Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என பிரித்தானியா உறுதியளித்துள்ளதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் ஹியூ ஸ்வைர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன் கின் ஆகியோர் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திந்துப் பேசினர். இதன்போதே மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிரித்தானிய அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எமது அரசின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், மேலும் முக்கிய இரண்டு விடயங்கள் குறித்து பிரித்தானிய பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளும், திருகோணமலை சம்பூர் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்பதை அவர்கள் எடுத்துரைத்தனர்.

மேற்படி இரு பகுதிகளிலுமுள்ள தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டால், தற்போதைய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வடக்கு மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கின்றது என்று பிரித்தானிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தேன்.

இவ்விரு பகுதிகளிலும் பாடசாலை, வைத்தியசாலை, கிணறு உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான பொது வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம் என்று விளக்கமளித்துள்ளேன்.

என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துகளையும் ஆர்வத்துடன் செவிமடுத்த பிரித்தானிய பிரதிநிதிகள், வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என உறுதியளித்தனர்” என்றுள்ளார்.

0 Responses to இராணுவம் காணிகளை விடுவித்தால் மீள்குடியேற்றத்துக்கு பிரித்தானியா உதவும்: டி.எம்.சுவாமிநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com