Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ பௌத்த விகாரையை அரசியல் மையமாக பயன்படுத்துவது அருவருக்க வைக்கின்றது. அத்தோடு, அது பௌத்த கலாசாரத்தை சீரழிக்கும் நடைமுறையாக உள்ளது என்று துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கு தெரிவித்துள்ளார்.

அத்தனகல்லவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விவசாய ஆராய்ச்சித் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அர்ஜூன ரணதுங்கு தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெளத்த கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் நடந்துகொள்கிறார். சுதந்திரக் கட்சி தொடர்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்க முடியும். கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப முயற்சிக்கையில் அவர் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்.

சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்குக் கூட ஜனாதிபதி கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் எவருக்கு எதிராகவும் தண்டனை வழங்கவில்லை. இருந்தபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலர் ஏசுகின்றனர்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விரும்பிய கிராமத்துக்குச் சென்று அல்லது விரும்பியவர்களின் வீடுகளுக்குச் சென்று மக்களைச் சந்திப்பதற்கான ஜனநாயகம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் போல் அல்லாது விரும்பிய இடத்தில் எவருக்கும் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷ பெளத்த விகாரைகளுக்குச் செல்லும்போது அங்கு மக்களை அழைப்பித்து அவர்களைச் சந்தித்து அரசியல் செய்வது கட்சி செயற்பாடுகளை மாத்திரமன்றி பெளத்த கலாசாரத்தையும் சீரழிக்கும் நோக்கில் அமைந்துள்ளது.

பன்சலைகளில் சாது சாது என்று கூறுவதையே கேட்டுள்ளோம். மஹிந்த செல்லும் பன்சலைகளில் தற்பொழுது ஜயவேவா, ஜயவேவா என மக்களால் குரல் எழுப்பப்படுகிறது. அவருடைய பெளத்த விகாரை அரசியல் அருவருக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to பௌத்த விகாரையை மையப்படுத்தும் மஹிந்தவின் அரசியல் அருவருக்க வைக்கிறது: அர்ஜூன ரணதுங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com