Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழ விடுதலைப் போராட்டம் சுமார் 60 ஆண்டுகாலமாக நீண்ட வரலாற்றில் பல்வேறான போராட்ட வடிவங்களை கொண்ட ஒரு விடுதலைப் போராட்டமாக உலக மக்களால் அவதானிக்கப்பட்டு வருகின்றது.

ஈழத் தமிழ் மக்கள் இன்று உலக அரசியல் நகர்வுகளுக்குள் சாணக்கியமாக தமது போராட்டத்தை காய் நகர்த்தி வரும் தீர்க்கமான உறுதியாலும் போராட்டத்தின் விடா முயற்சியாலும் உலக மக்களால் உற்று நோக்கப்பட்டு வரும் இனமாக தமது போராட்டத்தை தொடர்வதனை காணமுடிகின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காலங்களில் எம் மக்கள் அழிவில் மாண்டு சாவது காணப் பொறுக்காமல் உலக வீதிகளில் நாம் மண்டியிட்டு கதறி அழுதும் பல வழிகளிலும் போராடியும் உலகின் மனசாட்சி ஏனோ துளி கூட இரக்கமின்றி எம் இனம் மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தாமல் இனப்படுகொலையின் மௌன சாட்சியாக விழி மூடிக் கேளாச் செவியோடு ஊமையாக பார்த்துக்கொண்டு இருந்தது.

உலக வீதிகள் எங்கும் எம் கண்ணீரில் தோய்ந்திருக்க எம் தாயகமோ குருதியில் தோய்ந்து அழிந்து கொண்டிருந்த அந்த நாட்கள் மிகக் கொடியவை. ஆனாலும் புலத்தில் வாழ்ந்த தமிழர்களாகிய நாம் எம் இறுதி சொட்டு முயற்சியாவது பலன் தராதா என உலக வீதிகளை நிறைத்துபெரும் திரளாக திரண்டு பல வடிவங்களில் போராடினோம்.

ஈற்றில் எந்த பயனும் இன்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தேறி உலகின் மாந்த நேயம் இந்த நவீன நூற்றாண்டிலும் தோற்றுப் போனநிலையில் எம் இனத்தை பல இலட்சங்களாக காவு கொடுத்த கொடும் துயரில் நாமெல்லோரும் சோர்வுற்று முடங்கி போனோம்.

ஆனாலும் போராட்டத்தின் தொடர்ச்சியே உண்மையான வெற்றி என்பதாக உலக தமிழினம் தொடர்ந்தும் அயராமல் போராடி சர்வதேச அரசியல் சூழ்நிலைகளை எமக்கான காலங்களாக மாற்றி பல வழிகளிலும் பல வடிவங்களிலும் புலத்து தமிழர்கள் போராடியதன் பயனாக இன்று அநீதியை கூண்டிலேற்றும் சூழல் கனிந்து வந்திருக்கின்றது.

உலகின் மனசாட்சி இப்பொழுது தான் அரை விழி திறந்து விழித்துப் பார்க்க ஆரம்பித்துள்ளது. நெஞ்சை நிமிர்த்தி நீதி கேட்க சில முன்னணி சக்திகள் எம் முன்னால் நின்று எமக்காக இன்று மறுக்கப் பட்ட நீதிக்காகக் குரல் கொடுக்க விளைவதை காண முடிகின்றது.

இன்று உலக தமிழினம் முன்னொரு போதும் கண்டிராத மக்கள் எழுச்சியாக ஓரணியில் பேரணியாக எழுகை சரித்திரம் படைக்க வேண்டிய காலம் மீண்டும் உருவாகி உள்ளது. கனிந்து வரும் காலங்களை நமதாக்கி உழைக்க வேண்டியவர்களாக உலகத் தமிழர்கள் உள்ளார்கள்.

ஈழத் தமிழினம் இன்று வாழ்வா சாவா என்ற நிலையை எதிர்நோக்கி இருக்கின்றது என்றே கூறலாம். எமது இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை நடந்தேறிய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலே உலகெங்கும் வாழும் உணர்வுள்ள தமிழர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் தோற்றுப் போயிருந்தாலும் அதன் வெற்றியாக இன்று வரலாறு எம் வடமிழுப்புக்காக எம் கைகளில் வந்து காத்திருக்கின்றது.

எனவே உலகெங்கும் ஒரே காலத்தில் இனி தொடர்ச்சியாக எமது போராட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் உலகத் தமிழுறவுகள் இந்த போராட்டங்களை வலுச்சேர்த்து வெற்றி திசையில் பயணிக்க வைக்க வேண்டும். அந்த வகையில் அனைத்துலகத்திடம்

1.இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இடம்பெற்ற மாபெரும் இனப் படுகொலைக்காக நீதி வேண்டியும்,

2.அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும்,

3.ஐ. நா. வினால் சர்வதேச வாக்கெடுப்பை நடத்தக் கோரியும்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் போராடவுள்ளார்கள். இது எங்கள் முழு மூச்சுடனான போராட்டம் என்ற மன உறுதியோடு கனடா வாழ் தமிழ் மக்கள் நாம் அனைவருமே போராட்டங்களை முனைப்போடு முன்னெடுக்க வேண்டும்.

அந்த வகையில் கனடிய மண்ணில் தாயக, தமிழக, புலம்பெயர் தமிழுறவுகளுடன் இணைந்து ஒன்றன் பின் ஒன்றாக தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு கனடிய தமிழர் தேசிய அவையினரும் மற்றும் அவர்களோடு இணைந்து கனடா தமிழ் மகளிர் அமைப்பினரும் கனடாத் தமிழ் இளையோர் அமைப்பினரும் முடிவெடுத்துள்ள நிலையில் தொடர் போராட்டத்தின் முதலாவது போராட்ட நிகழ்வாக இந்த மாதம் 20 ஆம் நாள், வெள்ளிக்கிழமை மாலை பி.ப. 3:00 மணி தொடக்கம் மாலை 7:00 மணி வரை ரொறொன்ரோ நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் அமெரிக்கதுணைத் தூதரகத்திற்கு முன்பாக மக்கள் எழுச்சி போராட்டமாக நடைபெறவுள்ளது.

தொடர் போராட்டங்கள் இனி எங்கு எப்பொழுது நடைபெறும் என்ற விடயங்களை நாம் அவ்வப்போது முற்கூட்டியே அறியத் தருவோம்.

இனி மார்ச் மாதம் வரையில் நாளாந்த தொடர் போராட்டங்களும் நடைபெறும் என்பதையும் உறவுகள் பெரும் திரளாக அணி சேர்ந்து காலத்தை கனிய வைத்து எம் விடுதலையை வென்றெடுக்க ஓயாமல் போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த தொடர் போராட்டத்தின் ஒரு அங்கமாக அமெரிக்க மண்ணில் வெள்ளை மாளிகை முன்பாகவும் நடைபெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

வீழ்வது தோல்வி அல்ல. மீண்டும் எழாதிருப்பதே உண்மையான தோல்வி என்பதை உணர்ந்தவர்களாக தமிழீழம் காணும்வரை எம் போராட்டங்கள் இனி வெற்றி சரிதங்களாக வரலாறு படைக்க வேண்டும்.

மண்டியிடாத எம் இனம் மாண்டு போகாத வீரத்தோடு மீண்டும் போராடி தேசம் வென்றது என்ற சரிதத்தை விரைவில் படைத்தே தீரும். அதுவரை எழுகை கொண்ட தமிழர் போராட்டம் தொடர்ந்தே தீரும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
கனடியத் தமிழர் தேசிய அவை.

1 Response to தாயகம் நோக்கிய நீதிக்கான தொடர் போராட்டங்கள் பற்றிய முதலாவது அறிவித்தல்

  1. Yes. All the Best. Keep it up. Heartiest wishes from most Tamils in India & all over the World. :-)

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com