Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுறுத்தி அதிகாரங்களை பாராளுமன்றத்துடன் பகிரும் முகமாக முன்வைக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலம் ஏற்கனவே நிறைவேற்றப்படுவதற்கான திகதிகள் குறிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை 19வது திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதம் ஆரம்பித்தது. விவாதம் இன்றும் தொடர்ந்து மாலை 06.00 மணியளவில் வாக்கெடுப்புக்கு விடப்படும். இதன்போது, 19வது திருத்தச் சட்டமூலம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளும் 19வது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளன.

இலங்கைப் பாராளுமன்றத்தில் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், 37 வருடங்களாக தொடரும் பதவியொன்றின் அதிகாரம் முதற்தடவையாக குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு 19வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதனூடு சாத்தியமாகும்.

0 Responses to 19வது திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று; 37 வருடங்களின் பின் வரலாறு மாறுமா?!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com