Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வெளிப்படையான உதவி

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு உதவியபோதும், ஒளிவு மறைவாக செய்தது. கடைசி கட்டத்தில் பயந்து பின்வாங்கியது. ஆனால், பாரதீய ஜனதா அரசு சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே உதவுகிறது.

அதனால்தான் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது.

வெந்த புண்ணில் வேல்

எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது. ஜாலியன் வாலாபாக்கிலே படுகொலை நடத்தினானே ஜென்ரல் டயர் அவனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கச் சொன்னால் எப்படியோ, அதுபோன்றதுதான் ராஜபக்சேவுக்கு விருது கொடுக்கச் சொல்வது. இப்படி சொன்னதற்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைமையோ, பிரதமரோ இதுவரை கண்டித்தார்களா? இல்லை. அவரது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

வெந்த புண்ணில் வேல் வீசுகிறது இந்திய அரசு. மான உணர்ச்சி தமிழ்நாட்டில் அழிந்துவிடவில்லை. அது அழியாது. அது ஆயிரங்காலத்துப் பயிர். அதனால்தான் முத்துக்குமார்கள் தீக்குளித்து மடிந்தார்கள்.

மறைத்துவிட முடியாது

போதுபாலசேனா உள்ளிட்ட சிங்கள தீவிரவாத அமைப்புகள் ‘இஸ்லாமியர்களை எதிர்ப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமிய பள்ளிவாசல்களையும், கிறித்துவ தேவாலயங்களையும், இந்து கோவில்களையும் தாக்குகிறார்கள். ஆயிரக்கணக்கான இந்து கோவில்கள், சிவன் கோவில், முருகன் கோவில், காளி கோவில் என ஈழத்தில் நொறுக்கப்பட்டனவே.

சிவன் கோவில் குருக்களின் மனைவி கோமேஸ்வரி அம்மாள் சிங்கள ராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்டாரே. கோவிலுக்கு தேர் செய்த தச்சர்கள் கண்டதுண்டமாக வெட்டப்பட்டார்களே. இத்தனை கொடுமைகளையும் செய்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதை மறைத்துவிட முடியாது.

விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்

கேள்வி கேட்பார் இல்லை. நாம் எதைச் செய்தாலும் யார் தடுக்க முடியும் என்ற மனோபாவத்தில் மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள கொடியோருக்கு துணையாகவும் செயல்படும் போக்கு எதிர்காலத்தில் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை காலம் நிச்சயமாக நிரூபித்துக் காட்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

0 Responses to ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டுமா? - சுப்ரமணியசாமிக்கு வைகோ கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com