எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் இந்திய - இலங்கை கடற்படையினரால் கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், அவர்களின் படகுகள் மற்றும் இயந்திரங்களும் மீளவும் கையளிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அண்மையில் புதுடில்லியில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மீனவர்களை கைது செய்தபோது கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் இயந்திரங்களை நாளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) முதல் திரும்பவும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இருநாடுகளின் மீனவர்களும் கடல் எல்லை தொடர்பான சரியான புரிந்துணர்வுடையவர்களாக செயற்படுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மீனவர்களுக்கு புதிய தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய- இலங்கை கடற்றொழிற்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையின் போது இந்து சமுத்திரத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்தல்- வங்காள விரிகுடாவில் மீனின் வளர்ச்சிக்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்றவை தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to இந்திய- இலங்கை மீனவர்களின் மீன்பிடி இயந்திரங்கள் நாளை முதல் விடுவிக்கப்படும்: ராஜித சேனாரத்ன