Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் களம் இப்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பலத்த பேரங்களின் பின்னர், எல்லாக் கட்சிகளுமே தமது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார்கள். அவர்களது பிரச்சாரங்களும் வேகமெடுத்து வருகின்றது.

சாதாரண மக்களுக்கு இது ஒரு திருவிழாக் காலம். எதிர்காலம் குறித்த எந்த நம்பிக்கையுமற்றவர்களாக, கட்சிகளால் வழங்கப்படும் வாக்குறுதிகளைக் கணக்கிலெடுக்காமல், கைகளுக்குள் திணிக்கப்படும் நோட்டுக்களுக்காக வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துடன் இந்தத் திருவிழாக் காலத்தைக் கடந்து போக முற்படுகின்றார்கள்.

அவர்களுக்கு இராமன் ஆண்டாலும் ஒன்றுதான். இராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். அவர்கள் வாழ்வில் மாற்றங்கள் என்பது கானல் நீரே.

இந்தியாவின் எல்லாத் திசைகளிலும் தேர்தல் காலத்து வாண வேடிக்கைகள், களியாட்டங்கள் என்று கண்களைக் கவர்ந்தாலும், எங்களது கவனங்கள் அனைத்தும் தமிழகத்தை மையப்படுத்தியே சுழல்கின்றது.

அதற்கான முக்கிய காரணம், தமிழீழம் குறித்த தமிழகத்தின் அக்கறையும், போராட்டங்களுமே. இந்தத் தேர்தலிலும் தமிழீழத்தின் அவலங்களே பேசு பொருளாக முக்கியம் பெற்றுள்ளது.

ஒரு இன அழிப்புப் போரின் கொடூரங்களிலிருந்து ஈழத் தமிழ் உறவுகளைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்ற தமிழக மக்களது ஆதங்கம் ஏற்படுத்திய நியாயமான கோபம் கலைஞர் கருணாநிதியை தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து கீழிறக்கியது.

தமிழக சட்ட மன்றத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கும் தி.மு.க. கட்சியின் தோல்விக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சியாகக் கூடத் தனது நிலையைத் தக்க வைக்க முடியாமல் போனதற்கு, இறுதிக்கட்ட ஈழப் போரின் போதும், அதன் பின்னரும் கலைஞர் கருணாநிதி கொண்டிருந்த நிலைப்பாடே.

மிகப் பெரிய 2ஜி ஊழல் காங்கிரஸ் கட்சிக்கே தெரிந்த இரகசியமாக இருந்த காலத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அவர்களது கட்டளையை மீறி ஈழத் தமிழர்களுக்காகப் போராடவோ, குரல் எழுப்பவோ முடியாத சூழ்நிலைக் கைதியாக அப்போது கலைஞர் இருந்தார்.

அதன் பின்னர், அவர் தன்னை நியாயப்படுத்த வெளியிட்ட கருத்துக்களும், அரங்கேற்றிய நாடகங்களும், அவர் தரித்திருந்த 'தமிழினத் தலைவர்' என்ற முடியை அவரிடமிருந்து செல்வி ஜெயலலிதா கவர்ந்து செல்லக் காரணமாகியது.

கருணாநிதியின் கையறுநிலையை தனக்குச் சாதகமாக, வெகு நேர்த்தியாகக் கையாண்டு, தமிழகத்தின் முதல்வரானார் செல்வி ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நகர்த்திய ஒவ்வொரு காயும் கலைஞர் கருணாநிதியை நிலைகுலைய வைப்பதாகவே இருந்தது.

அதன் உச்சக் கட்டமாக, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் மீதான தண்டனைக் குறைப்பும், விடுதலை அறிவிப்பும் கலைஞரது அரசியல் வாழ்க்கையையே கேள்விக் குறிக்குள் நிறுத்தியது.

காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் கூட்டுச் சேர முடியாத கள நிலையை கருணாநிதிக்கு உருவாக்கியது.

தமிழகத்தின் தேர்தல் களம் இப்போது தேசிய பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவோ, ஊழலை மையப்படுத்தியதாகவோ இல்லை. தமிழகத்தை மையப்படுத்தியதாகவும், ஈழப் பிரச்சினையை முதன்மைப்படுத்தியதாகவும் மாற்றம் கண்டுள்ளது.

தமிழீழ மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டது, அவர்கள்மீது சிங்கள அரசு நடாத்திய இனப்படுகொலைக்கான சூத்திரதாரியாக இருந்து காங்கிரஸ் கட்சியே செயல்பட்டது என்பதனால், தமிழக மக்களிடம் எழுந்த கோபம் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் தீண்டத்தகாத கட்சியாக மாற்றியுள்ளது.

தமிழகத்தின் மிகச் சிறிய அரசியல் கட்சிகூட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர விரும்பாத நிலையில், காங்கிரஸ் கட்சி தனிமைப்பட்டுப் போயுள்ளது. தோல்வி பயம் காரணமாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஞானதேசிகன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், சிதம்பரம், வாசன் உட்பட்ட முக்கியஸ்தர்கள்கூட தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளார்கள்.

சகோதர யுத்தத்தால் பிளவுபட்டுப் போயுள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய சிறிய கட்சிகள் மட்டுமே இணைந்துள்ளன.

ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புத் தொடர்பாகத் தமிழக மக்களது தி.மு.க. மீதான கோபம் சற்றும் குறையாத நிலையில், இறுதிக் கணம்வரை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்காகப் பாடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனும் எதிர்நிலைக்கே தள்ளப்பட்டுள்ளதனால், அவர்களுக்கான வெற்றிவாய்ப்பு பின்தள்ளப்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிடும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்குமே நேரடிப் போட்டி நிலவுகின்றது.

பா.ஜ.க. கூட்டணியில், தமிழ் உணர்வாளர்களான வைகோ அவர்களது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், டாக்டர் ராமதாஸ் அவர்களது பாட்டாளி மக்கள் கட்சியுடன், விஜயகாந் அவர்களது தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் அங்கம் வகிக்கின்றது.

தேசியக் கட்சியான பா.ஜ.க. தனித் தமிழீழத்திற்கு ஆதரவு வழங்காத நிலையில், வைகோ அவர்களது தமிழீழ நிலைப்பாடு கேள்விக்குரியதாகவே உள்ளது.

தமிழக தேர்தல் களத்தில் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ள போதும், தற்போதுள்ள நிலையில் தனித்துப் போட்டியிட்ட போதும் அ.தி.மு.க.வே முன்னணியில் உள்ளது.

அண்மைக் காலமாக, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது நிலைப்பாடும், தீர்மானங்களும் தமிழக மக்களுக்கு அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வைத்துள்ளது.

இருப்பினும், வடக்கே பெருகிவரும் மோடி அலை, தெற்கு நோக்கியும் நகர்ந்து வந்தால், அவரது பெரும்பான்மை இலக்கு கேள்விக்குறி ஆகலாம்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் பா.ஜ.க. மீது மென்மையான போக்கை வெளிப்படுத்திவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தேர்தல் முடிவுகளின் பின்னர் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் பா.ஜ.க. அரசாங்கத்தில் நிச்சயம் இடம்பெறுவார் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது.

'அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் அரசே மத்தியில் அமையும்' என்ற செல்வி ஜெயலலிதாவின் அறிவிப்பும் அதனையே உணர்த்துகின்றது. அதில், தமிழ்த் தேசிய உணர்வாளரான வைகோவும் இருப்பது இன்னமும் கூடுதல் நம்பிக்கையை உருவாக்குகின்றது.

இதன் பிறகாவது, மாறுமா இந்தியா? மாற்றுமா தமிழகம்? பொறுத்திருந்து பார்ப்போம்!

- கரிகாலன்

0 Responses to மாறுமா இந்தியா? மாற்றுமா தமிழகம்? - கரிகாலன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com