Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பது அவர்கள் கட்சி தொண்டர்களுக்கு வருத்தமான விஷயம் தான். அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஜனநாயக முறையில் போராடுவது தவறல்ல.

ஆனால் தமிழகம் முழுவதும் தினமும் ஏதாவது ஒரு அமைப்பை கட்டாயப்படுத்தி கடைகளை மூட செய்வது, போராட்டம் நடத்த சொல்வது தவறான அரசியல் பாதை. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நாளை (செவ்வாய்) தனியார் பள்ளிகளை மூடப்போவதாகவும், என்ஜினீயரிங் கல்லூரிகளை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இது மிகவும் மோசமான முன்னுதாரணம். மிகவும் கண்டிக்கத்தக்கது.

பள்ளிகளை மூடும் அதிகாரம் சங்கங்களுக்கு கிடையாது. பள்ளிக்கல்வித்துறை தான் முடிவு செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறை இதை அனுமதிக்கிறதா?

நாளை எதற்காக பள்ளிகளை மூடுகிறார்கள்? மாணவர்கள் நீதித்துறையின் தீர்ப்பை எதிர்த்து போராடுவதற்காகத்தானே. இப்படித்தான் மாணவர்களை வழி நடத்துவதா?

எதையும் எதிர்த்து போராடலாம். நீதிமன்ற தீர்ப்பை கூட எதிர்த்து போராடலாம் என்ற உணர்வை மாணவர்கள் மத்தியில் விதைத்து விடும். மாணவர் சமுதாயத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடும்.

தண்டனை பெற்றவர்கள் பரிகாரம் காண கோர்ட் இருக்கிறது. சட்ட வழிமுறைகள் உள்ளன. இதையெல்லாம் விட்டு விட்டு இளைய தலைமுறையை தவறாக வழி நடத்துவது ஜனநாயகம், சட்டம், வரலாறு எதிலுமே நம்பிக்கை இல்லாமல் ஆக்கிவிடும்.

ஒரு அரசியல் தலைவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனோ நிலையை வளர்ப்பது மிக மோசமான பின்விளைவை உருவாக்கி விடும்.

எனவே நாளை பள்ளி, கல்லூரிகளை மூடுவதை அனுமதிக்க கூடாது. அதற்கான நடவடிக்கைகளை உடனே அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Responses to பள்ளி, கல்லூரிகளை மூடுவதை அனுமதிக்க கூடாது: தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com