Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவில் சிவபூஜைக்குள் கரடி புகுந்தது

பதிந்தவர்: ஈழப்பிரியா 04 January 2014

அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவின் இராஜதந்திரத் திறமைக் குறைவும், ரஸ்ய அதிபர் புற்றினின் தூரப்பார்வையற்ற அரசியலும் மத்திய கிழக்கை மீண்டும் மோசமான சூழலுக்குள் தள்ளியுள்ளது.

நேற்று சிரியாவில் ஆரம்பித்த ஐ.எஸ்.ஐ.எல் என்ற அல்குவைடா தொடர்புடைய பயங்கரவாதக் குழுவினருடைய தாக்குதல்கள் சிரிய அதிபர் ஆஸாட்டுக்கும், அங்கு வெளிநாடுகளின் ஆதரவுடன் போராடும் குழுக்களுக்கும் புதிய சவாலாக மாறியிருக்கிறது.

ஈராக் இஸ்லாமிக் ஸ்ரேற் லெவன்ற் என்ற இந்தக் குழுவினர் ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய ஸ்ரேற்றை அமைப்பதற்கு முயல்கிறார்கள், நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் உடனடியாக வெளியேற வேண்டும்.

ஆஸாட்டுக்கு எதிராக போராடும் போராளிகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அற்றரப் நகரத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று கேட்டதோடு, எதிரணியின் முக்கிய தலைவர் டாக்டர் ஹசன் சுலைமானையும் கதறக்கதறக் கொன்றுள்ளனர்.

மறுபுயறம் தலைநகர் டமாஸ்கஸ்சிற்கு போகும் எரிவாயு குழாய் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது, கோம்ஸ் நகரத்தின் மின்சாரம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் இருந்து நச்சுவாயுவை அப்புறப்படுத்தும் ஐ.நாவின் பணிகளுக்கு 24 மணி நேரத்தில் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சிரியா சென்றுள்ள ஐந்து வைத்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர், இதில் டேனிஸ்காரர் ஒருவரும் சுவீடிஸ் பிரஜை ஒருவரும் அடக்கம்.

இந்தக் குழுவில் அல்குவைடா தொடர்புடையவர்களும், தனித்தனி வன்முறைக் குண்டர்களும் அடங்கியுள்ளனர், பத்திரிகையாளரை கடத்தி பணம் கேட்டால் அது வன்முறைக் குண்டர்கள் குழு என்று கூறுகிறார் டென்மார்க்கில் வாழும் சிரிய நாட்டு அரசியல்வாதி நாஸர் காடர்.

வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள் இல்லையேல் கடத்தப்படுவீர்கள் என்ற கோஷங்களை இவர்களிடம் காணமுடிகிறது, எட்டுவயது முதல் வயது பேதமின்றி ஆயுதம் தாங்கியவர்களைக் காண முடிகிறது, இதில் ஒரு குழு தன்னை ஆமி ஒப் முகாயுதீன் என்று கூறுகிறது.

சிரியாவின் வடபுலத்தைக் கைப்பற்றி அங்கு ஸாரியார் சட்டங்களை அமல் செய்து வருகிறார்கள், கொலை, தண்டனை, கடத்தல் என்று காட்டுத்தர்பார் அரங்கேறியுள்ளது.

மேற்கண்ட ஐ.எஸ்.ஐ.எல் ஏற்கெனவே ஈராக்கின் தலைநகரின் பல பகுதிகளிலும் தாக்குதலை ஆரம்பித்து முன்னேறுகிறது, நேற்று நடைபெற்ற சண்டைகளில் 42 அல்குவைடா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக்கிய படைகள் கூறுகின்றன.

இவர்கள் துருக்கியில் இருந்து இஸ்லாத்திற்கு ஆதரவாகப் போராடுவோரையும் தம்முடன் இணையும்படி அழைப்பு விடுத்துள்ளார்கள்.

லெபனான் தலைநகர் பெய்ரூற்றில் வெடித்து வரும் குண்டுகள், இப்படியொரு குழு சிரியாவில் களமிறங்கப்போவதைக் காட்டியது, இப்போது அது நடந்துவிட்டது.

குளவிக்கூட்டில் கல்லெறிந்தால் எப்படியிருக்கும் என்று சிந்தித்தால் அப்படியிருக்கிறது இன்றைய சிரியாவின் நிலை.

அங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் அவசரமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள், நச்சுவாயு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஆபத்தெனக் கருதி அவசமாக அதை மீட்கப் புறப்பட்டுள்ள டேனிஸ் நோஸ்க் கப்பல்களால் அதை மீட்க முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தப் போராட்டக்குழுவில் தற்கொலைப் படைகள் நிறைந்துள்ளன, நச்சுவாயுவை நகர்த்தும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ஜப்பானில் அணு குண்டு வெடித்தததைப் போன்ற பேரனர்த்தம் உருவாகிவிடும்.

இந்த மாதம் ஜெனீவாவில் 28 நாடுகள் கூடி சிரியா தொடர்பான பேச்சுக்களை முன்னெடுக்க இருக்கும், நிலையில், நச்சு ஆயுதங்கள் அகற்றப்படும் கட்டக்கடைசிப் பொழுதில் ஆடிக்காற்று சீறி வந்ததைப்போல பயங்கரவாதிகள் களமிறங்கியிருப்பது, நிலமையில் பாரிய சிக்கலையும், போர்க்கள இரிசின் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னணியில் யார்.. மர்மாக உள்ளது, ஆனால் தொடர்கிறது சிக்கல்..

அமெரிக்கா போரை ஆரம்பிக்காமல் தாமதித்த தவறு இப்போது எரிபொருள் விலை உயர்வாக உலக மக்கள் வயிற்றில் குத்தப்போகிறது.

சிரிய விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வராமல் தாமதித்த காரணத்தால் இப்போது சிவ பூஜைக்குள் கரடி புகுந்த கதையாகியிருக்கிறது.

அலைகள்.

0 Responses to சிரியாவில் சிவபூஜைக்குள் கரடி புகுந்தது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com