Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தில் கடந்துபோன 2013ம் ஆண்டு முக்கியமான சில காலடிகளை முன்னோக்கி வைத்திருக்கின்ற நிலையில், மலர்ந்துள்ள 2014ம் ஆண்டிலும் சிங்களத்தை மேலும் தனிமைப்படுத்தியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் நாம் மேலும் சில அடிகளை முன்னோக்கி வைப்போம் என நா.க.த அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுவிபரம்,

உலக மக்கள் அனைவரும் மலர்ந்துள்ள புத்தாண்டை நம்பிக்கையுடனும் மகிழ்வுடனும் வரவேற்றிருக்கும் இவ்வேளையில், தமிழ் மக்கள் அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

இப்போது மலர்ந்துள்ள புத்தாண்டைத் தொடர்ந்து தைத்திங்கள் முதல் நாளன்று இடம் பெறும் தைப்பொங்கல் தமிழர்திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வுகள் ஆகும்.

தை மாதம் தமிழர் பண்பாட்டில் முக்கியமானதொரு மாதம். வாழ்வினை புதியதொரு நம்பிக்கையுடன் மக்கள் எதிர் கொள்ளும் காலம்.

2014 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் தேசத்துக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சுபீட்சம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இப் புதிய ஆண்டை இத்தருணத்தில் வரவேற்றுக் கொள்வோம்.

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தில் நிறைவடைந்து போன 2013ம் ஆண்டு முக்கியமான சில காலடிகளை முன்னோக்கி வைத்திருக்கிறது.

அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசு மேலும் தனிமைப்படுத்தப்படும் நிலை மனித உரிமைகள் சபைக்கூட்டத் தொடரின் ஊடாகவும், நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகள் மாநாடு ஊடாகவும் உருவாகியிருக்கிறது.

சிங்களம் புரிந்த தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பு மேலும் ஆதாரங்களுடன் அனைத்துலக அரங்கில் அம்பலமாயிருக்கிறது.

ஈழத் தமிழர் தேசத்தின் நீதி கோரும் போராட்டத்தில் தமிழகம் குறிப்பாகத் தமிழக மாணவர்கள் பெரும் சக்தியாய் உருத்திரண்டெழுந்து புதியதொரு நம்பிக்கையை நம் அனைவருக்கும் தந்த ஆண்டாகவும் 2013 ம் ஆண்டு அமைந்திருக்கிறது.

“தமிழீழ தேசம்” எனும் கோட்பாட்டை நன்கு வலியுறுத்தும் கொள்கைகளின் அடிப்படையில், பாரம்பரிய வரலாற்றுத் தகமையில் தமிழீழ மக்களுக்கு உள்ள தன்னாட்சி உரிமையினை, இறைமையை வலியுறுத்தும் இருபத்தியொரு பிரிவுகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்ட ஆண்டாகவும் அமைந்திருந்தது.

தாயகத்தில் இடம் பெற்ற வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிங்கள அரசின் மீதான தமது வெறுப்பினை தாயக மக்கள் துல்லியமாக வெளிப்படுத்தி உலகின் கவனத்தினை ஈர்த்த ஆண்டாகவும் 2013 அமைந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை தேர்வு செய்யப்பட்டு அதன் முதலாவது அமர்வையும் நாம் 2013 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடாத்தியிருந்தோம்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரான காலத்தில் தமது குற்றங்களை எல்லாம் மறைத்து தமிழ் மக்களை நிரந்திர அடிமைகளாக்க வேண்டும் என்ற சிங்களத்தின் கனவு ஒவ்வொரு ஆண்டு கழியும் போதும் கலைக்கப்படுவதனை காலம் நமக்குக் காட்டி நிற்கிறது.

இதேபோல் 2014 ஆம் ஆண்டிலும் சிங்களத்தை மேலும் தனிமைப்படுத்தியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் நாம் மேலும் சில அடிகளை முன்னோக்கி வைக்க வேண்டும்.

நாடுகடந்த தமிழழ அரசாங்கத்தின் 2014ம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் நான் 2013 ஆண்டு ஆண்டு மாவீரர் நாள் அறிக்கையில் சுட்டிக்காட்டிய, தமிழீழத் தனியரசுக்கான அனைத்துலக ஆதரவை வென்றெடுத்தல், சிங்களத்தின் தமிழர் மீதான இனஅழிப்புக்கு நீதி கோரும் போராட்டங்களை முன்னெடுத்தல், தாயக மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தல் ஆகிய முப்பரிமாண மூலோபாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்பதனையும் இத் தருணத்தில் மக்களுக்கு அறியத் தருகிறேன்.

புலம்பெயர் தமிழ் மக்களைப் பலம்மிக்க மக்களாகக் கட்டியெழுப்பத் துணை செய்யக்கூடிய செயற்பாடுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2014ம் ஆண்டில் முன்னெடுக்கவுள்ளது.

நமது 2014ம் ஆண்டு செயற்பாடுகளுக்கு வலுச் சேர்க்கத் தக்க வகையிலான செயலமர்வுகளையும் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் முதலாவது அமர்வின் போது நாம் கூட்டியிருந்தோம்.

இச்செயலமர்வுகளின் ஊடாகக் கிடைத்த பெறுபேறுகளையும் பல்வேறு வள ஆலோசனை நிபுணர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் புதிய கட்டமைப்புக்களையும் தற்போது வடிவமைத்துள்ளோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை, துறைசார் கட்டமைப்புகள், நாடுசார் கட்டமைப்புகள், கொள்கை வடிவமைப்புக் கட்டமைப்புகள் உட்பட்ட பல்வேறு விடயங்களை நாம் எதிர்வரும் தைத்திருநாள் அன்று மக்களுக்கு அறியத் தரவுள்ளோம்.

மலர்ந்துள்ள இந்த 2014ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மேலும் முன்னோக்கி நகர்த்தும் பணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தமது கரங்களை இணைத்துக் கொள்ளுமாறு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை நாம் உரிமையுடன் வேண்டுகிறோம் என்றுள்ளது.

0 Responses to புதிய ஆண்டில் சிங்களத்தை தனிமைப்படுத்துவதிலும் தமிழீழ விடுதலையை முன்னெடுப்பதிலும் நாம் முன்னேறுவோம்: வி.உருத்திரகுமாரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com