Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய தேர்தல் சீர்திருத்தத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது ஐந்து வருடத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளுக்கும் நன்மையளிப்பதாகவே புதிய தேர்தல் முறை அமைய வேண்டும் என குறிப்பிட்ட பிரதியமைச்சர், அவசர அவசரமாக அன்றி ஐந்து வருடங்களின் பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்முறை மட்டுமன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “விருப்பு வாக்கு முறைக்கு ஐ.தே.க. ஆதரவளிக்காது. தொகுதி அடிப்படையாகக் கொண்ட புதிய தேர்தல் முறையை ஆதரிக்கிறோம். எனினும் அவசரம் அவசரமாக எதையாது கொண்டு வந்து நிறைவேற்ற நினைத்தால் அதற்கு நாம் இணங்க முடியாது.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கிணங்க 100 நாட்களுக்கு மேல் ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது. பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்தவே நாமும் கோருகிறோம்.

பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் பெரும்பான்மை எமக்குக் கிடைத்தாலும் தனியே அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம் எமக்கில்லை. ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்துக் கொண்டு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே எமது எதிர்பார்ப்பு.” என்றுள்ளார்.

0 Responses to 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும், 5 வருடங்களின் பின்னரே அமுலுக்கு வரும்: அஜித் பி. பெரேரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com