான அஞ்சலியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை குறித்த ஆங்கில நாளிதழில் கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பிரிவினை வாதத்துக்கு துணைபோகக்கூடாது என்று பாதுகாப்புசெயலர் வெளிப்படையாக கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில்,கனேடியப்பிரதிநிதி ஆனையிறவு தவிர்ந்த வேறொரு இடத்தில் மலர்வளையம் வைத்திருந்தால் அது சர்ச்சைக்குரியதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நாமனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அண்மையில், இலங்கைக்கு வந்திருந்தபோது போரில் இறந்த அனைவரினதும் நினைவாக முள்ளிவாய்க்காலில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால்,அதற்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் அந்த திட்டத்தை அவர் கைவிட்டார்.

நவநீதம்பிள்ளை தான் செல்லுமிடங்களில் போரில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தும் வழக்கத்தை கொண்டவர்.

இலங்கைப்பயணத்தின் பின்னர் ஜேர்மனிக்குச் சென்றபோது நாசிப்படைகளின் வதைமுகாமில் இறந்தவர்கள் நினைவாக முன்னர்வதை முகாமாக இருந்த இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் அனைவருக்காகவும் அஞ்சலி செலுத்த முயன்ற நவநீதம்பிள்ளையை, புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவர் நந்திக்கடலில் அஞ்சலி செலுத்த முயன்றதாக கதையைத் திரித்துவிட்டது அரசாங்கம்.

அதுபலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தியது. நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தமுற்பட்டது தவறு என்றும் பொதுவான இடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர்ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்தார்.

அதுபோலத்தான் ஆனையிறவில் அஞ்சலி செலுத்தியதை கோத்தாபயராஜபக்ஷ தவறெனச்சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் கூறும்பொதுவான இடம், நிச்சயமாக வடக்கு,-கிழக்குக்கு வெளியேதான் இருக்கும்.

ஆனால் போர்நடந்ததும் போரால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதும் வடக்கு,கிழக்கில்தான். அப்படியிருக்கும்போது அதற்கு வெளியே அஞ்சலி செலுத்துவது எப்படி முறையாகும் என்ற கேள்விஎழும்.

ஆனையிறவிலும், முள்ளிவாய்க்காலிலும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்துவதை தவறெனச்சுட்டிக்காட்டும் அரசாங்கமே, அந்த இடங்களில் தமதுபோர் வெற்றிச் சின்னங்களை நிறுவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், தம்மையும் மீறி எவரும் புலிகளுக்கு அஞ்சலி செலுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. அதனால்தான் வருடம்27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுவதால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைக்கூட அரசாங்கம் மூடியுள்ளது.

கடந்த ஆண்டு மாவீரர்நாளில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தீபமேற்றிய போது படையினரும் பொலிஸாரும் நடத்தியதாக்குதல் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது.

அதுபோன்று இம்முறை நடப்பதை தடுக்கவே பல்கலைக்கழகத்தை இழுத்து மூடியுள்ளது அரசாங்கம்.

எவ்வாறாயினும் நவநீதம்பிள்ளையை அஞ்சலிசெலுத்த அனுமதித்திருந்தாலோ, கனேடியப்பிரதிநிதியின் அஞ்சலியை சர்ச்சைக்குரியதாக்காமல் விட்டிருந்தாலோ இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை பறிக்கும் அரசாங்கத்தின் செயல் இந்தளவுக்கு வெளிப்பட்டிருக்காது.

அரசாங்கத்தின் இறுக்கமான போக்குத்தான் வடக்கிலுள்ள மக்களுக்கு இறந்துபோனவர்களை நினைவுகூரும் உரிமையைக்கூட அரசாங்கம் கொடுக்கவில்லை என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

சுபத்ரா

0 Responses to சர்ச்சையைக் கிளப்பிய ஆனையிறவு மலர்வளையம் - சுபத்ரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com