Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபை ஆட்சியமைத்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் நலத் திட்டங்களில் அக்கறையின்றி செயற்பட்டு எல்லை மீறி வருவதாக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரான எஸ்.தவராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த பத்து மாத காலத்தினுள் 25.71 வீதம் மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று திங்கட்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஒரு வருட காலத்தில் வடக்கு மாகாண சபையில் மாகாண சபையுடன் தொடர்பற்ற சுமார் 150 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் ஒதுக்கும் பணத்தை பயன்படுத்தாமல் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி வருகின்றது.

இந்த வருடத்தில் வடக்கு மாகாண சபைக்கு மீண்டுவரும் செலவினமாக 13,650 மில்லியனும், மூலதன செலவாக 1876 மில்லியனும் ஒதுக்கப்பட்டது. இவற்றில் 25 வீதமே செலவிடப்பட்டிருக்கிறது.

நாட்டிலுள்ள ஏனைய 7 மாகாண சபைகள் கடந்த 25 வருடங்களாக இயங்கி வருகின்றன. மக்கள் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபைக்கே கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபைக்கு பெருமளவு நிதியை செலவிடுகிறது. வடக்கில் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரிய விகிதாசாரம் காணப்படுகிறது. ஏனைய மாகாணங்களில் 19.1 என்ற அடிப்படையே காணப்படுகிறது.

வடக்கு மாகாண சபைக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆராய திறைசேரி செயலாளர் வடக்கிற்கு சென்ற போது முதலமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் அந்த கூட்டத்தை பகிஷ்கரித்தனர். ஆனால், அரசாங்கம் வடக்கிற்கு எதுவும் வழங்குவதில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த ஒரு வருடத்தில் ஒதுக்கிய பணத்தை கூட முழுமையாக பயன்படுத்தாமல் தமது இயலாமையை மறைப்பதற்காக அரசின் மீது த.தே.கூ. பழிசுமத்துகிறது. ஆனால், எந்தப் பிரச்சினையுமின்றி அரசாங்க செலவில் புத்தம் புது வாகனங்களை மட்டும் முதலமைச்சரும், அமைச்சர்களும் வாங்கியுள்ளனர். இதனை மட்டும் கேட்டு வாங்கத் தெரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய மக்கள் நல விடயங்கள் குறித்து வாய் திறக்காதுள்ளது.

இந்த ஒரு வருட பதவிக்காலத்தில் கூட்டமைப்பினர் என்ன செய்தது என்பது குறித்து விவாதிக்க வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன். இதற்கு முன்னரும் இவ்வாறு முதலமைச்சருக்கும் மாகாண அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தாலும் யாரும் அதற்கு தயாராக இல்லை” என்றுள்ளார்.

0 Responses to மக்கள் நலத் திட்டங்களைப் புறக்கணித்து வடக்கு மாகாண சபை எல்லை மீறுகிறது: எஸ்.தவராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com