Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணைவியினையும் இணைத்துக் கொண்ட ஒரு மூத்தஅரசியல் போரளியாக,ஒரு மதியுரைஞராக, தத்துவ ஆசிரியராக, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு அருகில் இருந்து விடுதலைப் போராட்டததிற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார்.

பரந்து வாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜ தந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப் பணிக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை வழங்கி மதிப்பளித்தார். தாயகத்தில் போர் உக்கிரம் பெற்ற கால கட்டப் பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த முடியாத சூலலிலும் உடல் நலத்தினை கருத்தில் கொண்டும் கடற்புலிகளின் சிறப்பு பாதுகாப்புடன் கடல் வழியாக பன்னாட்டிற்கு சென்று பன்னாடுகளுக்கு தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்து கூறி, 2002 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத் உடன்பாட்டிற்கு முதன்மை வகித்தார். ஸ்ரீலங்கா அரசின் பல மறை முக எதிர்புக்களுக்கு மத்தியிலும் உயில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விடுதலைப் பற்றுக் கொண்டவனாக அன்று இரணைமடு குளத்தில் விமானத்தில் வந்திறங்கி தனது அரசியல் சக்தியினை ஸ்ரீலங்கா அரசிற்கு தெரியப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து தாய்லாந்து தொடக்கம் ஜெனீவா வரையான பலசுற்று பேச்சுவார்தைகளில் பங்கொடுத்து தமிழ் மக்களின் அரசியல் வேட்கையினை உலகிற்கு எடுத்துக்கூறி ஸ்ரீலங்காஅரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களை தனக்கு அடுத்த அரசியல் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுத்த பெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களை சாரும் தமிழீழ மண்ணில் பலகல்விக் கூடங்களையும் அரசியல் நிர்வாக அலகுகளின் அலுவலங்களையும் திறந்து வைத்தும் பல போராளிகளுக்கு அரசியல் வகுப்புக்களை கற்பித்த எங்கள் ஆசானாக என்றும் அவர் எங்கள் மனங்களில் நிறைந்திருப்பார்.

ஸ்ரீலங்கா அரசு போர்நிறுத்த மீறல்களை மேற்கொண்டு தமிழர் தாயகப் பரப்பில் அத்துமீறிய போர் நடவடிக்கையினை மேற்கொண்ட கால கட்டப்பகுதியான 2006ம் ஆண்டு காலகடத்தில் உடல் உபாதையால் பாதிப்புற்ற அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு மார்கழி 14ம் தேதி தமிழ்மக்களை விட்டு பிரிந்து சென்றார்.

தாய்மண்ணின் விடியலில் நாளும் அயாராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து மாவீரர்களுடன் தமிழீழக் காற்றில் கலந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர், தத்துவாசிரியர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம்மை விட்டகன்று 7ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால், அவரது நினைவுகளும் ஆளுமைகளும் எம்மை விட்டு என்றும் அகலா.ஒரு பத்திரிகையாளனாக, பொதுவுடைமைச் சித்ததாந்தவாதியாக, தத்துவாசிரியராக, விடுதலைப் புலிகளின் ஆலோசகராக, தலைமைப் பேச்சாளராக பல பரிமாணங்களை எடுத்தவர் எங்கள் பாலா அண்ணா.எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் மக்களினுடைய தேசிய விடுதலைப் போராட்டம் குறித்து, அதன் நியாயப்பாடுகளை சர்வதேச அரங்கில், எடுத்துச் சென்று வாதிட்ட, தமிழர்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு போராளி அவர்.கொடிய நோய் தன்னைத் தாக்கியிருந்ததையும் பொருட்படுத்தாமல், தன் இறுதி மூச்சு அடங்கும் வரை, எங்கள் தேசத்தின் குரலாக அவர் ஒலித்தார். எங்கள் மக்களின் விடுதலைக்காக அவர் இறுதிவரை உழைத்தார்.தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில், பாலா அண்ணாவின் வாழ்க்கை ஒரு பாடம்.படித்தவர்கள், அறிவுஜீவிகள், உயர்பதவி வகிப்போர், புலம்பெயர்ந்த தேசங்களில் கல்விகற்கும் இளையோர், உயர்நிலைகளை நோக்கி முன்னேறும் இளம் சமூகத்தினர் என எல்லோருக்கும் பாடமாக தன் வாழ்க்கையை வாழ்ந்துகாட்டியிருக்கின்றார் பாலா அண்ணா.

1979ம் ஆண்டு, தமிழகத்தில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைச் சந்தித்த நாள் தொடக்கம், தேசியத் தலைவரின் கருத்தோடு ஒன்றிக் கலந்து, இறுவரை தேசியத் தலைவருக்கு ஆதரவாக, அன்புகொண்ட அண்ணனாக, உடன் இருந்து தேசியத்தலைவரின் பணிச் சுமையைத் தானும் பங்கிட்டுக்கொண்டவர்.தான் மட்டுமன்றி, தன் வாழ்க்கைத் துணையாக வந்திணைந்த, அவுஸ்திரேலியப் பெண்மணியான அடேல் அம்மையாரையும், எமது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும் பெண்மணியாக பங்குவப்படுத்தி, எமக்காக, தம்பதியினராக, அனைத்து இன்ப துன்பங்களையும் எமக்காகப் பங்கிட்டு வாழ்ந்தார்.மேல்நாட்டு வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு, தாய்நாட்டு விடுதலைக்காக உயிர்கொடுத்துப் போராடும் போராளிகளோடு போராளிகளாக மோசமான ஆபத்துகள் நிறைந்த நெருக்கடியான தாயக வாழ்க்கையை, பாலா அண்ணாவும் அடேல் அம்மையாரும் விருப்புடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை உண்மையில், எமக்கான பெரும் பாடம்.எளிமையாக வாழ்ந்தார். உயர்ந்த சிக்கல் நிறைந்த, விளங்கிக்கொள்ள சிரமமான தந்துவங்களை, சித்தாந்தங்களை எளியதமிழில் எமக்கு பரிச்சயப்படுத்தினார்.உலகத்தின் ஆதரவை எமது பக்கம் திருப்ப அதிகளவில் பாடுபட்டார். போராடினார்.

இன்று அவரது இடம் வெற்றிடமாகவே இருக்கின்றது.புலம்பெயர்ந்தமண்ணில் வாழும் இளைய சமூகத்தினருக்கான அழைப்பை பாலா அண்ணாவின் வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கின்றது.எமது தாயக விடுதலையை நேசிக்கவும், அதற்காக அர்ப்பணிப்பான வாழ்க்கையை வாழவும் பாலா அண்ணாவின் வாழ்க்கை கற்றுத்தருகின்றது.தேசியத்தலைவரின் வேண்டுகோள் புலம்பெயர்ந்த இளைய சமூகத்தை நோக்கியே முன்வைக்கப்பட்டிருக்கின்றது.பாலா அண்ணாவின் வாழ்க்கையை ஒரு அரும்பெரும் பாடமாக ஏற்றுக்கொண்டு, கர்வமற்ற, தன்னடக்கமான, சுயநலமற்ற அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் தேசப்பணியாற்ற புலம்பெயர் இளைய சமூகம் தன்னைத் தயார்படுத்த வேண்டும்.பாலா அண்ணாவின் நினைவு நாளில், இந்த நிலையை எட்ட எம்மைத் தயார்படுத்துவோமாக.

0 Responses to ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com