Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பல கோடி ரூபாய்கள் மோசடி இடம்பெற்றிருப்பதாக விசாரணைகளின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது.

இதனையடுத்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகின்றது.

ஊழலுகெதிரான வழக்கறிஞரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.சி. வெலியமுன தலைமையிலான விசாரணைக் குழு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தொடர்பில் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையிலான இறுதி அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 150 பக்க அறிக்கையின்படி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சேவை அடிப்படையிலான ஒப்பந்தங்கள், தகுதியற்ற சேவையாளர்களின் ஆட்சேர்ப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் பாரிய ஊழல், மோசடிகள் இடம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இளம் விமான பணிப்பெண்களுக்கு கூடுதல் சலுகைகளை பெற்றுக் கொடுத்தமையே நிறுவனத்தை பாரிய கடன் நிலைமைக்கு இட்டுச் சென்றிருப்பதாக விசாரணையை மேற்கொண்ட குழு கண்டறிந்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமானங்களின் எண்ணிக்கையை சீரமைக்கும் நோக்கில் நிதி நிலைமையை கவனத்திற் கொண்டு இலாபகரமான விமான கொள்வனவினை மேற்கொள்வதனை விடுத்து 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய புதிய ரக விமானத்தை கொள்வனவு செய்தமையும் நிறுவனத்தின் பொருளாதார நிலைமையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக வெலியமுனவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரான முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க விமானங்களின் எண்ணிக்கையை சீரமைப்பதற்காக முன்னெடுத்த நடவடிக்கை குறித்து கிரிமினல் விசாரணைகளை முன்னெடுத்து அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் வெலியமுனவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் பல கோடி ரூபா ஊழல், மோசடிகள் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. மேலதிக நடவடிக்கைகள் எடுப்பது பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் உட்பட்ட விடயமாகுமென ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் அஜித் டயஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்த விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க, முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோர் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதோடு, விமானச் சேவை ஒப்பந்தங்களையும் கையாடி உள்ளதாக தெரியவந்துள்ளது.

நிதிக் கையாடல், தகுதியற்றோரை வேலைக்குச் சேர்த்தல் விமான பணிப் பெண்ணுக்கும் “கபின்” அறை, ஊழியருக்கும் அதிக சம்பளம் வழங்குதல், அரசியல் நடவடிக்கைகளுக்கும் மோசடிகளுக்கும் விமானச் சேவை ஊழியர்களை பயன்படுத்தல், உறவினர்களுக்கு சலுகை வழங்குதல் என பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரான முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க பல பில்லியன் டொலர்களை கையாடல் செய்துள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சீ. வெலி அமுனவின் தலைமையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது. எமது விசாரணை அறிக்கையை பிரதமருக்கும் அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கும் தாம் சமர்பித்துள்ளதாக எயார்லைன்ஸ் தலைவர் அஜித் டயஸ் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை நாம் மேற்கொள்ளவில்லை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நியமித்த விசாரணைக் குழுவே விசாரணைகளை மேற்கொண்டது என்றும் அஜித் டயஸ் மேலும் குறிப்பிட்டார். வெலி அமுன அறிக்கை பிரதமரால் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரெஜினோல்ட் குரே விரிவான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்குமாறு பிரதமரினால் கோரப்பட்டுள்ளதாகவும் விமான சேவை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

0 Responses to ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பல கோடி மோசடி; முன்னாள் தலைவர் விரைவில் கைது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com