பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடு சென்றிருந்த கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பினார். அதன்பின் நேற்று காலை கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினார். இதனையடுத்து, அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, காலை 11.00 மணியளவில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, கலகொட அத்தே ஞானசார தேரர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வழக்கை விசாரித்த பிரதான நீதிவான் தேரரை, 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும், 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலைசெய்யும்படி தீர்ப்பளித்தார். இந்நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்னாள் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில், கலகொட அத்தே ஞானசார தேரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தவிடப்பட்டிருந்தது.
0 Responses to பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கைதாகி பிணையில் விடுதலை!