Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதரகத்தில், துணைத்தூதராக உள்ள தேவயானி கோப்ரகடே (வயது 39), தனது வேலைக்காரப் பெண்ணுக்கு விசா பெற்றதில் மோசடி செய்ததாகவும், தவறான தகவல்களை அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அவர் கடந்த 12–ந்தேதி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு வரச்சென்றபோது, நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன்மீதான புகாரை மறுத்தார். தொடர்ந்து அவர் 2½ லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதிக்கொடுத்து ஜாமீன் பெற்றார்.

இருப்பினும் பெண் என்றும் பாராமல், ஒரு உயர் அதிகாரியை இப்படி அமெரிக்கா அவமதித்தது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பவலை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் கடும் கண்டனம் தெரிவித்தார். தவிரவும், இரு தரப்பு உறவிலும் இந்தச் சம்பவம் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. தூதரக மட்டத்தில் மோதலும் உருவாகி இருக்கிறது.  அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறையிடம் இந்தப் பிரச்சினையை இந்தியா தீவிரமாக எடுத்துச்சென்றுள்ளது.

இதற்கிடையே இந்தியா இந்த விவகாரத்தில்  ஒன்றன் பின் ஒன்றாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அமெரிக்க அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

* டெல்லி அமெரிக்க தூதரகம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க துணைத்தூதரகங்களிலும் உள்ள அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தங்களது அடையாள அட்டைகளை உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் அவர்கள் பெற்று வந்த சலுகைகள் பறிக்கப்படுகின்றன.

* அமெரிக்காவில் உள்ள இந்திய தூதகரங்களில் பணியாற்றுகிற அதிகாரிகள், ஊழியர்களின் சம்பள விவரங்கள், வேலைக்காரர்களுக்கு தரப்படுகிற சம்பள விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

* அமெரிக்க பள்ளிக்கூடங்களில் வேலை பார்க்கிற இந்திய ஆசிரியர்களின் விசா தகவல்கள், அவர்களுக்கு வழங்கப்படுகிற சம்பள விவரம், அவர்களது வங்கிக்கணக்கு தகவல்களைத் தருமாறு அமெரிக்க அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் இறக்குமதி ஒப்புதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

* டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிற வகையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன.

* இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்கள், துணைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய அனுமதிச்சீட்டு திரும்பப்பெற நடவடிக்கை.


இந்த நடவடிக்கைகள் அமெரிக்க அரசுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளன.

மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் அமெரிக்கா பணிந்தது.   இந்திய பெண்  தூதர் தேவயானி கைது செய்யப் பட்டது குறித்து ஆய்வு செய்வதாக அமெரிக்க வெளியுறவு அதிகாரி ஒருவர் கூறினார். இதற்கிடையே காங்கிரஸ் அரசு மக்கள் மத்தியில் தனது  செல்வாக்கை அதிகரிக்கவே  அமெரிக்காவுக்கு  எதிரான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருது கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை  அமெரிக்க  விமான நிலையத்தில் ஷூவை கழற்றச் சொல்லி சோதனையிட்டு   அவமானப்படுத்தியது, இந்திய  தூதர் மீரா சங்கரை மற்றொரு  அமெரிக்க  விமான நிலையத்தில் தோளில் தட்டி உட்கார வைத்தது போன்ற சம்பவங்கள் நடந்த போது  காட்டாத தீவிரத்தை இப்போது காட்டுவது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

0 Responses to இந்தியாவின் அதிரடியால் பணிந்தது அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com