வன்னியில் சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தின் போது மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை மற்றும் பொதுமக்கள் காயமடைந்தது தொடர்பில் உண்மையான அறிக்கையை வெளியிட்டேன் என முல்லைத்தீவில் பணியாற்றி மருத்துவர் டி.வரதராஜா கூறியுள்ளார்.
மனித உரிமை கண்காணிப்பகம் ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட பின்னர் பி.பி.சி. சிங்கள செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நான் நான்காவது மாடியில் தடுத்து வைத்திருந்த காலத்தில், பொய் கூறுமாறு அரசாங்கம் தனக்கு அழுத்தம் தரப்பட்டது. யுத்தத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி ஐந்து வைத்தியர்களும், பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டோம். 2009ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது புலிகளின் அச்சுறுத்தலினால் யுத்த களம் தொடர்பில் கருத்துகளை தெரிவித்ததாக கூறினார்.
அதற்கு பின்னர் அவர்கள் அனைவருக்கும் ஓமந்தையில் சேவையாற்றுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்தது என அவர் கூறியுள்ளார்.
யுத்த காலத்தில் தான் எவ்விதமான மிகைப்படுத்தல் செய்திகளையும் வழங்கவில்லை என்றும் தான் அக்காலப்பகுதியில் தான் கூறியவை உண்மையானவை என்றும் தான் வழங்கிய செய்திகள் உண்மை என்பதை அங்கிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களிடம் வருவர். ஆனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு புலிகள் எங்களிடம் கூறவில்லை எனக் கூறியுள்ளார்.
நாங்கள் சேவையாற்றிய தற்காலிக வைத்தியசாலைகள் பலவற்றின் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தின் இறுதி மூன்று மாதத்திற்குள் செஞ்சிலுவை சங்கத்தினால் படுகாயமடைந்த 9,000 பேர், முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களிலிருந்து திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்பதை நினைவுபடுத்தினார்.
யுத்த வலயத்தில் 3 இலட்சம் மக்கள் சிக்கியிருந்த வேளையில் அங்கு 80 ஆயிரம் பேர் மாத்திரமே எஞ்சி இருந்தனர் என்று அரசாங்கம் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டினார்.
மருந்துகள்,சாப்பாடு உள்ளிட்ட சகலதையும் 80 ஆயிரம் பேருக்கும் போதுமான அளவு கொடுத்தோம் என்று அரசாங்கம் கூறியிருந்தது. எனினும் மயக்கமடைய செய்யும் மருந்து இல்லை, இரத்தம் கொடுக்கவில்லை, அதனால் பெரிய பெரிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மருந்துகள் இன்றி, சிகிச்சை இல்லாமல் மரணமடைந்தனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to சிறீலங்கா அரசாங்கத்தின் அச்சுறுத்தல் காரணமாகவே பொய் சொன்னேன் - மருத்துவர் வரதராஜா