Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழ அரசியல் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர், பின்னர் என்று பிரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தின் முடிவின் பின்னரான போக்கு எவ்வாறு இருக்கின்றது ? இதற்கு முன்னதாக கடந்தகாலங்களில் என்ன நடந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1948 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் வரையில் அறவழியில் போராடி, எங்களது பிரச்சினைகளைத் தீர்க்கலாம், சிங்களவனுடன் சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கையுடன், இலங்கைத் தீவினுள் இரண்டு தேசிய இனமாக வாழலாம் என்று 27 ஆண்டுகள் கடந்தன.

அதன் பின்னர் சிங்களவனுடன் சேர்ந்து வாழ முடியாத நிலை வந்தது. 1976 ஆண்டுக்குப் பின்னர் தந்தை செல்வா தனித் தமிழீழத்துக்கான தீர்மானம் போடுகின்றார், பிரபாகாரன் ஆயுதத்தை கையில் எடுக்கிறார். 1976 ஈழவிடுதலைப் போராட்டத்தில் 1976 ஆம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டு. அதுவரையில் கொள்கையும், வழியும் வேறாக இருந்தது. ஒரே இலங்கைக்குள் தீர்வு என்பதும் அறவழியாகவும் இருந்த போக்கு மாற்றமடைந்து தனிநாடு என்ற கோரிக்கையும் வழியும், ஆயுதப் போராட்டமாக மாறியது. எனவே இந்த 1976 ஆம் ஆண்டு ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கிய புள்ளி.

இந்த மாற்றத்துடன் 33 ஆண்டுகள், 2009 ஆம் ஆண்டு வரையில் போராடினோம். அதன் பின்னரான சர்வசே அரசியல் சூழலை, சிங்கள இனவெறி அரசு பயன்படுத்தியதைக் கொண்டு எங்களது ஆயுதப் போராட்டம் ஒரு களத்தில் முறியடிக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் ஒரு களத்தில் முறியடிக்கப்பட்டது என்பதனூடாக எதைச் சொல்கின்றீர்கள் ? புலிகள் தோல்வியடையவில்லை அந்த நிகழ்சியை புலிகளின் போராட்டம் ஒன்று தோல்வி கண்டது என்று சொல்ல வேண்டுமே தவிர, புலிகள் தோல்வி கண்டார்கள் என்று சொல்லக் கூடாது.

2009 இற்குப் பின்னரும், சிங்கள ஆட்சியாளர்களின் மனநிலை, 2009 ஆம் ஆண்டு முன்பு என்ன மனநிலையே அதே மனநிலையில்தான் இருக்கின்றது. பேச்சால், உடன்படிக்கையால், கேட்டுக் கொள்வதால் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதைத்தான் 2009 ஆம் ஆண்டு எங்கள் போராட்டம் நிறுவியிருக்கின்றது.

சிங்களவன் அடிக்கே அடி பணிவான் இன்றைக்கும் அவர்களின் நிலை அதுதான். புத்தனின் சொல்லையே கேட்காத சிங்களவன் மன்மோகனின் சொல்லைக் கேட்பான், ஒபாமாவின் சொல்லைக் கேட்பான், கமரூனின் சொல்லைக் கேட்பான் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.
புலிகளின் 33 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் எழுதிய உண்மை என்னவென்றால், சிங்களவன் அடி ஒன்றுக்கே செவி கொடுப்பான் என்பதுதான். இதை நான் போர் வெறியோடோ, இனவெறி உணர்வோடோ சொல்லவில்லை. சிங்களவன் அடிக்குத்தான் அடி பணிவான் என்பதை எவ்வாறு சொல்கின்றீர்கள்?

இதற்கு குடியேற்றத்தை மட்டும் உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றேன்.  வெள்ளைக்காரர்கள் இலங்கையைக் கைப்பற்றியபோது இலங்கைத் தீவில் இரு தேசிய இனங்களின் இருவேறு நிர்வாகங்கள் இருந்தன. 1833 இல் இருவேறு நிர்வாகங்களையும் ஒரே நிர்வாகத்தினுள் கொண்டு வருவதற்காக கோல்புறூக் ஆணைக்குழு நிறுவப்பட்டது. கோல்புறூக் ஆணைக்குழு தனது அறிக்கையில் தமிழர்களின் தாயகம் 26 ஆயிரத்து 500 சதுர கிலோமீற்றர் என்று தெட்டத்தெளிவாகச் சொல்லுகின்றது. நிலப்பறிப்பின் ஆரம்பம் 1901 இல், சிங்களவர்கள் வெள்ளைக்காரர்களை மடக்கி, நிர்வாக வசதிக்காக ஒன்றாக அமைக்கப்பட்ட இலங்கையை 9 மாகாணங்களாகப் பிரிக்கின்றார்கள். அப்போது வடக்கு, கிழக்கு என்று இரண்டு மாகாணங்கள் தமிழர்களின் மாகாணங்களாகவும், ஏனைய 7 மாகாணங்கள் சிங்களவருடையது என்றும் ஒதுக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எல்லை 26 ஆயிரத்து 500 சதுரக் கிலோமீற்றராக இருந்திருக்க வேண்டும். ஆனால் எங்களது தாயகத்திலிருந்து 7 ஆயிரத்து 500 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பை எடுத்து சிங்களவர்களின் 7 மாகாணங்களுடன் இணைத்தார்கள். அப்போதே நிலப்பறிப்பு தொடங்கப்பட்டு விட்டது. எமது தாயக மண்ணிலிருந்து 7 ஆயிரத்து 500 சதுரக் கிலோமீற்றரைப் பறிகொடுத்து விட்டோம்.

சிங்களக் குடியேற்றம்

1948 இல் வெள்ளையர்கள் வெளியேறுகின்றார்கள். உடனடியாக டி.எஸ்.சேனநாயக்காக சிங்களக் குடியேற்றத்தை திட்டமிட்டு முடுக்குகின்றார். 1976 வரை தந்தை செல்வா, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, 27 ஆண்டுகள் சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தாரகள். குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
இந்த 27 வருடங்களில் மேலும் கந்தளாய், இங்கினியாகல, அம்பாறை, சேருவாவல, பதவியா என்று மேலும் 7 ஆயிரத்து 500 சதுரக் கிலோமீற்றர் சிங்கள நாடாகிப் போகின்றது. 1901 இல் மாகாணப் பிரிப்பின் போது 7 ஆயிரத்து 500 சதுரக் கிலோமீற்றரும், அறப்போராட்டக் காலத்தில் 7 ஆயிரத்து 500 சதுரக் கிலோமீற்றருமாக நாம் மொத்தம் 15 ஆயிரம் சதுரக் கிலோமீற்றரை 1976 ஆம் ஆண்டு வரையில் சிங்களக் குடியேற்றத்தினால் இழந்து விட்டோம்.

15 ஆயிரம் சதுரக் கிலோமீற்றர் என்பது நமது தாயகத்தின் சரி அரைவாசியிலும் அதிகமான நிலப்பரப்பு. எஞ்சிய 11 ஆயிரத்து 500 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பில் நின்றுதான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தி தன்னுடைய போரைத் தொடங்கினார். அந்தப் போர் 33 ஆண்டுகள் நடைபெற்றது.

வரலாறு

இலங்கையின் தமிழர்களின் வரலாறு மூன்று கட்டங்களைக் கொண்டது. பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம் போன்றவர்கள் வெள்ளைக்காரர்களுடன் பேசி உரிமை பெற முயன்ற காலம். தந்தை செல்வா 27 ஆண்டுகள் அறப்போராட்டம் நடத்தி தமிழர்கள் உரிமையைப் பெற முயன்ற காலம். இறுதியாக 33 ஆண்டுகள் பிரபாகரன் ஆயுதமேந்தி நடத்திய போராட்டம் இந்த மூன்று கால கட்டங்களில் நாம் ஒன்றை அவதானிக்க வேண்டும். பொன்னம்பலம் இராமநாதன் போன்றவர்கள் பேசி தீர்வைப் பெற முயன்ற காலத்தில்தான் எமது தாயகத்தில் முதன் முதலாக 7 ஆயிரத்து 500 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பை இழந்தோம்.

இரண்டாவது தந்தை செல்வா அறவழிப் போராட்டம் நடத்திய காலத்தில்தான் மேலும் 7 ஆயிரத்து 500 சதுரக் கிலோமீற்றரை இழந்தோம்.
ஆனால் 1976 ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரன் ஆயுதமேந்திப் போராட்டம் நடத்திய காலத்தில் தொடர்ந்து 33 ஆண்டுகள், தமிழர்கள் தாயகத்திலிருந்து ஒரு அங்குல நிலத்தை தன்னும் சிங்களவர்களால் தொட முடியவில்லை. இன்று 2009 ஆண்டுக்குப் பிறகு, உலகின் பார்வையில், உலக மனித உரிமைகள் அமைப்புகளின் பார்வையில், ஐ.நா அமைப்புகளின் பார்வையில் இலங்கை இருக்கின்ற காலத்திலும் சிங்களக் குடியேற்றங்கள் அசுர வேகத்தில் தமிழர் தாயாக நிலப்பரப்பில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இது எதைக் காட்டுகின்றது என்றால் அவனுடன் பேச்சுவார்தை நடத்தினால், சிங்களவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டான். அடி ஒன்றுக்கே அவன் அசைந்தான் என்பதைத்தான் காட்டுகின்றது. தற்போது எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 500 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பை பறித்தெடுப்பதற்கு அவர்களுக்கு 10 ஆண்டுகள் போதுமானது. மிகக் கொடுமையான காலகட்டத்தை நாங்கள் தாண்டிக் கொண்டிருக்கின்றோம்.

சிங்களவர்களை மீண்டும் அடித்தல் என்பதுதான் தீர்வாகும் என்கின்றீர்களா ? அடிக்கு அடிபணிந்த அரசுகள் நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன், நான் போர் வெறி கொண்டு பேசவில்லை. அடி ஒன்றுக்குத்தான் யூகோஸ்லோவியா அரசு பணியும் என்பதால் தான் கொசோவோ, பொஸ்னியா போன்ற போராட்டங்கில் எல்லாம் உலகநாடுகள் நேட்டோ படைமூலம் தலையிட்டு சிக்கலைத் தீர்த்தன.

அடி ஒன்றுக்கே பாகிஸ்தான் அடிபணியும் என்பதால்தான் இந்தியா, பங்களாதேஷpல் ஆயுதத்துடன் களமிறங்கியது. இன்று இலங்கையின் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு வழிமுறைகளே இருக்கின்றது என்று நான் கருதுகின்றேன்.

இரண்டே வழி உலக நாடுகள் பொஸ்னியா, கொசோவா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் முடிவைக் கொண்டு வந்தததைப் போல் இலங்கையிலும் தலையிடுவது.

அல்லது தீமோர், தெற்குசூடான், போன்ற நர்டுகளில் வாக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு விடுதலைப் பெற்றுக் கொடுத்ததைப் போல், தமிழீழ மக்களுக்கும் செய்வது. இதை உலகம் செய்ய வேண்டும் என்று நான் கேட்க காரணம், நீதியான அறம் தழுவிய தமிழீழ மக்களின் ஆயுதப்போரை உலகம்தான் முடிவுக்கு கொண்டு வந்தது. அதனால்தான், இலங்கைத் தீவில் தமிழீழ தேசியன இனம் முழுமையாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை உலகம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

வாக்கெடுப்பு சிறந்தது

உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே தமிழீழ தனியரசுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படுவதே போர் அமைப்பு முறையை விட சிறப்பானதாக இருக்கும். அதை உலக நாடுகள் முடிவு செய்தால் சரி. ஆனால் உலக நாடுகளின் எந்த அணுகுமுறையும் சிங்கள அரசிடம் எடுபடவில்லையென்றால் தமிழீழ மக்கள் தாங்களே அந்தப் போராட்டத்தை ஆயுதமேந்தி முன்னெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

போராட்டம் ஈழத்தில் சாத்தியமா?

ஒரு இனம் கடைசி வரை போராடும். குர்ஷித் இனத்தினுடையதோ, பலஸ்தீனத்தினுடையதோ போராட்டம் இன்னும் முடியவில்லை. நாம் அடிமையாக இருக்க முடியாது. கடைசி மனிதன் மட்டும் போராடிக் கொண்டே இருப்பான். எந்த இனமும் தனது விடுதலைக்காக போராடியே தீரும். தமிழீழம் இலங்கையின் இரண்டு தேசிய இனங்களின் நாடு என்பதை இலங்கையை அடிமைப்படுத்தி விடுதலை பெற்றுக் கொடுத்த பிரிட்டிஷ் தேசமே ஒப்புக் கொண்டிருக்கின்றது. இன்று இலங்கை ஒரே ஒரு தேசிய இனத்தின் நாடுதான் என்பதை நிலைநிறுத்த சிங்கள அரசு தீவிர வெறியுடன் செயற்படுகின்றது.  2009 ஆம் ஆண்டு வரை தமிழீழம் எங்கள் தாயகம் என்பதை எங்கள் தாயக மண்ணில் சொல்லக் கூடிய நிலைமை இருந்தது. இன்று தமிழீழம் எங்களது தாயகம் என்று சொல்லும் தமிழன் தாயகத்தில் இருக்க முடியாது.

யார் இனவெறியர்கள்?

எமது  தாயகத்தின் பெயரை உச்சரிக்க முடியாது என்னும் கொடுமையை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் என்றும் வெறியர்களாக இருக்கவில்லை. சிங்கள மொழியை வேண்டாம் என்றோ, சிங்கள சிறீ;லங்கா என்ற ஒன்று இல்லையென்றோ, சிங்களவனைக் கொல்லுவோம் என்றோ நாங்கள் ஒரு போதும் பேசியதில்லை. அவர்கள்தான், தமிழை ஒழித்துக் கட்டுவோம், தமிழீழம் என்ற ஒன்று இல்லை, தமிழனைக் கொல்லுவோம் என்கின்றார்கள். நாங்கள் எங்களது தாயக விடுதலைக்காக போராடுகின்றோம். வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னரான ஈழத்து நிலைப்பாடுகளை நீங்கள் எவ்வாறு அணுகுகின்றீர்கள்?

ஒதுக்கப்படும் கிழக்கு

2009 ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தை தள்ளி வைத்துப் பேசத் தொடங்கியிருக்கின்றார்கள். வடக்கு மாகாணம், வடக்கு மாகாணம் என்றே பேசுகின்றார்கள். வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்தவுடன், தமிழர்களின் முழுமையான விடுதலை கிடைத்து விட்டதைப் போல் கூத்தாடுகின்றார்கள். தங்களுடைய நாட்டை விட்டு முழுமையாக வெளியேறிய பின்பும் இஸ்ரேல், தனது நாடு என்று இஸ்ரேலியர்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். அரபாத்தும் பலஸ்தீன மண்ணை விட்டு வெளியேறிய போதும் பலஸ்தீனம் தனது தாயகம் என்று சொன்னார். சிங்களக் குடியேற்றத்தின் காரணமாக தாயகத்தின் ஒரு சில பகுதிகளைப் பறிகொடுத்தமையால் அதனை எனது தாயகமில்லை என்று சொல்ல எந்ந நியாயமும் இல்லை.

வரலாற்றின் அடிப்படையிலேயே ஒரு தாயகம் அமைகின்றது. அரசியல் சூழ்சிகளினாலோ அல்லது பின்னால் ஏற்பட்ட விளைவுகளாலோ ஒரு தாயம் மாறுவதில்லை. என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமாக, நிலம் அமைப்பை மாற்றியமைக்கும் இந்த வேளையில், இன அழிப்பு முழுமையாக நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது.

தமிழீழம் தமிழர் தாயகம்

தந்தை செல்வா வட்டுக் கோட்டையில் செய்த துணிச்சலான செயலை, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழத்தில் செய்ய வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக மிகப்பெரிய மாநாடொன்றை தமிழீழத்தில் நடாத்தி, தமிழர் தாயகத்தை இலங்கை அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்ற வேண்டும். அரசியலமைப்பில் ஒப்புக் கொள்ள வேண்டும். புலிகள் மட்டுமல்ல தமிழீழத்திலுள்ள இந்த நாளில் சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்ட பிற ஆயுதக் குழுக்கள் கூட திம்பு மாநாட்டில் ஒப்புக் கொண்டதுதான் தமிழீழ தாயகக் கொள்கை. இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த நேரத்தில் நினைவுறுத்துகின்றேன்.

தமிழீழத்துக்கு என்ன தீர்வு, அது கூட்டாட்சியா, சமஷ்டியா என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பது அரசியலமைப்பில் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் எனது இந்தக் கோரிக்கைக்கு ஒரு போதும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இன்றுள்ள அரசியல் சூழலை உலக நாடுகளுக்கு தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுவதற்காக தீர்மானத்தை கூட்டமைப்பு கொண்டு வரவேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன்.

தவறிழைத்த இந்தியா

ஏற்கனவே இந்திய அரசு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்பதை 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தில் சொல்லியிருக்கின்றது. அந்த சொல்லாட்சியில் இந்திய அரசு தவறிழைத்திருக்கின்றது. இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைத்து தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொன்னீர்களா இல்லையா?

மதுரை திருச்சி இணைப்பு என்றா சொன்னீர்கள். இப்போதாவது தாயகத்தை தமிழீழம் என்று இலங்கை அரசை ஒப்புக் கொள்ள வைப்பதற்கு இந்தியா முயல வேண்டும். இந்தியா அவ்வாறு செய்வதாக இல்லை. இவ்வாறு செய்வதால் சிங்களவர்களுக்கு கோபம் வரும் என்கின்றார்கள். சிங்களவர்களுக்கு கோபம் வரும் என்பதால் தமிழர்கள் தங்கள் தாயகத்தை இழக்க முடியாது. இலங்கையில் நடந்தது இனஅழிப்புத்தான் என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்று நீங்கள் கருதுகின்றீர்களா ?

இனஅழிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்

தொடக்கத்தில் இருந்தோ ஏன் இற்றை வரை கடந்த 5 ஆண்டுகள் நடந்ததையுமோ இன்னும் இனஅழிப்பு நடவடிக்கை என்று ஒப்புக் கொள்ளவில்லை. ஐ.நா மன்ற ஆய்வு அறிக்கை அது போர்க்குற்றம் என்றது. மனித உரிமை ஆணையகத் தீர்மானம் அதை மனித உரிமை மீறல் என்றது. இரண்டிலும் இலங்கையின் நடைபெற்றது இனஅழிப்பு என்று குறிப்பிடப்படவில்லை.

போர்க்குற்றம் என்பது முள்ளிவாய்க்காலை சிறுமைப்படுத்துவதாக அமைகின்றது. கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள். சிங்களப் படைவெறியர்களால் கொல்லப்பட்டார்கள். இதற்கு முன்பும் 62 ஆண்டுகள் சிங்களப் படைகளால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பின்பும் கடந்த 5 ஆண்டும் சிங்கள ஆட்சியாளர்களால் இன அழிப்பு நடவடிக்கைகள் தாயகத்தில் தொடர்கின்றது. தொடர் இனஅழிப்பு நடவடிக்கையே நாம் தாயகத்தில் பார்க்கின்றோம்.

இது உலகத்துக்கு தெரியாதென்ன ? மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல் என்றது. இலங்கையில் சிங்கள, தமிழ் மனிதர்கள் இருக்கின்றார்கள். எந்த மனிதனுடைய உரிமைகள் மீறப்பட்டன. பறித்தெடுக்கப்பட்டன. உலகம் முழுப் பூசணிக்காயை சோற்றினுள் புதைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

டர்பிளினிலும், ஜேர்மனியிலும் நடந்து முடிந்த தீர்பாயம் இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பு நடவடிக்கைதான் என்று சொல்லியிருப்பதை ஜ.நா போன்ற அமைப்புக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். இதனடிப்படையில்தான் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்தை நானும் முன்வைக்கின்றேன். பெரும் துயர்படிந்த முள்ளிவாய்க்கால் தமிழினத்தின் முடிவாகவே பலரும் பார்க்கின்றனர். முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்து விட்டதா ?

முள்ளிவாய்க்கால் முடிவல்ல

இன்று 2009 ஒரு முடிவு என்று சொன்னார்கள். ஆனால் அதை நான் அப்போதே திருப்பம் என்று சொன்னேன். தமிழீழ சிக்கல் அதற்கு முன்பு உலக அரங்கிற்கு வந்ததில்லை. முள்ளிவாய்க்கால்தான் தமிழீழ சிக்கலை உலக அரங்கிற்கு கொண்டு வந்தது. விடுதலைப் போர் உலகில் எல்லா இடங்களிலும் நடந்தது. போர்களத்தில் வீரர்களும் மக்களும் ஒன்றாக நின்ற போர்க்களம் இருந்ததில்லை. வீரர்களும் மக்களும் ஒன்றாக நின்ற போர்க் களம் முள்ளிவாய்க்கால்தான்.

முள்ளிவாய்க்கால் போரின் விளைவு முதல் தடவையாக, ஈழத் தமிழரின் போரை சர்வதேச போராக மாற்றியமைத்தது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. உலகின் கண்முன், தமிழர் போரைக் கொண்டு வந்த போராக முள்ளிவாய்க்கால் அமைந்தது. முள்ளிவாய்க்கால் வரையில் விடுதலைப் புலிகளும், உலக நாடுகளிலிருந்த விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுமே பங்காளர்களாக இருந்தார்கள். ஆனால் உலகு அனைத்திலும் வாழ்ந்த ஆற்றல் மிக்க அறிவாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் என்று அனைவரும் இணைந்து முன்னெடுக்கின்ற போராக முள்ளிவாய்க்கால் அவர்களுக்கு பொறுப்பு வழங்கியிருக்கின்றது.

தமிழீழத்தில் நடைபெற்றது இனஅழிப்புத்தான் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்ற அடிப்படையானதாக இருப்பது முள்ளிவாய்க்கால் போர்தான். ஆகவே முள்ளிவாய்க்கால் திருப்பம்தானே, முடிவு அல்ல.இந்திய அரசின், இலங்கை தொடர்பான கொள்கை 2009 இற்குப் பின்னர் மாற்றம் கண்டுள்ளதா?

இந்திய அரசு மாற வேண்டும்

இந்திய அரசியலில், இலங்கை குறித்த கொள்கையில் மாற்றம் வரவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். தமிழ் நாட்டில் வை.கோ, நெடுமாறன் போன்றவர்கள் இந்தக் கருத்தை திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொல்லி வருகின்றார்கள். வட இந்தியாவில் கூட இப்போது சிறு மாற்றம் தென்படுகின்றது. வட இந்திய அரசியல்வாதி பஷ;வான், புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம் ஜெர்மலாணி போன்றவர்கள் தமிழீழத்தில் நடைபெற்றது இனஅழிப்புத்தான் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஒப்புக் கொண்டது மாத்திரமல்ல பேசவும், போராடவும் முற்பட்டிருக்கின்றார்கள்.

தமிழ் நாட்டில் முன்பிருந்ததை விட ஆயிரம் மடங்கு எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைக்காக மிகக் கொடுமையான சாவான தீக்குளித்து சாவைத் தழுவியிருக்கின்றார்கள். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சியானது, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏற்பட்டதை விட பன்மடங்கு அதிகமாக ஏற்பட்டிருந்தது.

இதுவரை தமிழக சட்டமன்றத்தில் தமிழீழ விடுதலை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதில்லை. இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணை, உலகளாவிய தமிழர்களிடையே தமிழீழத்துக்கான கருத்துக் கணிப்பு போன்ற தீர்மானங்கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியிருப்பது விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி நிலையையே காட்டுகின்றது. இது கூட முள்ளிவாய்க்காலின் விளைவுதான் என்பதை மறந்து விடக்கூடாது.

எதிர்காலத்தில் இந்திய அரசியல் மாற்றம் நிகழும் சூழலில், தமிழ் மக்களுக்கு சார்பானதாக மாறக் கூடும். இந்திய அரசை, இலங்கை அரசு அண்மைக்காலமாக தாழ்வாகவே நடத்தி வருகின்றது. இலங்கை அரசு, சீனாவின் பக்கம் சார்ந்து இருக்கின்றது என்பதை இந்திய அரசு உணரவேண்டும்.

தமிழர்கள்தான் இந்தியாவின் பக்கம்

இந்திய அரசு இன்னும்தான் இலங்கை அரசை ஏன் புரிந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை. இலங்கையில் எந்தச் சிங்களவரிடமாவது கேளுங்கள், நீங்கள் இந்தியாவின் பக்கமா சீனாவின் பக்கமா என்று. அவர்கள் சீனாவின் பக்கம் என்று சொல்லுவார்கள். முஸ்லிம்களிடம் கேளுங்கள், நீங்கள் இந்தியாவின் பக்கமா அல்லது பாகிஸ்தான் பக்கமா என்று அவர்கள் சொல்லுவார்கள் பாகிஸ்தான் பக்கம் என்று. அங்குள்ள தமிழர்கள் மாத்திரம் இந்தியாவின் பக்கம் என்று சொல்லுவார்கள். இதையாவது இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். எங்களையும் அழித்தொழித்தால் இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கையில் யாரும் இருக்க மாட்டார்கள்.

தமழீழத்தில் சீன சார்பு கலசாரமோ, பாகிஸ்தான் சார்பு கலாசாரமோ இல்லை. ஆனால் இந்திய மண்ணின் கலாசாரம் உண்டு. தமிழர்களின் பழம்பெரும் தாயகமாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா விளங்கியது என்று அம்பேத்கர் கூறுகின்றார். இந்து மதமும் அழிக்கப்படுகின்றது

பாரதிய ஜனதாக் கட்சி தமிழீழ மக்களின் அழிவு நிலை குறித்து போதிய கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்களின் மொழி இனம் மட்டுமல்ல அவர்களின் பழம் பெரும் சமயமான இந்து சமயமும் தமிழீழத்தில்தான் இருக்கின்றது.

2 ஆயிரத்து 76 இந்துக் கோயில்கள் சிங்களப் படைக் குண்டு வீச்சில் இலக்காகி அழிக்கப்பட்டது. இந்து மதமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. வடக்கில் நேபாளம், தெற்கில் தமிழீழம். இரண்டு நாடுகளையும் இந்தியா இழந்து கொண்டிருக்கின்றது.

சிங்கள இனம் தோன்றுவதற்கு முன்பே ஈழத்தில் ஐந்து ஈச்சரங்கள் தோன்றியிருந்தன. கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், சந்திரமௌலீஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம்.  சுந்திரமௌலீஸ்வரம் முற்றுமுழுதாக சிங்கள மயமாகி அழிந்து விட்டது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற கோணேஸ்வரத்தின் சூழலில் புத்தர் சிலை எழுப்பப்பட்டுள்ளது. முன்னேஸ்வரம் தமிழீழத்துக்கு வெளியே சிக்கிக் கொண்டது. கேதீஸ்வரத்தில் இப்போது பெரியதொரு புத்தர் சிலை எழுப்பப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டும் என்று கோரியிருப்பதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ? தமிழீழத்தை கைவிடுவது வெட்கக்கேடானது தமிழ் நாட்டு அரசே தனித்தமிழீழத்துக்கான வாக்கெடுப்புக்கு கோரும் போது, தமிழீழ விடுதலைக்காக காலம் முழுக்க போராடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழத்தை கைவிடுகின்றோம் என்று சொல்வது வெட்கக் கேடானது.

0 Responses to கூட்டமைப்பு தமிழீழத்தை கைவிடுகின்றோம் என்று சொல்வது வெட்கக் கேடானது - காசி ஆனந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com