தனது மகன் தில்லையம்பலம் சாந்தனை ஒரு முறையேனும் தனது மரணத்திற்கு முன்பதாக பார்த்துவிட ஆசைகொண்டுள்ளார் அவரது தாயார்.யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டியினில் வசித்து வரும் அவர் 23 வருடங்களின் பின்னர் மகிழ்ச்சியுடன் இப்போது தான் வாய் திறந்துள்ளார். தனது மகனின் தலையின் மேல் தூக்கு கயிறு இல்லையென்ற நம்பிக்கை அவரை பேச வைக்கின்றது. உள்ளுர் சாத்திரியொருவர் 45 வயதினில் சாந்தனிற்கு திருமண பொருத்தமொன்று சரி வருமென அண்மையினில் கூறியது மெய்த்துப்போகுமா என் கேள்வி எழுப்புகின்றார் தில்லையம்பலம் மகேஸ்வரி.
இந்த உடம்பில சீவன் இருக்கிற வரைக்கும் அந்த பிள்ளை செங்கொடியை மறக்கமாட்டன்.மரண தண்டனை விதிக்க கூடாதெண்டு தன்னை எரிச்ச பிள்ளை அவள். என்னுடைய வயிற்றினில் பிறக்காவிட்டாலும் அவள் என்ர பிள்ளை தான் என்கிறார் கசிந்து வரும் கண்ணீரூடே.முகம் தெரியாத எத்தனை ஆயிரம் சொந்தங்கள் என்னுடைய பிள்ளைக்காக குரல் கொடுத்தவை. அவையளிற்கு நன்றி சொல்லி சொந்தத்தை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லையென்கிறார் மேலும் அவர்.
அண்ணாவிற்கு என்னையும் தம்பியையும் டொக்டர் ஆக்க வேணுமெண்டு ஆசை.குடும்ப கஸ்டத்தால தன்னுடைய படிப்பை கைவிட்டு இந்தியா போய் அங்கிருந்து ஜரோப்பிய நாடுகளிற்கு போறது தான் அவனின்ர ஜடியா.வெறும் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டவன். எவை நம்புகினமோ தெரியாது.சத்தியமாக அவனிற்கும் இயக்கத்திற்கும் எந்த தொடர்புமில்லை. கடவுளிற்கு தெரியும். அருகாக உள்ள பிள்ளையார் கோவிலில் நல்ல தீர்ப்பு கேட்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் விசேட அபிசேகம் செய்ததாக சகோதரி மேலும் சொல்கின்றார். அவர் இப்போது ஒரு விஞ்ஞான பட்டதாரி.
சிவராசானும் உடுப்பிட்டி.அதனால் முன்பழக்கத்தால தனது டயறியில் தம்பியின் பேர் முகவரியை எழுதி வைச்சிருந்தது தான் தலை விதியையே மாற்றிப்போட்டுதென்கின்றார் மேலும் அவர்.அவரது மகளிற்கு இப்போது 18 வயது.மாமனை பார்க்க அவரும் ஆசை கொண்டுள்ளார்.
அண்ணா வீட்டிலிருந்து வெளிக்கிடேக்கை எனக்கு ஆறு வயது. கடைசியாக வாங்கித்தந்த அந்த பலூன் கலர் பச்சை எண்டது மட்டும் நினைவில நிக்குது.இப்ப எனக்கு 29 வயது.அப்பா கடைசி மட்டும் அண்ணாவின்ர நினைப்போட வருத்தம் வந்து செத்துப்போனார். தான் சிறையில போய் மகனை பார்க்க மாட்டன் எண்டு வைராக்கியமாக இருந்து போன வருசம் தான் செத்துப்போனார்.அம்மாவை எண்டாலும் அண்ணாவை பார்க்க வைக்கவேணும். வீட்டிலை கஸ்டம் தான்.ஆனாலும் எங்களிற்கு சந்தர்ப்பம் கிடைக்காட்டிலும் அம்மாவின்ர சீவன் போறதுக்கை அண்ணாவை ஒரு முறை பார்க்கவேணும் என்கிறார் சாந்தனின் தம்பி.
மரண தண்டனை இரத்து செய்யப்பட்ட மகிழ்ச்சியினில் அந்த சிறிய வீட்டினில் இப்போது மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது அப்பட்டமாக தெரிகின்றது.





0 Responses to உறவுகளிற்கு நன்றி சொல்லி பிரித்து பார்க்க விரும்பவில்லை! சாந்தனின் தாய்