வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் தொடக்கம் கட்டைக்காடு, போக்கறுப்பு (கேவில்) வரையான கிரமங்களில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் சீரான முறையில் மின்சாரம் விநியோகிக்கப்படாமையினால் இம்மக்கள் தினமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கமைவாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்குத் தெரியப்படுத்தியும் இன்னமும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்விடயம் தெடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமராட்சி கிழக்குப் பகுதியில் மக்கள் மீள்குடியமர அனுதிக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும்; இப்பிரதேசத்தில் சீரான மின்விநியோகம் இடம்பெறவில்லை.
இதனால் இப்பகுதியிலுள்ள நாகர்கோவில், கட்டைக்காடு, கேவில் போன்ற பிரதேசங்கள் முற்றாக மின்சாரம் கிடைக்காத பிரதேசங்களாகவும் மாமுனை, செம்பியன்பற்று வடக்கு, மருதங்கேணி வடக்கு மற்றும் தெற்கு, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி போன்ற பிரதேசங்கள் பகுதியளவில் மின்சாரம் கிடக்கின்ற பிதேசமாகவும் காணப்படுகின்றன.
இதேவேளை இப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் மின்சாரத்திற்கு விண்ணப்பித்துள்ள பொழுதிலும் மத்திய அரசாங்கத்தின் ஆளும்கட்சியின் அரசியல் வாதிகளின் தலையீடுகளால் அக்கட்சிக்கு ஆதரவளிக்காத சிலருக்கு இன்னமும் மின்சாரம் கிடைக்கவில்லை.
இவ்விடயங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் முறையிட்டமைக்கு அமைவாக நான் மின்சார சபையின் பருத்தித்துறை பிரந்திய முகாமையாளர் மற்றும் வடமாகாண பிரதம மின் பொறியியலாளர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்.
இதற்கமைவாக பருத்தித்துறை மின் பொறியியலாளர் கடந்த வருடம் நத்தார் பண்டிகைக்கு முன்னர் இப்பகுதியில் சீரான மின்விநியோகத்தினை மின்சார சபைமேற்கொள்ளும் என்ற உறுதிமொழியை எமக்கு வழங்கியிருந்தார்.ஆனால் இன்மும் இப்பகுதிக்குச் சீரான மின்சார விநியோகம் இடம்பெறவில்லை.
இதனால் குறிப்பாக நாகர்கோவில் மற்றும் கட்டடைக்காடு, கேவில் பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதேவேளை வேற்றிலைக்கேணிப் பிரதேசத்திற்கு அண்மையில் மின்சாரம் கிடைத்துள்ளதாக மத்திய அரசின் ஆளும்கட்சி சார்பிலான அரசியல்வாதிகள் தெரியப்படுத்தியிருந்தாலும் அப்பகுதியில் மின்சாரத்திற்காக விண்ணப்பித்த பலருக்கு அரசியல் காரணங்களால் இதுவரை மின் இணைப்புக்கள் வழங்கப்படவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பில் மாகாண சபையில் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம் என்றார்.
எனினும் அப்பகுதியினில் மீள்குடியேறிய மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறியே பழிவாங்கும் வகையினில் மின் விநியோகம் வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
0 Responses to இருளில் தொடர்ந்தும் வடமராட்சி கிழக்கு! அரசியல் பழிவாங்கலென்கிறார் சுகிர்தன்!