Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு கருத்துக்களும் குறிப்புக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. காரசாரமாகப் பகிரப்படும் இவற்றில் ஆக்கபூர்வமான கருத்துப் பகிர்வுகளாக இருவரது பகிர்வுகள் நம் கவனத்தையீர்க்கின்றன.

குறித்த அப்பதிவுகள் இரண்டும் தமிழகத் தேர்தல் முடிவுகளை, குறிப்பாக திமுகவின் தோல்வி குறித்துப் பேசுகின்றன. அவை தமிழக வாக்காளர்களின்  இருவேறு பார்வைகளைப் பிரதிபலிப்பதாக அமைவதால், அவற்றை பதிவு செய்துள்ள Viji Connect மற்றும் அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் ஆகியோரது கருத்துக்களை அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு பகிர்கின்றோம்.

முதலில் இந்தியா ஒளிர வேண்டும் எனும் விருப்போடு கருத்துப் பகிரும் Viji Connect.

காங்கிரசிடமிருந்து பெற்றோம் சுதந்திரம் .. இனிமேலாவது ஒளிரவேண்டும் இந்தியா ..

இந்தியாவின் மூன்றாவது பெரும்கட்சியாக அதிமுக வந்திருப்பது சாதாரண விசயமல்ல, இது கருணாநிதியே ஆச்சர்யப்படும் உண்மை, இத்தனை வருட அரசியலில் அவருக்கே கிடைக்காத ஒரு தகுதி ஜெயலலிதாவிற்கு கிடைத்திருப்பது அவரே நம்பாமல் தினறிகொண்டிருப்பார்,

37 வாங்கியும் என்ன பிரயோசனம் .. ஆட்சியில அம்மாவால பங்கு கொள்ள முடியலியே ... வெறும் மேஜையை தட்டத்தான் லாயக்கு .. அஞ்சுவருசம் வேஸ்ட்டு ..

இதுக்கு கஷ்டப்பட்டு ஜெயிச்சிருக்கவே வேணாம் ... எங்க தலைவர் எது தொட்டாலும் அதுல ஒரு கணக்கு இருக்கும்.

என்றெலாம் தி மு க உடன்பிறப்புகளின் கரிசனங்கள் ... ஒற்றை சீட் கூட இல்லாமல் தோற்ற கேவலத்தையும் மறைத்து ஜெயலலிதாவின் நிலைமையை கண்டு உச்சு கொட்டும் தலைவரின் பொய்யை போலவே தொண்டர்களும் புளுகு மூட்டைகளாக மாறி இருக்கும்போது தோணுவது ஒன்றுதான் .. உங்கள் தலைவரை போலதான் நீங்களுமா ... உங்கள் நண்பர்களுகாகவாவது உண்மையாய் இருக்கமாட்டீர்களா ??

அதை மறைக்கவே இந்த வேசங்கள் , பொய்களை அவிழ்த்து விடுகிறார் தங்கள் தொண்டர்களிடம், அவர்களும் அதயே பரப்புகிறார்கள், தங்கள் தொண்டர்களை முட்டாள்களாகவே வைத்திருந்தால்தான் தான் தலைவர்காகவே நீடிக்கமுடியும் எனபதை உணர்ந்திர்ப்பதால்தான் கருணாநிதி நான்கு தலைமுறையாக தலைவராக இருக்கிறார் , ஆசியாவில் மிக பெரிய பணக்கார குடும்பமாக அவர் குடும்பம் தழைத்திருக்கிறது, தொண்டர்கள் ஏழையாகவே இருக்கிறார்கள்,

அதே போல திமுக நண்பர்களின் இன்னொரு கேள்வி ?.. எங்கள் தலைவர் தோற்றார், ஆனால் தமிழ் நாட்டின் ஒரே நேர்மையான அரசியல்வாதி என்று நீங்கள் எல்லோரும் சொல்லும் தலைவர் வைகோதான்!! அவர் ஏன் தோற்றார் என்பது உங்கள் கேள்வி அல்லவா ?? அப்படிப்பட்ட நேர்மையானவர் எதற்காக அழகிரியை வீடு தேடி சென்றார் ? அப்படிப்பட்ட நேர்மையானவர் எதற்க்காக தமிழ் ஈழத்தை எதிர்ப்போம் என்று சொன்ன பாஜகவோடு கூட்டணி வைத்தார்? அப்படிப்பட்ட நேர்மையானவர் எதற்க்காக விஜயகாந்தை நம்பினார்?

அரசியலில் நேர்மையான முட்டாள்'தான் வைகோ...!அதனால் தான் தோற்றார். ஆனால் எதிரி முகாமில் இருந்தாலும் நல்லவர் அவர்.. கருணாநிதியை போல வஞ்சகர் அல்ல ...

அதிமுக பணத்தால் ஜெயித்தார்கள், ஓட்டு இயந்திரத்தில் எதை அமுத்தினாலும் அதிமுகவிற்கு வருவது போல ஜெயலிலதா செய்துவிட்டார் என்றெல்லாம் புளுகாமால் அமர்ந்து உங்கள் கடந்தகால தவறுகளை யோசியுங்கள், நீங்களும்தான் பணம் தந்தீர்கள், அதிமுக இருநூறு, ஐநூறு ருபாய் தந்து ஓட்டு கேட்டார்கள் என்றால் நீங்கள் இரண்டாயிரம் தந்து கேட்டீர்களே, ஏன் மக்கள் உங்களுக்கு ஒட்டு போடவில்லை, மக்கள் புத்திசாலிகள் ஆகிவிட்டார்கள் என்று அர்த்தம், நீலகிரியில் மீண்டும் ஆ.ராசாவை நிறுத்தியிருக்கும்போதே மக்களை எவ்வளவு கேவலமாக முட்டாளாக நீங்கள் நினைத்திருப்பீர்கள் எனபது புரிகிறது, நீங்கள் மட்டும் தோற்கவில்லை, சரியான நிர்வாகத்திறமை இல்லாத விஜயகாந்த், வைகோ, உட்பட ஜால்ரா அடித்தே வாழும் திருமாவளவன், ஜாதிகட்சிகள் உட்பட எல்லோரையும் மக்கள் தூக்கி வீசியிருப்பது ஏன் , ஜெயலலிதாவிற்கான ஆதரவு மட்டுமல்ல, கலைஞர் & மற்றவர்கள் மேலான வெறுப்புமே காரணம் அதற்குதான் இந்த தோல்வி,

இதை விட பெரிய பாடத்தை மக்கள் புகட்டியிருக்க முடியாது, இதைவிட உங்களுக்கு பெரிய விடுமுறையும் இதுநாள் வரை கிடைத்திருக்காது , அதற்காகத்தான் இந்த ரெஸ்ட். நீங்கள் மறைவாக செய்த தந்திரங்களை உங்கள் மகளும் குடும்பமும் பகிரங்கமாக செய்து உங்கள் சகுனித்தனங்களை மக்களுக்கு காட்டிவிட்டார்கள், இனி நீங்கள் நல்லவர் ஆகவே முடியாது, ஓயாது பம்பரமாக சுற்றி மக்கள் பணியாற்றிய தலைவர் கடைசி காலத்திலாவது நிமமதியாக இருக்கட்டும் . போதும் அவர் வாங்கிக்கொண்ட சாபங்கள் ..

மக்களவை தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மை பெற்றதால் மட்டுமே யாருடைய தயவும் அவர்களுக்கு தேவையில்லை என்று சொல்லிவிட முடியாது. மாநிலங்களவையில் பாஜகவிற்கு போதிய பலமில்லாததால் இரு அவையிலும் மசோதாக்கள் நிறைவேற்ற மற்ற கட்சியினரையும் பாஜக அரவணைத்து செல்லும் கட்டாயத்தில் உள்ளது ...

இதை உணர்ந்து புதிய பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் மோடிஜி அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை நேசம் பாராட்டுவார்; அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே மாநில அளவில் பெரிய கட்சியான அதிமுகவை எதிர்த்து கொள்ள மோடியால் இயலாது என்பதுதான் உண்மை. எனவே கட்டாயமாக மாநில நலன் சார்ந்த ஜெயலலிதாவின் கோரிக்கைகளை மோடிஜி நிச்சயம் நிறைவேற்றுவார்... அப்போதுதான் அவருக்கும் ஜெயாவின் ஆதரவு எப்போதும் சுமூகமாக இருக்கும்

ஜெயலலிதா அவர்களும் இந்த வெற்றியை தலையில் கனமாக ஏற்றாமல் மக்கள் தந்த பேராதரவை ஏந்தி பணிவாக பெற்றுக்கொண்டு அந்த வெற்றியை கொண்டு மக்கள் பணியாற்றி, திமுக ஆட்சியின் எல்லா பலவீனங்கங்களையும் பலமாக மாற்றுவதன் மூலம் வஞ்சகர்கள் அல்லாது அசைக்கமுடியாத அங்கமாக மாறி நிலையான ஆட்சியாக அமர்வதற்கான நேரம் இது , ஜெயலலிதா நினைத்தால் இதை சாதிக்க இயலும், ஜெயலிலதா என்றால் பழிவாங்கல், மந்திரிகளை பந்தாடுவார் என்ற பேச்சுகளை துடைத்து ஏறிய கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது...

அதே போல இலவசங்களை குறைத்து, அதற்காக வளர்க்கும் டாஸ்மாக்கை நலிவடைய செய்யவேண்டும் எனபதும் எங்கள் வேண்டுகோள், மொடி உங்கள் நண்பர்தான், காங்கிரசை மாற்ற நீங்கள் இருவரும் உழைத்த உழைப்புகள் யாவரும் அறிந்ததே , இனிமேலும் மோடியிடம் எந்த கடுமையும், பட்டோபமும் காட்டாமல், நட்பு பாராட்டிம் சுமூகமாக நம் மக்களுக்காக எல்லா சலுகைகளையும் வாங்கி நம் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டவேண்டும்,

முல்லை பெரியார் , பாலாறு, சேது சமுத்திரம், மீனவர் பிரச்சினைகள், விவசாயிகள் மேம்பாடு, கல்வித்தரம், கீழ்த்தட்டுமக்களின் நிலை உயர்தல், ஊழல், லஞ்சம், திருட்டு ஒழித்தல், கட்டுகோப்பான காவல்துறை கொண்ட மாநிலமாக மாற்றல் வேண்டும், காவல்துறை மக்களுக்கு நண்பனாக இருக்கவேண்டும், ரவுடிசம், தாதாயிசம் சென்னையில் உட்பட பெரு நகரங்களில் ஒழிக்கபடவேண்டும், மின்வெட்டு குறைந்து தொழில்கள் மேம்படவேண்டும், நீங்கள் நிஜமாகவே எல்லோரின் தாயாக மாறவேண்டும், உங்கள் தொலை நோக்கு பார்வைக்கும், புத்திசாலித்தனத்துக்கும் பயன்படுத்த கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது.. வாழ்த்துக்கள் அம்மா ...

மோடி ஆட்சி ஏற்றால் இந்துகள் அல்லாதோருக்கு இனி அதோ கதிதான் என்றெல்லாம் புரளியை கிளப்புபவர்களுக்கு முன்னால் மோடிஜி நிரூபித்து காட்டவேண்டும், இந்தியாவை வெளிநாட்டு பொருட்களின் வியாபாரத்தளங்களாக மாற்றாமல், இந்திய பொருட்களின் பெருமை சொல்லும் விதாமாக மாற்றி உலகின் முன்னினி நாடாக மாற்ற மோடி பாடுபடுவார் எனபதை நம்புகிறோம்.. அதே போல விவசாயிகளுக்கும் உதவிகள் செய்து விவசாயம் தலைத்தோங்க உதவி செய்யவேண்டும், இனி மோடியின் தலைமையில் இந்தியா உலகில் முதல் நாடாகவும், அம்மாவின் தலைமையில் தமிழகம் இந்தியாவின் முதல் மாநிலமாகவும் ஒளிரட்டும் ...

இந்தியாவின் 14 வது பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடி'ஜிக்கு ஒரு இந்திய நாட்டு மகனாக மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

திமுகவின் இணையச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான அபிஅப்பா என்கிற தொல்காப்பியனின் பார்வை ஒரு திமுக தொண்டனின் நியாயபூர்வமான பார்வையாக மட்டுமல்லாது, தோல்வியுற்ற கட்சித் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வாசகங்களாகவும் அமைகின்றன.  நிராகரித்து விட முடியாத அவரது குறிப்புக்களின் இறுதியில், " திமுக இந்த தேர்தலில் எவ்வித குறையும் செய்ய வில்லையா என கேட்போர்களே... இருக்கு குறை உண்டு. நிறைய குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை எதுக்கு பொதுவெளியில் போட்டு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டும் என நினைத்து மனதில் போட்டு அழுத்திக் கொள்கிறேன். " என்பது அக் கட்சியின் மீது அவர் கொண்டிருக்கும் விசுவாசிப்பின் நேர்மையான சாட்சியம்.

இந்த தேர்தலில் உண்மையான "புரட்சியாளர்" என்றால் அது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டுமே!

திமுகவுக்கு தேர்தல் தோல்வி! ஆமாம். அப்பட்டமான தோல்வி தான். இப்படி வழிச்சுகிட்டு போனது இல்லை எப்போதும். முன்பு 39 தொகுதியில் தோத்தப்ப கூட அண்ணன் ஏ.வி பிஆசைத்தம்பி மட்டுமாவது ஜெயிச்சு இருக்கார் திமுகவில். அது போல ஒரு முறை 39 தொகுதியில் புட்டு கிட்ட போதும் நாகையில் திமுக கூட்டணி வெறும் 100கு குறைவான ஓட்டில் ஜெயிச்சு இருந்திருக்கிறது. இப்போது தான் ஒரு வழித்தெடுத்த தோல்வி.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இதில் திமுக மற்றும் தளபதி அவர்கள் தான் உண்மையான புரட்சியாளர். பல விஷயங்களை உடைத்து தகர்த்துள்ளார்.

1. வாரிசுகளுக்கு வாய்ப்பு இல்லை 2. சாதிய ரீதியான சாதிக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாய் வேட்பாளர் தேர்வு இல்லை. 3. செண்டிமெண்ட் விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பகுத்தறிவை அப்பட்டமாக கொலை செய்து விட்டு தேர்தலை சந்திக்கவில்லை.(அதாவது கன்யாகுமரியில் அரசியல் கட்சி தலைவர்கள் போகின் வெற்றி கிட்டாது என மோசமான செண்டிமெண்ட் அரசியல் கட்சிகளிடம் இருந்தும் ...ஏனனில் அங்கே தான் இந்திய எல்லை முடிகின்றதாமாம். ஆனால் தளபதி அவர்கள் கடலை பார்த்ஹ்து நின்று கொண்டு அப்படி சொல்லாமல் திரும்பி நின்று தமிழகத்தை பார்த்து இங்கே தான் இந்திய தமிழக எல்லை தொடங்குகின்றது என சொல்லி அங்கே பிரச்சாரம் ஆரம்பித்த பாஸிடிவ் திங்கிங் அருமை) 4. அரைத்த மாவையே அரைக்காமல் பல புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது 5. கடுமையான பிரச்சாரம். 6. உள் கட்சியில் வெளிப்படையாக கலகம் செய்தவர்களை தேர்தல் நேரம் என்று கூட பார்க்காமல் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி தேர்தலை சந்தித்துள்ளது திமுக. 7. அவுட் சேர்ஸ் பேச்சாளர்களை (சினிமா நட்சத்திரங்களை) வைத்து பிரச்சாரம் செய்யாமல் திமுக பேச்சாளர்கள், பிரச்சாரகர்களை மட்டுமெ நம்பி களம் இறங்கியது திமுக. 8. துரோகம் செய்த காங்கிரசை பொதுக்குழு முடிவின்படியே கடைசி வரை கூட்டணி சேர்க்காமல் தேர்தலை சந்தித்தது திமூக. 9. மிக மிக முக்கியமாக பணம் கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்கிற அயோக்கியத்தனத்தை கடுமையாக எதிர்த்து ஜனநாயக போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது.

இத்தனை புரட்சிகளையும் தனி மனிதனாக, வரக்கூடிய விளைவுகளை பற்றி கவலை கொள்ளாமல் செய்து முடித்த புரட்சியாளர் தளபதி அவர்கள் இன்று பாராட்டப்பட வேண்டிய முக்கிய கதாநாயகன். ஒரு புரட்சியை ஆரம்பித்த உடனே வெற்றி கிடைத்து விடும் என நினைத்து புரட்சியாளன் எவனும் நினைத்தது இல்லை. இந்த புரட்சிகள் ஒரு விதை தான். இது இன்னும் ஒன்னரை வருஷத்தில் கூட மரமாகி பலன் தரலாம். இப்போது மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டனர். திமுக ஓட்டுக்கு பணம் கொடுக்காது என்று. அதிமுக 200 கொடுத்த போது அன்று இரவு முழுக்க கதவை திறந்து வைத்து கொண்டு திமுக எப்படியும் 300 கொடுக்கும் என தேவுடு காத்து கிடந்த மக்களை நான் அறிவேன்.

அந்த விஷயம் பொய்த்து போனது. இனி திமுக வாக்குக்கு பணம் கொடுக்காது என மக்களுக்கு புரிந்து விட்டது. "நான் இன்னின்ன நல்லது செஞ்சேன். எனக்கு ஓட்டு போடு. எனக்கு எதிரானவங்க இன்னின்ன கெட்டது செஞ்சு கிட்டு இருக்காங்க. அதனால அவங்களுக்கு நீ ஒட்டு போட்டா இன்னும் கஷ்டப்படுவாய்" என சொல்லி மட்டும் ஓட்டு கேட்க ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் தளபதியிடம் கொட்டி கிடக்கின்றது. இது போது ஒரு புரட்சியாளனுக்கு. இதை விட வெறு என்ன வேண்டும்?

பணம் கொடுக்க யோக்கிதை இல்லாத கட்சியா திமுக? தளபதி "உம்" என ஒரு வார்த்தையை தன் உதடு வழி சிந்தியிருப்பின் தஞ்சையில் பண மழை கொட்டாதா? நெல்லையில், ராமநாதபுரத்தில் கொட்டாதா? ஸ்ரீபெரும்புதூரில் கொட்டாதா? கொட்டும். ஆனால் அடுத்த முறை மக்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பாங்க. "வெலை எல்லாம் ஏறிப்போச்சுங்க சார். 2000 தருவதா அதிமுக சொல்றாங்க. நீங்க எத்தனை கொடுப்பீங்க?" என வெளிப்படையாக வாக்குகளை விற்க தயாராகிவிடுவர். பின்னர் எந்த ஏழை களத்தில் நிற்க இயலும்? ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகிப்போகும். இப்போது கிடைக்கும் இந்த 5 வருட அல்பாயுசு வெற்றிக்காக ஜனநாயகத்தை கொன்று புதைத்து விட்டு தான் 40 சீட் எனில் அந்த மண்ணாங்கட்டி வெற்றி தேவை இல்லை என தளபதி எடுத்த முடிவு தான் அவரை ஒரு புரட்சியாளராக என்னை பார்க்க வைக்கின்றது.

இதோ 200 ரூபாக்காக ஒரு நாளைக்கு 11 காசுக்காக வாக்கை விற்று விட்ட மக்களுக்கு அம்மாவின் அன்பு பரிசாய் இதோ மின்கட்டணம் ஏறப்போகின்றது. மாதம் 500 ரூபாய் அதிகமாய் அழ வேண்டிய நிலை வரும். நான் சொல்றேன் அந்த நிலை வரும். அப்போது புரியும் அந்த 200 ரூபாய் மகத்துவம். அப்போதும் கூட புரியவில்லை எனில் இந்த நாடும் நாட்டு மக்களுக்கும் நாசமாய் போகட்டும் என சொல்லி தேமெ இருக்க போவதில்லை இந்த புரட்சியாளர் ஸ்டாலின். மக்களுக்கு புரியும் வரை போராடத்தான் போகின்றார்.

தளபதியின் இந்த போராட்டத்துக்கு பின்னர் அவருடன் அணி வகுக்க நான் தயார். பயந்து ஓடுபவர்கள் ஓடட்டும். இந்த புரட்சி போராட்டத்துக்கு கூட வருபவர்களுக்கு என்றாவது ஒரு நாள் சுபிட்சம் கிட்டும். இந்த நாடு செழிக்கும். இந்த நாடு செழிப்பாய் இருக்கும் போது அந்த வெற்றியில் நாமும் பங்கெடுக்க வேண்டும் எனில் தளபதிக்கு பின்னாள் அவருடைய உறுதியான முடிவுகளுக்காக அவருக்கு தோள் கொடுப்போம் வாருங்கள் தோழர்களே!

அப்படி எனில் திமுக இந்த தேர்தலில் எவ்வித குறையும் செய்ய வில்லையா என கேட்போர்களே... இருக்கு குறை உண்டு. நிறைய குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை எதுக்கு பொதுவெளியில் போட்டு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டும் என நினைத்து மனதில் போட்டு அழுத்திக் கொள்கிறேன். அத்தனையே!

தொல்காப்பியன் குறிப்பிடுவது போல் ஸ்டாலின் தலைமை கட்சியை வழிநடத்துமாயின் இந்தத் தோல்வியில் கட்சியை மீட்டெடுக்குமென நம்பிக்கை கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.ஏனெனில் தமிழகத்தில் திமுகவின் தோல்வி என்பது  தமிழர்களுக்கு உவப்பானதல்ல என்றே இன்றளவும் பலரும் நம்புகின்றார்கள்.

நன்றி: Viji Connect

மற்றும் அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்

0 Responses to திமுகவின் தோல்வி தமிழர்களுக்கு உவப்பானதல்ல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com