Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க காணாமற்போயிருப்பதாக நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளுக்கு வருமாறு அழைப்பாணையை வழங்குவதற்காக ஆணைக்குழுவின் அதிகாரிகள் கல்கிஸ்சையிலுள்ள நிஷாந்த விக்ரமசிங்கவின் வீட்டுக்குச் சென்றபோது, தனது கணவரை கடந்த மூன்று வருடங்களாகத் தான் காணவில்லையென அவருடைய மனைவி பதிலளித்துள்ளார்.

அத்துடன் கணவருக்காக அழைப்பாணையை பொறுப்பெடுப்பதற்கும் அவர் மறுத்திருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசவள மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் உள்ளிட்டவை தொடர்பில் விசாரணகளை நடத்திவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, ஸ்ரீலங்கன் கேட்டறிங் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் நிஷாந்த விக்ரமசிங்க ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்தவிருப்பதாக அறிவித்திருந்தது.

நிஷாந்த விக்ரமசிங்கவை ஒக்டோபர் 30ஆம் திகதி அழைத்திருப்பதாக ஆணைக்குழு கூறியிருந்தது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஸ்ரீலங்கன் கேட்டறிங் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. இது தொடர்பில் இந்த இரண்டு நபர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

இருந்தபோதும், நேற்றையதினம் (புதன்கிழமை) நிஷாந்த விக்ரமசிங்க ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆஜராகத் தவறியுள்ளார். இந்த நிலையிலேயே அழைப்பாணையை வழங்குவதற்கு ஆணைக்குழு அதிகாரிகள் அவருடைய வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிகவும் நெருங்கிய உறவினரான (னைத்துனர்- மனைவின் சகோதரர்) விக்ரமசிங்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட பாரிய மோசடிகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இவருடைய காலப் பகுதியில் இந்நிறுவனத்தில் பாரிய குழறுபடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

(தினகரன்)

0 Responses to மஹிந்தவின் மைத்துனர் நிஷாந்தவை 3 வருடங்களாக காணவில்லை; மனைவி தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com