Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அழுத்தங்களை இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அமெரிக்கா உதவி இராஜாங்கச் செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வாலுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளருடனான இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது. நடைபெற்று முடிந்த தேர்தல் குறித்தும் அதன் பின்னரான நிலைப்பாடுகள் குறித்தும் நாம் விரிவாக எடுத்துக்கூறினோம். குறிப்பாக, இந்தப் புதிய அரசு முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. ஊழலை இல்லாதெழித்தல், ஜனநாயகத்தை மீள உருவாக்குதல், நல்லாட்சியைத் தோற்றுவித்தல் போன்ற செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நடைபெற்று முடிந்த தேர்தலில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களது எதிர்பார்ப்புகள் இந்த அரசின் ஊடாக பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

இராணுவத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகள் பெருமளவானவை அவர்களது பயன்பாட்டில் இல்லை. இவ்வாறான காணிகளை உடனடியாக விடுவித்து அந்த இடங்களில் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஏனைய காணிகளையும் விடுவித்து மக்களை முழுவதுமாக குடியமர்த்தவேண்டும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்கு அமெரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் படிப்படியாக தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் நிஸாவிடம் எடுத்துக் கூறினோம்.

அத்துடன், மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் எந்தவித தடங்கல், தாமதம் இன்றி முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் கோரினோம்.

எமது கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட அவர் இது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா தெரியப்படுத்தும் என்றும் உறுதியளித்தார். அத்துடன், இலங்கை குறித்து இடம்பெறும் விசாரணைகள் முடிவடைந்திருப்பின் அந்த அறிக்கை ஜெனிவாவில் அடுத்த மாதம் கூடவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படலாம். அது குறித்து மனித உரிமை ஆணையாளர் நடவடிக்கை எடுப்பார் எனவும் நிஸா பிஸ்வால் பதிலளித்தார்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com