Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்னா ஹசாரேவின் நெருங்கிய ஆதரவாளரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், மத்தியில் நிலையான ஆட்சியை தருவதற்கு நரேந்திர மோடியால் முடியும் என நம்புகிறேன். திறமையான, பொறுப்பான, அனுபவ ரீதியிலான ஒரு பொதுவான அரசை அவரால் கொடுக்க முடியும். ஒரு வாக்காளனாக எனது வாக்கு நரேந்திர மோடிக்கே செல்லும். இலஞ்சம் இல்லாத அரசை வேண்டுபவர்கள் நிச்சயம் காங்கிரஸை மீண்டும் ஆதரிக்க மாட்டார்கள். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் போராட்டம் முழுக்க காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரானதாகவே அமைந்திருந்தது. காங்க்கிரஸை விட்டால் பெரிய கட்சி பாஜக தான். எனவே பாஜகவுக்கே வாக்களிப்பேன். ஏனைய கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எந்த உபயோகமும் இல்லை. தொங்கு நாடாளுமன்றம் ஏற்பாட்டால் நாட்டின் நிலை மோசமாகிவிடும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கிரண் பேடி பகிரங்கமாக மோடியை ஆதரித்துள்ளதால் அவரை பாஜகவில் சேர அழைக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் கூறியுள்ளார். அதோடு முன்னால் இராணுவத் தளபதி வி.கே.சிங்கும் பாஜகவில் சேரவேண்டும் என சுப்ரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வருடம் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் அமைப்பின் கீழ் அன்னா ஹசாரேவுடன் கைகோர்த்து கிரண் பேடி மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் குழுவினர் வலுவான லோக்பால் மசோதாவை அமலாக்கக் கோரி போராட்டம் தொடங்கினர்.

பின்னர் அன்னா ஹசாரேவிடமிருந்து பிரிந்து முற்றாக அரசியலில் களமிறங்கி ஆம் ஆத்மி எனும் தனிக்கட்சித் தொடங்கிய அர்விந்த் கேஜ்ரிவால் நடந்து முடிந்த டெல்லி சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்று டெல்லி முதல்வராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில் காங்கிரஸ், பாஜக இரண்டுக்கும் எதிரான ஒரு மாற்றுச் சக்தி தேவை. ராகுல் காந்தி அல்லது மோடி எவர் எத்தொகுதியில் நின்றாலும் அவர்களை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமாரா விஸ்வாஸ் தெரிவித்திருந்தார்.

டெல்லியில் எதிர்க்கட்சியாக மாறியுள்ள பாஜகவுக்கும், ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையில் முறுகல் நிலை கடுமையாக முற்றியுள்ள நிலையில் அன்னா ஹசாரேவின் நண்பரான கிரண் பேடி  பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to முட்டி மோதுகிறது ஆம் ஆத்மி - பாஜக : மோடியை ஆதரிக்கிறார் கிரண் பேடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com