தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நூற்றுக்கு நூறு வீதமான தீர்வு கிடைக்காது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டியிருப்பதாகவும் ஆனால் கிடைக்கும் தீர்வு 90 வீதமானதாக இருக்க வேண்டும் என்பதே தமது நம்பிக்கை எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னரான சமூக, பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவில் இருப்பதை போன்ற மாநில அளவிலான தீர்வு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் நான் அப்படியான தீர்வை எதிர்பார்க்கவில்லை. அதனை விட குறைந்த அதாவது சிறந்த மற்றும் வெற்றிகரமான தீர்வுக்கு நான் ஆதரவை வழங்குவேன்.
தேசியப் பிரச்சினைக்கான தீர்வு என்பது நாட்டை பிரிப்பது என்ற தவறான எண்ணம் சமூகத்தில் உள்ளது. எமது தேவை நாட்டை பிரிப்பதல்ல. அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதே எமது தேவையாக உள்ளது.
தேசிய பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் சகல தரப்பினரும் நடு நிலையாக சிந்திக்க வேண்டும். பொது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற சாத்தியமான செயற்பாட்டுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் வந்துள்ளனர் என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
0 Responses to தமிழர்களுக்கு 100 வீதமான தீர்வு தேவையில்லை: விக்னேஸ்வரன்