Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென் சூடானில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை இது தற்போது ஐ.நாவின் முகாமில் அமைதிப்படைப் பணியாற்றிய மூன்று இந்தியப் படைகளின் உயிர்களுக்கும் உலை வைத்துள்ளது.

தென் சூடானின் விடுதலை முடிவடைந்து தற்போது அங்குள்ள இனக்குழுமங்களுக்குள் மோதலாக உருவெடுத்துள்ளது, இரண்டாவது பெரிய இனக்குழுவான டிங்கா இனக்குழுவின் முகாமில் இக்கொலைகள் நடந்துள்ளன.

இத்தகவலை நியுயார்க்கில் நடந்த ஐநா மன்ற அமைதிகாப்புக் கூட்டம் ஒன்றில் ஐ.நா மன்றத்துக்கான இந்தியத் தூதர் அசோக் முக்கர்ஜி வெளியிட்டார்.

சம்பவம் நடந்த அகொபோ நகரில் இருக்கும் ஐ.நா மன்ற கட்டிடத்தில் 43 இந்திய அமைதிப் படையினர் இருந்தனர் .

அந்த கட்டிடத்தில் புகலிடம் கோரியிருந்த 32 டிங்கா இன சிவிலியன்களை , நுயெர் இனக் குழுவினர் இலக்கு வைத்தபோது இந்த சம்பவம் நடந்தது

தற்போதைய அதிபர் சல்வா கீரின் இனமே டிங்கா இனமாகும்.

இந்தப் பகுதி முன்னாள் உப அதிபர் றிக் மாச்சர் தலைமையிலான படைகளால் சில தினங்களுக்கு முன்னர் சீல் வைக்கப்பட்டது, இப்போது கிழக்குக் காட்டுப்பகுதியில் மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தென் சூடானின் தற்போதைய நிலை மிகவும் மோசமானதென்றும், அது உள்நாட்டுப் போராக வெடித்து, பாரதூரமான உருகுநிலைப் புள்ளிக்குள் போகப்போகிறதெனவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக் குறிப்புக்களின்படி தென் சூடான் தலைநகர் நோக்கி 45 அமெரிக்க அதிரடிப்படைகள் அவசரமாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்படைகள் தென் சூடானில் நிரந்தரமாக இருக்காது என்றும் தற்போதைய ஆபத்தான நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் திரும்பிவிடும் என்றும் தெரிவிக்கிறது.

மேலும் தென் சூடானிய அதிபர் தற்போதைய ஆபத்து நிலமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமானால் எதிரணியுடன் பேச்சுக்களை நடாத்த வேண்டும் என்றும் ஆபிரிக்க அயல் நாடுகள் கேட்டுள்ளன.

எதிரணியைச் சேர்ந்த றிக் மாச்சர் இது இராணுவ சதிப்புரட்சி அல்லவென்றும், இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாதென்றும் தனது மனைவி உட்பட குடும்ப நண்பர்கள் அரச படைகளின் ஆபத்து வளையத்தில் சிக்கியுள்ளார்கள் என்றும் கூறுகிறார்.

மேலும் தாங்கிகளுடன் வந்த படையினர் தனது வீட்டைத் தகர்த்ததுடன் தனது மெய்ப்பாதுகாவலரையும் கொன்றுதள்ளியுள்ளதாக மறைவிடத்தில் இருந்து றிக் மாச்சர் கூறுகிறார்.

மேலும் தற்போதய அதிபர் சல்வா கீர் தன்னுடைய டிங்கா இனத்தில் இருந்தே அதிகமானவர்களை இராணுவத்தில் சேர்த்துக் கொண்டு, பொய்யான சதிப்புரட்சி கதையைச் சோடித்துக் கொண்டு, மற்றைய இனங்களை துடைத்தெறிய ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இவரை உப அதிபர் பதவியில் இருந்து தற்போதைய அதிபர் சல்வா கீர் விலத்தியதாலேயே இராணுவப் புரட்சி ஒன்றை மேற்கொள்ள முயன்றார் என்று தென் சூடானிய செய்திகள் கூறுகின்றன.

இதை எதிர்த்து இரண்டாவது பெரிய இனமான நுயெர் இனம் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதால் இது ருவாண்டா, சிறீலங்கா போல இனக்கலவரமாக மாறி பெரும் இரத்த ஆற்றை ஓட வைத்துவிடும் என்று சர்வதேசம் அஞ்சுகிறது.

இதுவரை 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர், தலைநகர் யுப்பாவில் மட்டும் 20.000 பேர் அகதிகளாக இருக்கிறார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக சுதந்திரத்திற்காக போராடி இரண்டு ஆண்டுகளின் முன் சுதந்திரமும் பெற்றவர்கள் இப்போது தங்களுக்குள் மோத ஆரம்பித்துள்ளார்கள்.

றிக் மாச்சர் இனிமேல் நாட்டின் அதிபராக வரலாம் என்று கனவும் காண முடியாது என்று தற்போதைய அதிபர் கூறியுள்ளார், அங்கு கடுமையான அதிகாரப் போட்டி நிலவுவதாக ஆபிரிக்க ஆய்வாளர் கூறுகிறார்கள்.

அலைகள்.

0 Responses to தென் சூடானில் மூன்று இந்திய அமைதிப்படை சுட்டுக் கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com