Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காதல், காமம், பதவி, மோதல், படுகொலை சர்வாதிகாரம்…

தற்போதைய வடகொரியாவின் இளம் தலைவர் கிம் யோங் உங் தனது மானாரும் நாட்டின் இரண்டாவது பெரிய தலைவருமான ஜங் சோங் ரஸ்க்கிற்கு மரதண்டனை நிறைவேற்றியுள்ளார்.

தனது மாமனை நாயைவிட கேவலமாக மதித்து கொன்றுள்ளார் என்று ஏ.பி.சி செய்தி தெரிவிக்கிறது.

நேற்று வியாழன் நாட்டின் இராணுவத்தின் உயர் பீடம் நடாத்திய விசாரணைகளின் பின்னர் இவருக்கான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக இவர் பதவி விலத்தப்பட்டு, பொது இடத்தில் கைமாஞ்சி போட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியும் வெளியாகியிருந்தது.

ஊழல், தவறான நிர்வாகம், நாட்டின் அரச இயந்திரத்தை தவறான வழியில் நடாத்தியது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதியற்ற, வெளிப்படைத்தன்மை இல்லாத வடிகட்டிய சர்வாதிகார நாடொன்றின் தீர்ப்பு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது, மேலைத்தேய ஊடகங்களில் இந்தச் செய்தியே தற்போது தூள் கிளப்புகிறது.

வரும் நாட்களில் கொரியப் பிராந்தியம் மிகவும் சூடான பகுதியாக மாறக்கூடிய அபாய அறிவிப்பு இது என்று கூறப்படுகிறது.

நாட்டின் முன்னாள் தலைவரும் தற்போதைய சர்வாதிகாரியின் தந்தையுமான கிம் யோங் இல் 2011 டிசம்பர் மரணமடைய அவருடைய இடத்திற்கு நியமிக்கப்பட்டவரே இன்றைய இளம் தலைவர் கிம் யோங் உங் ஆகும்.
இரண்டு ஆண்டு கால ஆட்சியில் வடகொரியாவை மோசமான இருளுக்குள் தள்ளியுள்ளார்.

மிகவும் இளையவராக இருந்த காரணத்தினால் இவருக்கு வழிகாட்டியாக பணியாற்றியவரே மரணமடைந்துள்ள 67 வயதான மாமன் ஜங் சோங் ரஸ்க்.

இவர் சீனாவிற்கு ஆதரவானவர் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது, ஆனால் நாட்டின் இராணுவ மேல் ஆயத்தின் துணைத்தலைவராக இவர் பதவி வகித்ததோடு புதிய அதிபரின் முக்கிய ஆலோசகராகவும் விளங்கினார்.

வடகொரிய தொலைக்காட்சியான கே.சி.என்.ஏ கூறும்போது இவர் நீண்ட காலமாகவே ஊழல் மிகுந்த தலைவராக இருந்தார் என்றும், முன்னைய தலைவர் நோய்வாய்ப்பட்டு மரணமடையவும் இவரே காரணமென்றும் குற்றம் சுமத்தியது.

அந்த நாட்டில் ஒரேயொரு தொலைக்காட்சியான கே.சி.என்.ஏ அரச ஊதுகுழலாக இருக்கிறது, சுதந்திரமான செய்திகளுக்கு அங்கே இடமில்லை.

கொல்லப்பட்டவரை துரோகி என்றும் நாய் என்றும் தொலைக்காட்சி வர்ணித்துள்ளது, ஆட்சியை பிடிக்க முயன்றார் என்றும் பழி போட்டுள்ளது.

எவர் மீதும் எந்தக் குற்றத்தையும் சுமத்தலாம், எவருக்கும் மரண தண்டனை விதிக்கலாம் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகாரத்தில் இவை சகஜமே.

வடகொரியா என்ற நாடு கடந்த 1948ல் தாபிக்கப்பட்டபோது அதன் தாபகராக இருந்தவர் மறைந்த தலைவர் கிம் உல் சுங்காகும், இவருடைய சகோதரியான கிம் குயோங் குய்யை 1972ம் ஆண்டில் ஜங் சோங் ரஸ்க் மணமுடித்தார், இதுவே அவருடைய மாமன் உறவின் அடிப்படை.

அன்றில் இருந்து வட கொரிய தலைவர்களின் இருத்தலுக்கு முக்கிய தொண்டாற்றிய இவர் நாளாவட்டத்தில் நாட்டின் முக்கியமான நபராக மாற்றமெடுத்தார், ஏறத்தாழ நாட்டின் நிர்வாகமே இவருடைய கரங்களில் இருந்தது.

புதிதாக பதவியேற்ற கிம் யோங் உங் மோசமான சர்வாதிகாரியாக விளங்கினார், இவருக்கு நல்வழி காட்ட வேண்டிய தேவையும் பொறுப்பும் இவருக்கு இருந்தது..

புதிய தலைவர் மூன்று தடவைகள் நீண்ட தூர ஏவுகணை அனுப்பும் முயற்சியை முன்னெடுத்தார் ஒரு தடவை தோல்வியும் அடைந்தார்.

நாட்டின் சகல நிர்வாகமும் தனது பூரண கட்டுப்பாட்டில் வரவேண்டுமெனவும் கருதுகிறார், அவருடைய மனைவி பின்புறத்தில் இருந்து ஆடும் நாடகம் திரைப்படங்களில் வரும் சதிக்காட்சியாக இருக்கிறது.

இந்தப் பெண்மணியால் உருவான காமமும் சதியும் இந்த நிகழ்வுகளில் கலந்துள்ளதை மறுக்க முடியாது.

ஏற்கெனவே ஒரு தடவை மணமுடித்த அந்த நாட்டின் சிறந்த பாடகி றி சூல் யூவை 2012ல் தற்போதைய அதிபர் மணமுடித்தார், இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்தப் பாடகி யாரென்றால் அந்த நாட்டின் உன்காசு இசைக்குழுவில் பாடகியாக இருந்தவர், இவருக்கு போட்டியான இன்னொரு பாடகி குயாங் சோங் வூல்.

இதே இசைக்குழுவில் பாடகியாக இருந்த குயாங் சோங் வூலை இன்றைய தலைவர் கிம் யோங் உங் முன்னர் காதலித்திருந்தார், இந்த இரு காதலிகளுக்குள் இருந்த போட்டி காரணமாக காதலில் வெற்றிபெறாத பழைய காதலியையும், அவருடைய இசைக்குழு உறுப்பினர் 12 பேரையும் கடந்த ஆகஸ்ட் பொது இடத்தில் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார் கிம் யோங் உங்.

இசைக்குழு மோதல், இரு பெண் பாடகிகளின் பொறாமை ஒரு நாட்டின் அரச இயந்திரத்தையே தப்பான பாதைக்குக் கொண்டு சென்றது.

67 வயதான மாமன் இத்தகைய செயல்களை கண்டித்திருக்க வாய்ப்புண்டு..

மேலும் சென்ற சில தினங்களுக்கு முன்னர் சுமார் 78 பேர் நாட்டின் பல இடங்களிலும் பொது இடங்களில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதும், அக்கொடிய காட்சியை பொது மக்கள் பார்வையிட வரும்படி வற்புறுத்தி அழைக்கப்பட்டதும் தெரிந்ததே.

வடகொரிய தலைவர்களின் தப்பான ஆட்சியால் கடந்த 1990 ல் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் பட்டினியில் மடிந்துள்ளார்கள், நாடு ஏறத்தாழ வங்குரோத்தடையும் நிலைக்கு வந்துள்ளது, இருப்பினும் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை, தூரப்பார்வையற்ற நிலையில் உள்ள மதிகெட்ட இளம் சர்வாதிகாரியின் சிறுபிள்ளைத்தனமான அரசியல் இப்போது வெறும் வரட்டு படுகொலைகளாக அரங்கேறத் தொடங்கியுள்ளது.

உலகத்தின் மிகப்பெரிய இராணுவம், 210.000 பேர் கொண்ட போலீஸ், 50.000 பேர் கொண்ட அரசியல் நிர்வாகம், ஆளையாள் நம்பிக்கையில்லாமல் வேவுபார்க்கும் உதவாக்கரை உளவுப்பிரிவென்று அழிவுக்குரிய அத்தனை தப்பிதங்களும் அந்த நாட்டில் தெரிகிறது.

மூன்று தலைமுறையாக தந்தையிடமிருந்து மகன் அதிகாரத்தைப் பெறும் வடகொரிய சர்வாதிகாரம் வளர்த்துவிட்ட சீனாவுக்கு எதிராகவும் திரும்ப வாய்ப்புள்ளது.

கடந்த நவம்பரில் இருந்து கிம் யோங் உங் ஊடகங்களில் தோன்றவில்லை.. மிகவும் அமைதியாக இருந்த அவருடைய மாமன் அடைந்துள்ள மரணம் அந்த நாட்டில் வாழ்வதே மிகுந்த அச்சுறுத்தலாக மாறியிருப்பதைக் காட்டுகிறது.

ஆட்சியாளரை எதிர் கேள்வி கேட்ட இரண்டு இலட்சம்பேர் தற்போது சிறையில் கிடக்கிறார்கள்.

ரஸ்யா சர்வாதிகாரத்திலும், சீன சர்வாதிகாரத்திலும், உலகில் நிலவிய அனைத்து சர்வாதிகார அமைப்புக்களிலும் இரண்டாவது நிலைத் தலைவர் அடையும் அபாய மரணத்தையே ஜங் சோங் ரஸ்க்கும் சந்தித்துள்ளார்.

இவருடைய இரண்டு உதவியாளர் கடந்த மாதம் தூக்கில் போடப்பட்டுள்ளார்கள்.

அலைகள்.com

0 Responses to வடகொரிய தலைவர் ஜங் சோங் ரஸ்க்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com