Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆதங்கத்துடன் நபரொருவர் வெளியிடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு,

விண்ணப்பக் கடிதங்கள்:

காணாமல் போனோரின் உறவினர்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் கடிதங்கள் பிரதேச மாவட்ட ரீதியாக கோப்பில் வைக்கப்படுகின்றன. எல்லா கடிதங்களுக்கும் ஒரு சுட்டுஎண் கொடுக்கப்படும்.

உண்மையில் இதுவரை ஒன்பதாயிரம் அளவிலான விண்ணப்ப கடிதங்களே கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் 19000 அளவில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக ஆணைக்குழு தெரிவிக்கிறது.

இது எவ்வாறெனில் ஒரே விண்ணப்பத்துக்கு இரு முறை அல்லது மும்முறை சுட்டுஎண்கள் கொடுக்கப்படுவதே ஆகும்.

கணனிப் பதிவு:

ஆணைக்குழுவுக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கும். அவை ஆங்கில மொழி மாற்றம் செய்யப்பட்டு கணனியில் பதிவு செய்யப்படும். ஓரிரு தமிழரை தவிர பணி புரியும் எல்லோரும் சிங்கள இனத்தவர். தமிழ் அறியாதவர்கள்.

அவர்கள் தமக்கு புரிந்த வகையில் பதிவு செய்வார்கள். அக்கடிதங்களில் எவ்வாறு அந்த சூழலில் காணாமல் போனார்கள் போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட மாட்டாது. பெயர், விலாசம் போன்ற பொதுவான தகவல்களே பதிவு செய்யப்படும்.

காணாமல் போனவர் முன்னாள் போராளி எனில், அது முக்கியமான விண்ணப்பமாக கருதப்படாது. எனினும் மொழி அறியாதவர்களினால் மொழி பெயர்க்கப்படுவதால் அவை பதிவு செய்யப்படும்.

காணாமல் போனவர் இராணுவத்தால் அல்லது கடல் படையினரால் கடத்தப் பட்டிருந்தால் அத்தகவல் வேறு விதமாகவே பதியப்படும். ஏனெனில் முன்னாள் ஜனாதிபதிக்கு சாதகமாகவே காரியங்கள் முன்னெடுக்கப் படுகின்றன.

ஆணையாளர்கள்:

ஆணைக்குழு 3 உறுப்பினர்களை கொண்டது. ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர். மற்றைய இருவரில் ஒருவர் தமிழ் பெண்மணி. அம்மையாருக்கு தமிழை விட சிங்களம் பேசுவதிலேயே விருப்பம் அதிகம்.

அவரும் மொழிபெயர்க்கப்பட்ட கடிதங்களையே வாசிப்பார். மற்றவர் ஒரு சிங்கள பெண். இம்மூவரும் ஒரு நாளும் ஒரு விண்ணப்பத்தை கூட ஒழுங்காக பார்த்ததில்லை. அவர்கள் அலுவலகத்துக்கு வருவதே வாரம் இரு முறை தான்.

இவர்கள் மூவரும் எப்போதும் பத்திரிகை பார்ப்பதிலும் தங்கள் சௌகரியங்களை பார்ப்பதிலும் சம்பளத்தை எடுப்பதிலுமே குறியாக இருப்பார்கள்.

ஆணைக்குழுவின் தலைவர் மிகவும் வயதான ஒரு இதய நோயாளி. சமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர். அவர் சில மணி நேரம் வந்து அமர்ந்து விட்டு போவதைத்தவிர வேறு எதையும் செய்வதில்லை.

சில நேரங்களில் பத்திரிகை பேட்டிகளுக்கு முகம் கொடுப்பார். அப்போது எம் சக ஊழியர் ஒருவரே அவருக்கு தேவையான விடயங்களை எடுத்துரைக்க வேண்டும்.

செயலாளர்:

இவரும் ஒரு சிங்களவர். அதனால் எல்லா கடிதமும் மொழி பெயர்க்கப்பட்ட பின்னரே செயலாளரால் வாசிக்க முடியும். அவர் கிடைத்துள்ள பதவியினால் தனக்கு கிடைக்கும் சௌகரியங்களுக்கு மட்டுமே வாழ்பவர்.

அலுவலகத்தில் 75 விகிதமானோர் அவரது குடும்பத்தை அல்லது ஊரை சேர்ந்தவர்கள்.முன்னாள் ஜனாதிபதியின் விசுவாசி.

பொது சன அமர்வு:

பொது சன அமர்வுகள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் நடாத்தப்படும். அப்போது ஒன்று அல்லது இரண்டு கிராம சேவை பிரிவுக்குட்பட்ட பிரிவுகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படும்.

4 நாட்களுக்குள் விசாரணை செய்ய முடிந்த அளவிலேயே இவை தெரிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரருக்கு அழைப்பு அனுப்பப்படும். ஆனால் பொதுசன அமர்வு நாட்களில் ஏற்கனவே விண்ணப்பித்த மற்றைய விண்ணப்பதாரர்களும் விளக்கமின்றி வருவார்கள்.

அவர்களுக்கான விசாரணை பிறிதொரு நாளிலேயே நடக்கும். ஏனெனில் அவர்கள் இக்குறிப்பிட்ட அமர்வுக்கு விசாரணைக்காக அழைக்கப்படாதோர். ஆயினும் அவ்வாறானவர்களுக்கு ஒரு புதிய சுட்டு எண் கொடுக்கப்படும். அவர் ஒரு புதிய விண்ணப்பதாரராக பதியப்படுவார்.

அவ்வாறே விண்ணப்பங்களின் தொகை 19000 ஆகியுள்ளது. மக்கள் தம்மை விரும்புகிறார்கள் எனக் காட்டிககொள்ளும் ஒரு வித செயற்பாடே இது.

பொதுசன அமர்வுகளில் ஆணையாளர்கள் தூங்குகிறார்கள் என்று ஒரு பெண்மணி கூறியிருந்தார். அது உண்மையே ஆகும். அவர்கள் மூவரும் வெகு சொகுசாக விமானத்தில் வந்து இறங்கி அங்கு இருக்கக் கூடிய அதி வசதியான விடுதிகளில் தங்குவார்கள். அவர்களுக்கான உணவு மிக விசேடமாக தயாரிக்கப்படும்.

அவர்கள் மூவரும் ஒரு சுற்றுலா பயணத்தை அனுபவிப்பதை போன்று அனுபவிப்பார்கள். அவர்களை பொறுத்தவரை காணாமல் போனவரின் ஊரையும் பெயரையும் எப்போது காணாமல் போனார் என்பதை மட்டும் அறிந்தால் போதுமானது.

இத்தகவல்கள் ஏற்கனவே விண்ணப்பத்தில் இருப்பன. திரும்ப திரும்ப கேட்டு சரி பார்ப்பார்கள். அத்தோடு அவர்கள் விசாரணை முடிந்துவிடும். இவற்றை மொழி பெயர்த்து சொல்வதற்கும் ஒருவர் தேவை.

அத்தோடு அவர்கள் விடுதலை புலிகளை சேர்ந்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து வரும் கடிதங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு போதும் காணாமல் போன எவரையாவது தேடி கண்டு பிடிக்கும் நோக்கம் கிடையாதவர்கள்.

பொதுசன அமர்வு பற்றி நீங்கள் அங்கு வரும். உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகையாளர்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். மனித உரிமை செயட்பாட்டாளர்களும் அங்கே வருகை தருவார்கள்.

இந்த ஆணைக்குழு இன்னும் கணனி பதிவிலேயே இருக்கிறது. அதைத் தாண்டி வேறு நடவடிக்கைகள் நடைபெறவில்லை.

தமிழர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்று.

thavayogi231@gmail.com

0 Responses to நாம் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம்! ஆதங்கப்படும் ஒரு தமிழன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com