வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்பதாயிரம் ஏக்கர் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டு சட்டத்துக்கு புறம்பான வகையில் சிங்களக் குடியேற்றங்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
வடக்கின் இன விகிதாசாரத்தைக் குழப்பும் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல் இது. அத்தோடு, சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் இடங்களின் பெயர்கள் அனைத்தும் சிங்கள மொழிக்கு மாற்றப்பட்டு தமிழ் அடையாளங்கள் குலைக்கப்படுவதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை கைடியிலுள்ள மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது. அதன்போது, பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினரான து.ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் அடையாளத்துடன் காணப்பட்ட மணலாறு என்கிற கிராமம் இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் வெலிஓயா என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு சிங்கள மக்களே வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அதையொத்த நடவடிக்கைகளே முல்லைத்தீவிலும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் அன்றைக்கு நான்கு வீதமாக இருந்த சிங்கள மக்கள், இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களினால் இன்றைக்கு 24 சதவீதமாக மாறியுள்ளனர். அதனையே வடக்கு மாகாணத்திலும் செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று து.ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.




0 Responses to முல்லைத்தீவில் முப்பதாயிரம் ஏக்கரில் சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்கள்: கூட்டமைப்பு குற்றச்சாட்டு