இவ்வருட இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகள் அனைத்தையும் வாபஸ் பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானமான டிரோன் தாக்குதல்களைத் தொடுப்பதற்கு அமெரிக்கா புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
அதாவது இனிமேல் பாகிஸ்தானின் தலிபான் இலக்குகள் மீது மத்திய ஆசியாவிலுள்ள தனது நிலைகளில் இருந்து அமெரிக்கா டிரோன் தாக்குதல் தொடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை அமெரிக்காவின் ஸ்டார்ஸ் மற்றும் ஸ்டிரிப்பெஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பத்திரிகையில் வெளியான மேலதிக விபரங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, 'அதாவது அமெரிக்கா டிரோன் தாக்குதலைத் தொடுக்க திட்டமிட்டுள்ள மத்திய ஆசியாவிலுள்ள நிலைகள் பாதுகாப்பானவை என்ற போதும் இதற்கு முன்னர் தாக்குதல் தொடுக்கப் பட்ட ஆப்கான் மண்ணில் இருந்த கட்டமைப்பக்களை இழப்பது, பாகிஸ்தானின் பழங்குடிப் பிரதேசத்திலுள்ள தலிபான்களின் இருப்பை இலக்கு வைப்பதற்கான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவின் CIA பெறுவதில் சிரமங்களை எதிர் கொள்ள நேரிடும்!' எனக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ஆப்கானிஸ்தானின் தற்போதைய அதிபர் ஹமிட் கர்ஷாயி 2014 இறுதியில் அமெரிக்கப் படைகள் முற்றிலும் வெளியேறும் பட்சத்திலும் அந்நாட்டிலுள்ள அமெரிக்காவின் டிரோன் விமான இயங்கு நிலைகளைத் தக்க வைக்கும் இரு தரப்பு இராஜ தந்திர ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
0 Responses to பாகிஸ்தானிலுள்ள தலிபான்கள் மீது மத்திய ஆசியாவிலிருந்து டிரோன் தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா புதிய திட்டம்