Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் பயணத்தை முன்னெடுத்துள்ள இந்த நேரத்தில், சர்வதேச சமூகம் தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அந்தக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருகோணமலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கிடையிலான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் அண்மையில் தென்னாபிரிக்காவிற்கு மேற்கொண்ட பயணம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மற்றும் வடக்கு- கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட இந்த கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.

நட்டு நாடான இந்தியா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை வைத்து அந்த நாட்டை புறந்தள்ளிவிட முடியாது. சில வேளை அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அப்படி ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், புதிய அரசு எப்படி செயல்படும் என்பதை தற்போதைக்கு ஊகிக்க முடியாது. ஆட்சிக்கு யார் வந்தாலும், அவர்களுடன் பேசி எமது பக்கம் ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இரா.சம்பந்தன் நேற்றைய கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளதாக கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி இந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. குறித்த விடயம் தொடர்பில் பதிலளித்துள்ள செல்வம் அடைக்கலநாதன், வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களின் அண்மைக்கால செயல்பாடுகளும், கருத்துக்களுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அவருக்குமிடையிலான இடைவெளியை விரிசலடையச் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், அவருடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தி பிரச்சினகளுக்கு தீர்வு காண்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல்கள் மற்றும் அரசியல் விவகாரங்களை கையாள்வதற்காக எட்டுப் பேரடங்கிய குழுவொன்றும் நேற்றைய கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் செயற்படும் இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன். செல்வராஜா, சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

0 Responses to சர்வதேச சமூகத்தின் மீதான விமர்சனங்களை தவிர்க்குமாறு கூ உறுப்பினர்களிடம் இரா.சம்பந்தன் வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com