Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழியை அண்மித்துள்ள கிணற்றையும் தோண்டி, அது பற்றிய அறிக்கையை வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் வன்னிப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் ஆலய வீதிதியில் கடந்த வருட இறுதிப்பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைப்பதற்காக வீதியோரத்தைத் தோண்டியபோது மனித எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, அந்தப் பகுதி தோண்டப்பட்டு 80க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகளும் வேறு தடயப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இவை தொடர்பிலான தடயவியல் ஆய்வறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாதிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், அடுத்த தவணையின்போது அந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கின்றது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா, மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் முன்னர் முஸ்லிம் மக்களின் மையவாடியொன்று இருந்திருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டதாகவும் அதனை தான் மறுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச சபைத் தலைவர் இந்த இடத்தில் அந்தப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்களின் தேவைக்காக புதைகுழி எதுவும் அமைக்கப்பட்டிருந்ததாக அந்தப் பிரதேசத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதேச சபையின் ஆவணங்களில் ஆதாரங்கள் எதுவுமில்லை என்று நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில் முஸ்லிம் மக்களின் மையவாடியொன்று இருந்திருந்தாலும்கூட, அது மன்னார் பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறான பதிவுகள் எதுவும் இல்லை என்பதை நீதிமன்றத்திற்கும் பொலிஸாருக்கும் சுட்டிக்காட்டியதாகவும் சட்டத்தரணி இராஜகுலேந்திரா தெரிவித்தார். இந்த வழக்கு வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

0 Responses to மன்னார் மனிதப் புதைகுழிக்கு அண்மித்துள்ள கிணற்றையும் தோண்டி அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com