Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடைபெற்றுவரும் சர்வாதிகார முடியரசு ஆட்சியை தோற்கடித்து குடியரசு ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வமாக நமது நாடு ‘இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு’ என அறியப்பட்டுள்ளது. இதில் இன்று எஞ்சி இருப்பது ‘இலங்கை’ என்ற பெயர் மட்டும்தான். ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் ஒழித்துவிட்டு ஒரு முடியரசு இங்கே தோன்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், இந்த நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை மீளமைத்து குடியரசை காப்பாற்றும் தேர்தலாகும். எனவே இந்த தேர்தல் கட்சி, நிறம், இனம், மதம் ஆகிய பேதங்களை கடந்த தேர்தலாக இருக்க வேண்டும். நாட்டை காப்பாற்ற ஒன்று சேரும் இந்த தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி., ஜனநாயக கட்சி, ஹெல உறுமய ஆகிய கட்சிகளுடன் சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரிவும் இடம்பெற வேண்டும்.

இவற்றுடன் இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் நமது கட்சி உட்பட்ட அனைத்து கட்சிகளும் இடம்பெற வேண்டும். இந்த கூட்டு செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகள் இப்போது நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்து கொள்கிறேன்.

இதன்மூலம் இந்த சர்வாதிகார முடியரசு ஆட்சியை முதலில் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் பாராளுமன்றத்துக்கு வழங்குவோம். அதன்பிறகு நாம் பொது தேர்தலை தனித்தனி கட்சிகளாக சந்திப்போம். எங்கு போனாலும் உங்கள் பொது வேட்பாளர் யார் என கேட்கிறார்கள். இதன் காரணம் இந்த அரசாங்கம்தான். இன்று பொது வேட்பாளர் பற்றி எங்களைவிட அரசாங்கம்தான் அதிகம் கலவரமடைந்து பதட்டமடைந்துள்ளது. அதனால்தான் எங்கே உங்கள் பொது வேட்பாளர் என்று எங்களிடம் கேட்கிறார்கள்.

நாங்கள் பொது வேட்பாளர் பற்றிய விடயத்தை விட, பொது மேடை மற்றும் பொது எதிரணி கூட்டணி பற்றிய விடயத்துக்கே முன்னுரிமை கொடுத்து வந்தோம். அது இப்போது பலனளித்துள்ளது. அரசின் பிரதான பங்காளி கட்சியான ஹெல உறுமய, நேற்று நாட்டு தலைவருக்கு பிறந்த நாள் பரிசு வழங்கியுள்ளது. அந்த பரிசின் மூலம் இன்றைய அரசில் உள்ளவர்கள் மத்தியில் உடை உடுத்தி தன்மானத்துடன் தெருவில் நடக்கும் தகைமை ஹெல உறுமய கட்சிகார்களுக்கு மட்டுமே உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விசுவாசிகளுக்கு இங்கே இடம் தயாராக உள்ளது. இன்று ஒரு முடியரசாக மாறியுள்ள இந்நாட்டை காப்பாற்றி, இந்நாட்டை மீண்டும் ஒரு குடியரசாக மாற்ற உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகாரர்கள் தயாராக இருக்கின்றார்கள். அவர்களும் பரிசளித்து விட்டு இங்கே வருவார்கள். பொறுத்திருங்கள்” என்றுள்ளார்.

0 Responses to முடியரசை தோற்கடித்து குடியரசை காப்பாற்றுவோம்: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com