Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முஸ்லிம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அதுபோல, ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் அஞ்சியும் எந்தவித முடிவையும் எடுக்க மாட்டோம் என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித்தலைவர் ஏ.எல். அப்துல் மஜீதின் பதவிப்பிரமாண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அந்தக் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முஸ்லிம் காங்கிரஸின் கட்சி அரசியலில் இன்றைய காலகட்டம் மிக நெருக்கடியானதாகவேயுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கிய இக்கண்டத்தைத் தாண்டினால் பெரியதொரு சாதனை படைத்ததான நிலைமையே தோன்றும். இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் எவ்வளவு குறைவாகப் பேசுகின்றதோ அவ்வளவுக்கு நல்லது என்ற நிலைமையுமுள்ளது.

இருப்பினும் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் முடிவுக்கு வந்தாக வேண்டும். ஒரு மாதம் தாமதிப்பது கூட சிலருக்கு சிக்கலான விடயமாகவேயிருக்கும். அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியும் இப்போதே ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே சில முடிவுகளை தாங்களே எட்டிவிட்டதைப் போல் பேசுவது மிக அபத்தமான செயல் மட்டுமன்றி ஆபத்தான விடயமுமாகும். இந்த விடயத்தில் நிதானம் பக்குவம் மிக அவசியமாகும்.

ஒரு விடயத்தில் நாம் தெளிவு காண வேண்டும். எமக்குத் தேவை ஒரு பாராளுமன்றத் தேர்தலேதான். ஜனாதிபதித் தேர்தலை நாம் கேட்கவில்லை. தேர்தலை இரு வருடங்கள் முன் கூட்டி நடத்துவது ஜனாதிபதிக்குத் தேவையாகவிருக்கலாம். ஆளும் பிரதான கட்சியின் தேவையாகவுமிருக்கலாம். இது அரச கூட்டுக்கட்சிகளின் தேவையுமல்லவென்பதும் இப்பொழுது அம்பலமாகியுள்ளது.

எனவே, தேர்தலில் எந்தக்குதிரையை வெல்ல வைப்பது என்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமாகக்கூடி முடிவெடுக்க வேண்டும். இத்தேர்தலில் நமக்கு சமூகத்திற்காகப் பேரம் பேசும் ஒரு விடயம் மட்டுமேயுள்ளது. திறந்த மனதோடு ஒளிவில்லாமல் பேச வேண்டும். தலைமையை சந்தேகிப்பதென்பது பாவமான விடயமாகும்.

எனவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும். எதற்கும் அஞ்சி முடிவெடுக்காது. எடுக்கப்போகும் முடிவு சமூகம் சார்ந்த முடிவாகவே அமையும்” என்றுள்ளார்.

0 Responses to முஸ்லிம்களின் நலனைக் கருத்தில் கொண்டே ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று முடிவு: முஸ்லிம் காங்கிரஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com