Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழுத்தலைவர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி முன்னிலை சோசலிசக் கட்சி தாக்கல் செய்த மனுவொன்றை நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் விசாரணைகளின் முடிவில் குறித்த மனுவை தள்ளுபடி செய்தது.

நேற்றைய விசாரணையின் போது, குமார் குணரத்தினம் நோயெல் முதலிகே என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ள காரணத்தினால் அவரது இலங்கைக் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பயணத்துக்காக எனக் காரணம் கூறி, விசா பெற்று கடந்த டிசம்பர் மாதம் இலங்கை வந்த அவர் விசா விதிமுறைகளை மீறி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு பின்பு, அவர் சட்ட விரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருக்கின்ற காரணத்தினால் அவரை நாடு கடத்துவதற்கு குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்கு சட்ட ரீதியான அதிகாரங்கள் இருப்பதாகவும் அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அரச தரப்பின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுப்படி செய்வதற்கு தீர்மானித்தனர். அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை தனது கட்சி கண்டிப்பதாக முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டினார்.

கடந்த அரசாங்கத்தின் செயல்கள் காரணமாக நாட்டை வீட்டு தப்பியோடிய நபர்களை மீண்டும் நாடு திரும்புமாறு தற்போதைய அரசாங்கம் அண்மையில் வேண்டுகோளொன்றை விடுத்திருந்தது.

ஆயினும், இலங்கையில் தங்கி, அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க விரும்பும் குமார் குணரத்தினம் போன்றவைகளை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை ஏற்க முடியாதென்று கூறிய துமிந்த நாகமுவ, இவ்வாறான செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

0 Responses to குமார் குணரத்தினத்தை நாடு கடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com