Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்லாமியப் போராளிக் குழு ஒன்று திங்கட்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் இறந்த பொது மக்களின் எண்ணிக்க்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாக்குதலை நேரடியாகப் பார்த்தவர்களின் கூற்றுப் படி இராணுவ வீரர்கள் போன்று உடையணிந்து இருந்த துப்பாக்கி தாரிகள் போர்னோ மாநிலத்தின் இஷ்கே இலுள்ள கிராமத்துக்குள் புகுந்து வீடுகளுக்குத் தீ வைத்ததுடன் தப்பியோட முயன்ற மக்கள் மீது கண்மூடித் தனமாக சுட்டுக் கொன்றுள்ளனர் எனப்படுகின்றது.

இத்தாக்குதல் குறித்த தகவல்களை போர்னோ செனட்டர் அலி ந்டுமே ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். கொல்லப் பட்டவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவர்கள் என்று அறிவிக்கப் பட்ட போதும் குறித்த கிராமத்தில் அதிகம் வசிப்பவர்கள் முஸ்லிம்கள் என்றும் பலியானவர்களில் கணிசமானோர் முஸ்லிம்களாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போக்கோ ஹராம் தீவிரவாதக் குழு இத்தாக்குதலுக்குப் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்ற போதும் இதுவரை எந்த அமைப்பும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

நைஜீரியாவில் 2009 ஆம் ஆண்டு முதல் அங்குள்ள முஸ்லிம் பள்ளிகள், தேவாலயங்கள், கிராமங்கள், சந்தைகள் மற்றும் அரச அலுவலகங்கள் எனப் பல தரப்பட்ட இடங்களில் தாக்குதல்களை நிகழ்த்தி ஆயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவித்திருப்பதாக போக்கோ ஹராம் குழு மீது குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது. இக்குழுவை ஒடுக்க நைஜீரிய இராணுவம் மேற்கொண்டு வரும் முயற்சியும் எதிர்பார்த்தளவு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குறித்த தாக்குதல் நடைபெற்ற கிராமத்தில் இராணுவம் குவிக்கப் பட்டுள்ளதுடன் அவசர நிலையும் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.

0 Responses to நைஜீரியக் கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்கள் தொகை 106 ஆக அதிகரிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com