Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த மூன்றரை ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே இருந்தே செயற்படுகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அணியொன்றை உருவாக்கும் நோக்கம் ஏதும் என்னிடத்தில் இல்லை

என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சில அரசியற்கட்சிகளுக்கிடையில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலொன்று தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. அதில், வடக்கில் புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலேயே ஆராயப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சில அரசியல் குழுக்களுடன் யாழ் நகரில் உள்ள யூரோவில் மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு உண்மையானதேயாகும். ஆனால், அதன் நோக்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாறான ஓர் அமைப்பை உருவாக்குவதல்ல. மிகக் குழப்பமான நிலையில் உள்ள யாழ்ப்பாணத் கள நிலைபற்றிக் கலந்துரையாடும் நோக்கில் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய உட்படப் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களின் கூட்டமே அன்று நடைபெற்றது.

இதில், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, சிறி ரெலோவைச் சேர்ந்த உதயராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த நான் ஆகிய மூவரும், பத்பநாபா (ஈ.பி.ஆர்.எல்.எப்)ஐச் சேர்ந்த சிறிதரனுடன் இணைந்து ஒரு மாற்று அணியை உருவாக்க எண்ணுகின்றோம் என்ற ஒரு தப்பான அபிப்பிராயம் மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. உண்மையில் சிறிதரன் தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

இவர் என்னுடன் நீண்ட காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டவராவார். ஏற்கெனவே கூறப்பட்ட தலைவர்களும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், புத்திஜீவிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தின் கள நிலைமையப் பற்றியே இங்கு பேசப்பட்டது. மாகாண சபையின் அதிகாரங்கள், பிரதேச சபையின் செயற்பாடுகள், சில பிரதேச சபைகளின் வரவு-செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தை கூட்டியோருக்கு நல்லெண்ணம் இருந்ததேயன்றி தீய நோக்கம் ஏதும் இருக்கவில்லை. மூன்றரை ஆண்டுகளாக எத்தனை திட்டமிட்ட புறக்கணிப்பு, கழுத்தறுப்புக்களை எல்லாவற;றையும் பொறுத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தொடர்ந்து கட்டிக்காத்தே வருகின்றேன். ஆனால் அங்குள்ளவர்களிலும் பார்க்க என்னிடம் எதுவும் இல்லாது போனாலும் என்னிடம் நாட்டுப்பற்று, இனப்பற்று, விசுவாசம் அத்தனையும் நிறைய உண்டு.

இன முரண்பாட்டுக்கான தீர்வுகாணும் விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் ஏகபோக உரிமையானது அல்ல. அதில் அக்கறையுடைய எவரும் பங்களிப்பை நேர்மையாகச் செய்வதில் தவறில்லை. எது எப்படி இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாறாக எந்த அமைப்பபையும் உருவாக்கும் எண்ணம் எனக்கு இல்லை. தொடர்ந்தும் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே இருந்து செயற்படுகின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பிற்கு எதிரான அணியைத் தோற்றுவிப்பது நோக்கமல்ல: வீ.ஆனந்தசங்கரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com