Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோருக்கு எதிராக கொழும்பில் அண்மையில் அரச ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

இலங்கை உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தி கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் அரச ஆதரவாளர்களினால் அண்மையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்போது, இந்தியப் பிரதமரினதும், தமிழக முதல்வரினதும் உருவ பொம்மைகளும் எரியூட்டப்பட்டிருந்தது.

குறித்த விடயங்களை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இலங்கைத் தமிழ் மக்களுக்கு இன்றைய சூழ்நிலையில் கைகொடுக்கும் ஒரு சக்தியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் செயற்பட்டு வருகின்றனர். தன்னிச்சையாக செயற்பட்டு வந்த இலங்கை அரசு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பின் பின் சற்று சிந்தித்து செயற்படும் தறுவாயில் உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுக்கவேண்டிய உரிமையை பிறிதொரு நாடு பெற்றுக்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் ஆட்சி மாற்றம் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்லதொரு விடிவை பெற்றக்கொடுக்கவுள்ளது.

வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை, இலங்கை மத்திய அரசு முடக்கி வைத்து தமது அதிகாரத்ததை பலப்படுத்தி வருகின்றது. இதனால், மாகாண சபையின் அதிகாரங்கள் வலுவிழந்த நிலையிலே காணப்படுகின்றன.

இந்த நிலையில், வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் குறிப்பாக, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரை இலங்கை அரச அமைச்சர்கள் தொடர்ந்தும் விமர்சித்து வந்தனர்.

கடந்த வாரம் கொள்ளுப்பிட்டியிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய அரச ஆதரவாளர்கள், இலங்கை விடயத்தில் தலையிட வேண்டாம் என வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவையும் கண்டித்து, அவர்களுடைய உருவப்படங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் அவர்களுக்கு எதிராக இலங்கை அரசின் ஆதரவாளர்கள் என்ற கைக்கூலிகளின் செயற்பாட்டை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. இலங்கைத் தமிழர்களுக்கத குரல் கொடுக்கும் இவர்களுக்கு ஆதரவாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மோடி- ஜெயலலிதாவுக்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.கூ கண்டனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com