Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். அது தொடர்பில் யாரும் எமக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை கோரும் தீர்மானமொன்றை ஐரோப்பிய பாராளுமன்றம் அண்மையில் நிறைவேற்றியது. குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மோதல் காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு நியமிக்கப்பட்டது. இதன் அறிக்கை கிடைத்தவுடன் பாராளுமன்றத்திலும் அது சமர்ப்பிக்கப்பட்டதோடு அதன் பரிந்துரைகளை துரிதமாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தபோது, அதனால் எந்த பிரயோசனமும் ஏற்படாது எனவும், அதனை அரசாங்கம் முன்னெடுக்காது எனவும் சில தரப்பினர் விமர்சித்தனர். ஒரு பக்க சார்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை களில் 50 வீதத்துக்கும் அதிகமானவை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முன்பு விமர்சித்தவர்கள் இப்போது  அதனை ஏற்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த மாற்றத்தை நாம் வரவேற்கிறோம். இந்த ஆணைக் குழுவினால் எதுவும் நடக்காது என்றவர்கள் இன்று அதன் சிபார்சுகளை அமுல்படுத்துமாறு கேட்கின்றனர்.  அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என யாரும் எமக்கு சொல்லித்தரத் தேவையில்லை. மற்ற வர்களின் நிகழ்ச்சி நிரல்படி எம்மால் செயற்பட முடியாது. இதற்கு முன்னரும் இவ்வாறே வேறு சில நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் எமக்கு உத்தரவு போட தயாராகின என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எஞ்சியுள்ள அநேகமான பரிந்துரைகளை செயற்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் முன்னெடுக்க வேண்டும். மக்களின் பங்களிப்புடனே இவற்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கான கால அவகாசமும் அவசியமானது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்று எமக்குத் தெரியும்: கெஹலிய ரம்புக்வெல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com