Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு மற்றும் திருகோணமலையில் சம்பூர் பகுதிகளில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய மக்களுக்கு சொந்தமான காணிகளை அடுத்த ஒருவார காலத்திற்குள் புதிய அரசாங்கம் முதல் கட்டமாக மக்களிடம் கையளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தின் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யுத்தத்திற்கு பிற்பாடு வடக்கிலும், கிழக்கிலும் மீள்குடியேற்றம் என்பது முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது. ஆனால் சில இடங்களில் எந்த விதமான கால தாமதங்களும் இன்றி மீள்குடியேற்றங்களை நடாத்த முடியும்.

முக்கியமாக திருகோணமலையின் சம்பூரில் அங்கு கேற்வே என்ற நிறுவனம் அமைப்பதற்கு ஏறத்தாள 1700 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. எனினும், அந்த நிலத்தில் குறித்த நிறுவனம் இயங்காது வெறும் தரையாகவே உள்ளது. அங்கு இருக்கக் கூடிய பாடசாலைக் கட்டடங்கள் , வைத்தியசாலைகள் , கோயில்கள் மற்றும் மக்களுடைய வீடுகள் அனைத்தும் தரமட்டமாக்கப்பட்டு வெறும் நிலமாக தற்போது உள்ளது.

அது மக்கள் வாழ்ந்த வழமான நிலம் . அந்த நிலச் சொந்தக் காரர்களை நாளைக்கு கூட கொண்டு சென்று குடியமர்த்த முடியும். அந்த நிலத்தை சேர்ந்த 1700 மேற்பட்டவர்கள் மூதூரில் உள்ள 4 நலன்புரி முகாம்களில் சொல்லனாத்துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் கடந்த 8 வருடமாக குறித்த மக்களுக்கான நிவாரணமும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, குறித்த மக்களை உடனடியாக எந்த வித காரணங்களும் கூறாது அரசு மீள்குடியேற்ற முடியும்.

அதேபோல, யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கில் ஏறத்தாள 10 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு முதலாவது கட்டமாக மக்களிடம் வழங்க முடியும். ஏனெனில், அந்த நிலப்பரப்பிலும் கூட இராணுவம் இல்லை. இராணுவத்திற்கு சொந்தமானவை என எதுவும் இல்லை. எனவே முதற்கட்டமாக அந்த இடத்தில் மக்களை மீள்குடியேற்ற முடியும் இரண்டாவது கட்டமாக மிகுதியை மீள்குடியேற்றலாம்.

குறித்த விடயங்களைச் செய்வது என இலங்கை அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது என்பது மிகமிக முக்கியமானது . இவ்வாறு தீர்மானத்தை நிறைவேற்றினால் காலம் தாழ்த்தாது மக்களை குடியேற்ற முடியும். மாறாக இராணுவத்திடம் கேட்க வேண்டும், பாதுகாப்புப் பிரச்சினை என்று கூறினால் மீள்குடியேற்றத்தில் காலதாமதம் ஏற்படும்.

ஆகவே, நாங்கள் கேட்பது என்னவெனில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய வெறும் கட்டாந்தரையை முதல்கட்டமாக மக்களிடம் வழங்குங்கள் என்று தான்.

அதுபோல இராணுவ பயன்பாட்டுடன் இருக்கக் கூடிய மக்களுடைய காணிகளில் மீள்குடியேற்றம் இரண்டாம் கட்டமாக செய்ய முடியும். எனவே உடனடியாக அடுத்த ஒரு வாரத்திற்குள் மீள்குடியேற்றம் செய்யப்படக் கூடிய 2 இடங்களை நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். அதுபோல ஏனைய இடங்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதுகுறித்து பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளோம். எனவே உடனடியாக அக்கறை எடுத்துச் செயற்படுத்த வேண்டும்” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றத்தை புதிய அரசு விரைவுபடுத்த வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com