Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசி ரவிசங்கர் அவர்கள் காலமானார்.

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தமிழ் (ஐ.பி.சி) அதன் ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி ரவிசங்கர் கடமையாற்றினார்.

அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி ரவிசங்கர் தொகுத்து வழங்கினார்.

2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகமாலையில் யாழ் – கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும், ஐ.பி.சி வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் தொகுத்து வழங்கினார்.

அதன் பின்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் செய்தியாளர் மாநாட்டில் இரு ஊடகங்களின் சார்பாகவும் கௌசி ரவிசங்கர் கலந்து கொண்டார்.

2010ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அனைத்துலக உயிரோடை தமிழ் (ஐ.எல்.சி) வானொலி ஆரம்பிக்கப்பட்ட பொழுது மூன்று மாதங்களுக்கு அதன் செய்தி வாசிப்பாளராக கௌசி ரவிசங்கர் கடமையாற்றினார்.

தவிர 2003ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் உட்பட பல்வேறு எழுச்சி நிகழ்வுகளிலும், கலை நிகழ்வுகளிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஒருவராகவும் கௌசி ரவிசங்கர் திகழ்ந்தார்.

அண்மைக் காலமாக உடல்நலக் குறைவுக்கு ஆளாகியிருந்த கௌசி ரவிசங்கர் 18.11.2013 திங்கட்கிழமை மருத்துவமனையில் காலமானார்.

சிறப்பு அஞ்சலிச் செய்தி

உண்மையை உள்ளத்தில் ஏந்தி, அதைத் தன் குரலில் உறுதியுடன் வெளிப்படுத்திய உன்னதமான ஊடகவியலாளர்.

தமிழின் ஜீவன் மறைந்திருக்கும் இடம் அதன் ஒலியாகும்.

அந்த ஒலியைச் சரியாக உச்சரிக்கும்போது தமிழ் புத்துயிர் பெறுகிறது.

அப்படி ஒவ்வொரு நாளும் வானலையில் தமிழுக்கு புத்துயிரும், புதுப்பொலிவும் வழங்கி, நேயர்களுக்கு தன்குரலால் புத்துணர்ச்சி கொடுத்தவர் சகோதரி கௌசி ரவிசங்கர்.

ஒன்றா.. இரண்டா.. எத்தனை அரிய நிகழ்ச்சிகளை யாரும் எதிர்பாராத அரிய கோணங்களில் நடாத்தி எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற ஐ.பி.சியின் தாரக மந்திரத்திற்கு வலுச் சேர்த்த ஒலிபரப்பாளர்.

தமது நேயர்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து, அதை சரியான நேரத்தில் வழங்குவதிலும் அவருக்கு இணை அவரே.

ஒளியாய் நிறைந்திருக்கும் இறைவனின் அரவணைப்பை பெற்று மகிழ்வது ஒலியே என்பார்கள், இன்று விடிகாலைப் பொழுதியில் ஒளியுடன் கலந்தது ஒலி என்ற செய்திகேட்டு அதிர்ந்தேன்.

பெண்கள் சாதாரண வாழ்க்கையைக் கொண்டு செல்லவே போராடும் ஐரோப்பிய வாழ்வில் வாழ்வெனும் சுடரை ஒரு கையிலும் பொதுப்பணியை இன்னொரு கையிலும் ஏந்தி இரு சுடரேந்திய ஒரு வெற்றிப் பயணம் உன் வாழ்வு..

ஒலியால் தமிழுக்கு உயிர் கொடுத்த தாரகையே.. இன்று தமிழே உன்னை முழுதாய் அணைத்ததுவோ..

தமிழ் பாடிய குயிலே அன்புச்சகோதரி கௌசி..

உலகுள்ளவரை உன் ஒலி இருக்கும்..

ஒலி உள்ளவரை சகோதரியே நீயும் நீலவானில் நிறைந்திருப்பாய்..

உன் ஆத்மசாந்திக்கு வானமாமலையாக நிற்கும் அந்தப் பேரொளியின் பாதங்களை பணிகிறேன்.

கி.செ.துரை

0 Responses to திருமதி கௌசி ரவிசங்கர் அவர்கள் காலமானார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com