Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய வீடமைப்பு திட்டத்தில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களும், மலையக தோட்டத் தொழிலாளர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டிலும் கூட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தின் தேசிய வீடமைப்பு திட்ட ஒதுக்கீட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்புக்கு முந்திய குழுநிலை விவாதத்தில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே பா.அரியநேத்திரன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல்கள் முடிவுக்கு வந்த காலம் முதல் மோதல்களில் பங்களித்த படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர், அரச ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு தேசிய வீடமைப்பு திட்டத்தில் அதிக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மோதல்களினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களின் சொத்து இழப்பு குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சொந்தக் காணிகளை கோரும் மலையக மக்களை 5000 வீடுகளை மாத்திரம் வழங்கிவிட்டு ஏமாற்றும் செயற்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. இது, நியாயமான செயற்பாடு அல்ல என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to தேசிய வீடமைப்பு திட்டத்தில் வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் புறக்கணிப்பு: பா.அரியநேத்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com