Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாஜ டெபாசிட் இழந்துள்ள நிலையில் தேமுதிக வாக்குகள் அக்கட்சிக்கு விழவில்லை என்பதையே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவு காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்தே தேமுதிக தலைமையிலான பாஜ கூட்டணியில் குழப்பம் நீடித்து வந்தது. பாஜ இந்த தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். பாஜ தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும் கூட்டணி கட்சியான எங்களை கலந்தாலோசிக்காமல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் தேமுதிக சார்பிலும் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது.

மேலும் பாஜ வேட்பாளருக்கு ஆதரவு என தேமுதிக சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பாஜ தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து சமாதானம் செய்ததோடு தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக தேமுதிக தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள் எனவும் கூறப்பட்டது. முதலில் விஜயகாந்த் வருவார் என கூறியவர்கள் இறுதியில் பிரேமலதா வருவார் என கூறினர். ஆனால் இருவரும் வரவில்லை.

மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே பாஜ வேட்பாளரோடு பிரசாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் அதிக அளவில் வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜ வேட்பாளர் சுப்பிரமணியன் 5015 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 16, 522 வாக்குகளை பெற்றார். அதே தேர்தலில் பாஜ வேட்பாளராக களம் இறக்கப்பட்ட மாநகர் மாவட்டத் தலைவர் பார்தீபன் 4, 878 வாக்குகளை பெற்றார். தேமுதிக மற்றும் பாஜ இணைந்து சுமார் 21, 300 வாக்குகள் பெற்று இருந்தனர். அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட பரஞ்சோதி 89, 135 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

கடந்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தது. அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா 1, 05, 328 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் பாஜ வேட்பாளர் அறிவழகன் 2, 017 வாக்குகளும், ஐஜேகே வேட்பாளராக களம் இறக்கப்பட்ட தமிழரசி 1221 வாக்குகளும் பெற்றார்.

தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளர் சுப்பிரமணியனுக்கு தேமுதிக மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்த நிலையிலும் அவர் 5015 வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளார். எனவே தேமுதிக மற்றும் ஐஜேகே கட்சிகள் தங்களை புறக்கணித்ததோடு காலையும் வாரிவிட்டு விட்டதாக பாஜகவினர் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

0 Responses to காலை வாரியது தேமுதிக; பாஜக நிர்வாகிகள் புலம்பல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com