Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் நாடாளுமன்றத்  தேர்தலின் போது தகவல் தொழில்நுட்பத் திறனை மேலும் நவீனமயப்படுத்தும் வகையில்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையகம், கூகுள் இணையத்தளத்துடன் கைகோர்க்க முடிவு செய்து, ஆறு மாதங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கூகுளிடம் ஒப்படைக்க இருந்தது.

 இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சர்வர்களை பயன்படுத்திக் கொள்ள அண்மையில் ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஆனால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு இது பாரதூரமான ஆபத்தை கொண்டுவந்து சேர்த்து விடும் என தொழில்நுட்ப வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும் விடுத்த கடும் எச்சரிக்கையை அடுத்து கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சுமார் 80 கோடி வாக்காளர்களின் தகவல்களை கொண்டுள்ள தேர்தல் ஆணைய இணையதளக் கட்டுப்பாடு கூகுள் கைவசம் மாறினால் தேசியப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான என்.எஸ்.ஏ இணையத்தளங்கள் வாயிலாக ஊடுருவி சர்வதேச நாடுகளை வேவு பார்த்ததுடன்   இந்தியாவில் மாத்திரம் ஒரு மாதத்தில் 1350 கோடி தகவல்களை திருடியிருந்தது எனவும் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனை உறுதிப்படுத்தி என்.எஸ்.ஏவின் முன்னாள் ஊழியர் எட்வார்ட் ஸ்னோடன் ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியிட்டதையும் அவர்கள் நினைவு படுத்தினர்.

இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணயர்  வி.எஸ்.சம்பத் தலைமையில் டெல்லியில் கடந்த வியாழக்கிழமை உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையாளர்கள் எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ. ஜைதி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் திட்டத்தைக் கைவிட ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

0 Responses to கூகுள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் முடிவை மாற்றியது இந்திய தலைமை தேர்தல் ஆணையகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com