Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் சம உரிமை, ஜனநாயகம் பெற்று வாழ வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது. அதற்கு, 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்தியப் பிரதமருக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

“இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் இரு நாட்டுக்குமிடையில் பயணிக்கும் போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம், சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவிகளைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தம், இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம், ரவிநாத் தாகூர் மன்றத்தை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம்.” ஆகிய ஒப்பந்தங்களே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய இந்தியப் பிரதமர், ”எனக்கு இலங்கை அளித்த வரவேற்பு பெருமகிழ்ச்சி அளித்துள்ளது. திருகோணமலையை பிராந்தியத்தின் எரிபொருள் மத்திய நிலையமாக மாற்ற இந்தியா இலங்கைக்கு உதவும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், இலங்கையில் பௌத்தம் வந்த நாளில் இருந்தே தொடர்புள்ளது. மீனவர்களின் பிரச்சினைக்கு இருத்தரப்பிலும் நிரந்தர சுமூகமான தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும். இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும். சம்பூர் அனல்மின் நிலையம் இலங்கையின் மின்சக்தி தேவைக்கு உதவியாக இருக்கும். இலங்கை - இந்திய உறவின் இதயம் மக்கள், அதனால் ராமர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் திகதி இராமாயண ரயில் சேவை ஆரம்பிக்கப்படும்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, ஜனநாயகம் பெற்று வாழ வேண்டும் என இந்தியா விரும்புகின்றது. அதற்கு 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றது. இவ்விடயங்களில் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க இந்தியா என்றைக்குமே தயாராக இருக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்: இலங்கையில் மோடி தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com