Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல் முறை மாற்றம், அரசியலமைப்புத் திருத்தம், தகவலறியும் உரிமை சட்டம் நிறைவேற்றம் உள்ளடங்கலாக மக்களுக்கு வழங்கிய சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தேர்தலொன்றை நடத்துவதையன்றி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதே மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

100 நாள் திட்டத்தை 200 நாளாக்கியாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட அமைச்சர், அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் அடங்கலான சட்டங்கள் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேர்தல் முறையை மாற்றிய பின்னரே அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும். சுதந்திரக் கட்சி செயலமர்வின் போதும் இதே கருத்தே முன்வைக்கப்பட்டது. கலப்பு தேர்தல் முறையினால் சில வேளை எனக்கு பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியாமல் போகலாம். ஆனால், தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாம் இருக்கிறோம். அடுத்த தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழே அநேகமாக நடைபெறும்.

தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக் கட்சியில் உடன்பாடு காணப்படுகிறது. ஆனால், கட்சி மத்திய குழுவிலே இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். 100 நாட்களின் பின் தேசிய அரசாங்கம் உருவாக்கினால் அந்த அரசில் மாத்திரம் 45 அமைச்சர்களை நியமிக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது.

நாம் தேர்தலின் போது வழங்கிய சகல உறுதிகளையும் நிறைவேற்றுவோம். தேர்தலை விட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியே முக்கியமானது. தகவலறியும் உரிமை, கணக்காய்வு சட்ட மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை ஜனாதிபதி அதிகாரம் குறைப்பு என சகல உறுதிகளும் நிறைவேற்றப்படும்.

100 நாள் தாமதமானதென்று மக்கள் எதிர்க்கமாட்டார்கள். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலே மக்கள் எதிர்ப்பார்கள். தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கட்சிகள் பலவும் விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் சட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to தேர்தல் முறை - அரசியலமைப்பு திருத்தங்களின் பின்னரே பாராளுமன்றத் தேர்தல்: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com