Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் மேற்கொண்ட வான் தாக்குதலில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நான்காவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986ல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும் 1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும் முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல், காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல் ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.

“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.










0 Responses to பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 7ஆம் ஆண்டு நிவேந்தல் நாள் இன்று

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com