Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை அனுமதி பெறப்படாமல், வெளிப்படைத் தன்மையின்றியே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சட்டத்திற்கு முரணாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலோ அல்லது மோசடிகளோ, நாட்டிற்கு பாதகமான நிபந்தனைகளோ இருந்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நேற்றைய பாராளுமன்ற அமர்வுகளின் போது அறிவித்துள்ளார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

“கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் கடந்த அரசாங்கம் உரிய விதத்தில் முறையாக முன்னெடுக்கவில்லை. இது குறித்து நாம் சபையில் பல தடவைகள் கேள்வியெழுப்பியிருந்தோம். உரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அது குறித்து அறிக்கையை சபையில் முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் 11 மாதங்களாகியும் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. துறைமுக நகரம் குறித்த ஆய்வறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதாக முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவும் அறிவித்த போதும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் வரை எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. வெளிப்படைத்தன்மையின்றியே துறைமுகநகரம் தொடர்பான திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவசியமான பல விடயங்களை நிறைவு செய்யாமலும் அமைச்சரவை அனுமதி பெறாமலும் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது. சூழல் அறிக்கை பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உரிய பதில் வழங்கப் படவில்லை. ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த சகல விடயங்கள் குறித்தும் நாம் ஆராய்ந்தோம். இந்த கொடுக்கல் வாக்கல் சந்தேகத்திற் கிடமானது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. துறைமுக நகரம் குறித்த சகல அறிக்கையும் கடந்த அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு வழங்காமல் மறைத்தது.

இதனால் அஜித் த கொஸ்தாவின் தலைமையில் நிபுணர் குழுவொன்றை நான் நியமித்திருக்கிறேன். அந்த குழுவின் அறிக்கையை ஆராய்ந்து தேவையான மேலதிக ஆய்வுகளையும் செய்து உரிய முடிவை எடுக்க எனது தலைலமையில் அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களும் துறைமுக நகரம் குறித்து ஆழமாக ஆராய்ந்து தேவையான விடயங்களைத் திரட்டும் சகல பக்கம் குறித்தும் கவனமாக ஆராயப்படும். இந்தத் திட்டம் குறித்த மக்களின் முறைப்பாடுகள் சூழல் அமைப்புக்களின் கருத்துக்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும்.

துறைமுக நகர திட்டத்தை நிறுத்த முடிவு செய்யப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்திருந்தார். நிபுணத்துவ குழுவின் அறிக்கை மற்றும் விசாரணை மூலம் கிடைக்கும். தகவலினடிப்படையில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். எடுக்கப்படும் முடிவு தொடர்பில் பாராளுமன்றத்துக்கும் அறிவிக்கப்படும். உண்மை நிலைமை பாராளுமன்றத்திக்கு மறைக்கப்பட்டதாலேயே இந்தப் பிரச்சினை பூதாகரமானது.

இந்தத் திட்டம் குறித்து நானும் ஜனாதிபதியும் சீனத் தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். இரு நாட்டு அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ அரசாங்க நிறுவனங்களோ கம்பனியோ யார் மோசடியுடன் தொடர்புபட்டிருந்தாலும் அவர்களுக்கு எந்த மன்னிப்பும் வழங்கப்படாது. இலங்கையோ சீனாவோ மோசடி இலஞ்சங்கள் என்பவற்றுடன் தொடர்புள்ள நபர்களைப் பாதுகாக்காது. இலங்கை மட்டுமன்றி சீனாவும் இலஞ்ச மோசடியுடன் தொடர்புள்ளவர்கள் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to அமைச்சரவை அனுமதியின்றியே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முன்னெடுப்பு: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com