Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மைத்திரி ரணில் தலைமையிலான ஆட்சி அமைந்து பத்து மாதங்கள் ஆகின்றன. நல்லாட்சிக்கான அரசாங்கம் என்றே அழைக்கப்படுகிறது.

முன்னைய ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் நடத்திவந்த தவறான பாதையிலான சர்வாதிகாரம் முடிவிற்கு வந்தமை நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மையான விடயமாகும்.

ஆனால் அந்த இடத்திற்கு வந்துள்ள மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் எனப்படுவது அடிப்படைப் பிரச்சினையான பொருளாதாரப் பிரச்சினைக்கும்,

பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கும் எத்தகைய தீர்வுகளை முன்வைக்கப் போகின்றது என்பதே எழுந்து நிற்கும் கேள்விகளாகும்.

பொருளாதாரப் பிரச்சினைக்குரிய அளவுகோலாக முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தைக் காணலாம். ஆனால் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை எதனை அளவு கோலாகக் கொண்டு காண்பது என்பது எவருக்கும் புரியவில்லை.

புதிய அரசியலமைப்புப் பற்றிச் சொல்லப்படுகிறதே தவிர திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படவில்லை. அதனால் தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வு அவ்வாறான புதிய அரசியலமைப்பில் எவ்வாறான இடத்தில் உரியவாறு முன்வைக்கப்படுமா என்பது ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியதாகும்.

ஏனெனில் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் ஆட்சி அதிகார பீடத்திற்குப் புதியவர்கள் அல்லர். அல்லது இதுவரையான பட்டறிவின் மூலம் புதிய சிந்தனைத் தடத்தில் வழிநடக்கத் தங்களைத் தகவமைத்து நிற்பார்களா என்பதும் கேள்விக்குரியதாகும்.

அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜயப்பானுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டு நான்கு நாட்கள் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

அங்கு யப்பானியப் பாராளுமன்றத்தில் உரையாற்றவும் செய்தார். அவ்வுரையின் போது தங்களது அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அப்படி ஒருபேச்சுவார்த்தை பற்றிய தகவல்களோ செய்திகளோ வந்ததில்லை. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்நிலைத் தலைவர்களான இரா.சம்பந்தன் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் என்போருடன் அரசாங்க உயர் மட்டத் தலைவர்கள் உள்ளார்ந்த நெருக்கத்தின் அடிப்படையில் ஏதாவது பேசி இருக்கக் கூடும்.

இது பற்றி ஏனைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஏனையோருக்கோ தெரிந்ததாகவும் அறியமுடியவில்லை. அவ்வாறு தெரிந்திருப்பதற்கு நியாயமும் இல்லை.

காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குப் பெட்டிகளை நிரப்பும் அரசியலை முன்னெடுத்துப் பதவிகளைப் பெறுவதற்கு மட்டுமே அன்றி தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளுக்கோ அன்றி அபிலாஷைகளுக்கோ அல்ல என்பதே அடிப்படை உண்மை நிலையாகும்.

எனவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பற்றி மீண்டும் மீண்டும் அரசியல் அலசல் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த ஜனவரி 8 ஆம் திகதிய ஜனாதிபதித் தேர்தல் வரை எதிர்ப்பு அரசியல் எனக்கூறி ஆங்காங்கே சில நடவடிக்கைகளைத் தனியாகவும் ஏனைய எதிர்ப்பு சக்திகளுடனும் முன்னெடுத்து வந்த த.தே.கூட்டமைப்பானது புதிய ஆட்சியின் வரவோடு இணக்க அரசியல் எனக்கூறி ஐக்கிய தேசியக் கட்சியுடனும் மைத்திரி ரணில் ஆகியோருடனும் கைகோர்த்து நெருக்கமாகிக் கொண்டனர்.

கடந்த பொதுத் தேர்தலில் பெயரளவில் சமஷ்டி என உச்சரித்துக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இணக்க அரசியலுக்கும் தமது இதயங்களுக்கு நெருக்கமான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்துடன் நிபந்தனை இன்றி ஒத்துழைக்கவும் தமிழ் மக்களிடம் ஆணை கேட்டனர்.

போராட்டங்களாலும் யுத்தத்தினாலும் இழப்புக்களையும் தாங்க முடியாத சோகங்களையும் தாங்கி நின்ற வடக்கு, கிழக்கின் தமிழ் மக்கள் ஒரு தற்காலிக ஆறுதல் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெருமளவு வாக்குகளை வழங்கி பதினாறு உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இவ் ஆணையானது தமது இணக்க அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம் எனக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் தெற்கிலே இணக்க அரசியலில் வெகு ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ் இணக்க அரசியலால் வடக்கு, கிழக்கு மக்கள் பெற்றுக் கொண்டவை குறிப்பிடத்தக்கவை என்று கூறிவிட முடியாது. ஆனால், சில மேலெழுந்தவாரியான செயற்பாடுகளுக்கு அப்பால் மக்கள் எதிர்நோக்கிவந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்படவில்லை.

இவை பற்றி கூட்டமைப்பினர் எவ்வித எதிர்ப்புக் குரலையும் நடவடிக்கை ரீதியில் முன்னெடுப்பதும் இல்லை. மீள்குடியேற்றம், இராணுவப் பிடியில் உள்ள நிலங்கள் மீட்பு, அரசியல் கைதிகளின் விடுதலை,

காணாமல் போனோர் பற்றிய தகவல் பெறுதல், வடபுலத்து மீனவர்களின் பிரச்சினை மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள், பெண்கள், சிறுவர்கள் எதிர்கொண்டு நிற்கும் அவலங்கள் போன்றவற்றுக்கு இவர்களது இணக்க அரசியலால் எத்தகைய வேலைத் திட்டங்களையோ அல்லது கோரிக்கைகளையோ அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை என்பது பரவலான அதிருப்தியாகப் பேசப்படுகிறது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான அதிருப்தி தெரிவிப்போர் மத்தியில் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்படுகிறது.

அதாவது மைத்திரி ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியும் பெற்று மிக நெருக்கமான இணக்க அரசியல் நடத்திவரும் சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோரால் ஏன் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட முடியவில்லை என்ற ஆதங்கம் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய முதலமைச்சரை அன்றைய முதலமைச்சர் வேட்பாளராக வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு அழைத்துவந்து நிறுத்தியவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர்களான சம்பந்தனும் மாவை சேனாதிராசாவும், எம்.ஏ.சுமந்திரனுமாவர்.

 மாவை உட்பட முக்கிய தலைகளையெல்லாம் தடவி அமர்த்தி முன்னாள் நீதியரசரை விடாப்பிடியாகக் கொண்டு வந்தவர் சம்பந்தன் ஐயா ஆவார்.

அன்று சி.வி. விக்னேஸ்வரன் பற்றிக் கூறும்போது அவரது நேர்மை, ஆற்றல், ஆளுமை, தோற்றப் பொலிவு, நாவன்மை, மக்கள் மீதான பற்றுறுதி என நீட்டி வாசித்துக் கொண்ட சம்பந்தன் இப்போது முதலமைச்சரை ஏறெடுத்துப் பார்ப்பதைக் கூட விரும்பாது இருந்து வருவதைக் காணமுடிகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்ற பின்பு முதல் தடவையாக யாழ்ப்பாணம் சென்ற சம்பந்தன், அவ்வேளை யாழ்ப்பாணத்தில் இருந்த முதலமைச்சரை சந்தித்துப் பேசாது மிகுந்த வக்கிரத்துடன் அங்கிருந்து திரும்பிய நிகழ்வு மோதலின் உச்சத்தை எடுத்துக் காட்டியிருக்கிறது.

மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் இவ்வாறு நடந்து கொண்டமை கடும் விமர்சனத்தை தமிழ்த் தேசிய வாதிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இது தெற்கே இணக்க அரசியலும் வடக்கே முதலமைச்சர் மீதான எதிர்ப்பு அரசியலும் என்பதை வெளிப்படுத்துவதாகவே காணப்படுகிறது.

 ஏற்கனவே வடக்கின் முதலமைச்சருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முறுகல் நிலை ஏற்பட்டு நேரில் சந்தித்த வேளையிலும் பேச்சல் பறச்சல் அற்ற முறிவு நிலை ஏற்பட்டுவிட்டது.

இதன் தொடர்ச்சி தான் சம்பந்தன் முதலமைச்சர் முறிவாக வளர்ச்சி பெற்றுள்ளது என்றே நம்ப இடம்உண்டு.

அப்படியானால் ஒரே இயக்கத்திற்குள் உடைவைக் கொண்டுவந்து கருணாவைப் பிரித்தது தமது இராஜதந்திரம் என்றும் அதில் ரணிலின் சாணக்கியம் வெற்றிபெற்றது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கூறியமை இப்போது நினைவு கூரவேண்டியேயுள்ளது.

பிரித்து ஆள்வதில் பிரித்தானிய கொலனியவாதிகள் மட்டுமன்றி பேரினவாதிகளும் திறமையானர்கள் என்பது தென்னிலங்கையின் ஆளும் வர்க்க அரசியலில் நீடித்து வந்த விடயமாகும்.

அதேபோன்று தமிழ்த் தேசியத்தைக் குறுந்தேசியமாக முன்னெடுத்து வந்தோர் மக்கள் நலன்களை விடத் தமது பதவிகள் மூலமான ஆதிக்க அரசியல் பிடியைத் தொடர்வதில் வல்லவர்களாக இருந்து வந்துள்ளனர்.

வடக்கில் முதலமைச்சர் அதிகப்படியான வாக்குகள் பெற்று பதவி ஏற்றுக் கொண்ட பின் தன்னளவில் தனது நம்பிக்கைகளின் அடிப்படையில் நேர்மை என்பதையும் மனச்சாட்சி என்பதையும் பேணிக் கொள்ள வேண்டும் என்பதில் மும்முரம் காட்டினார்.

அவர் ஆரம்பம் முதல் முன்வைத்து வந்த கருத்துக்களில் பலமுற்போக்கான அம்சங்கள் காணப்பட்டன. அவற்றை உறுதியாக முன்னெடுப்பதற்கு அவருடன் அணிசேர்ந்த மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் எந்தளவிற்கு ஒத்துழைத்தனர் என்பது ஆராயப்படவேண்டியதாகும்.

முதலமைச்சர் மீது வைத்திருந்த உயர்ந்த நல்லெண்ணம் சுன்னாகம் கழிவு எண்ணெய் கிணறுகளில் கலந்த விடயத்தில் அவர் முன்வைத்த கருத்துக்களால் சிதைவடைந்து கொண்டது.

இதில் அமைச்சர்களில் சிலரும் அதிகாரிகளும் முதலமைச்சரை தகவல் தவறுகளுக்கு உட்படுத்தினர் என்றே கூறப்படுகிறது.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒரு நிலைப்பட்ட கொள்கை, கோட்போடு கிடையாது. வெறுமனே தமிழ்த் தேசியம் என்பதன் ஊடாகத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பதவி அரசியலாக மட்டுமே நீடித்துச் செல்கிறது.

மக்கள் சேவை என்பது மிக அருந்தலாகவே இடம்பெறுகிறது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளில் தமிழரசுக் கட்சியினரின் மேலாதிக்கப் போக்கே உள்முரண்பாடுகளின் ஊற்று மூலமாகக் காணப்படுகிறது.

தாங்கள் தங்களவில் எடுக்கும் முடிவுகளை ஏனைய இணைவுக் கட்சிகள் கேள்வி நியாயமின்றி ஏற்க வேண்டும் எனத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் வற்புறுத்தும் நிலை காணப்படுகிறது.

இதனால் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஒரு புறமாகவும் முதலமைச்சர் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மறுபுறமாகவும் காணப்படுகின்றனர்.

இவ்வாறு நாளாந்தம் விரிவடைந்து செல்லும் கூட்டமைப்பின் விரிசலும் முறுகலும் சத்தமின்றித் தமது பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்போருக்கு வாய்ப்பானதாகவே காணப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா முதலமைச்சருடன் இணக்கச் செயற்பாட்டை ஏற்படுத்தப் போவதாகக் கூறிக் கொண்டார்.

ஆனால் அதற்கான எந்த முயற்சியும் மாவையாரின் பக்கத்தில் இருந்து எடுக்கப்படவில்லை என்பதை முதலமைச்சரின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அப்படி மாவையார் நெஞ்சுக்கு நேர்மையாகக் கூறி இருப்பின் தானே நேரில் சென்று முதலமைச்சருடன் பேசியிருக்கலாம். அல்லது தமது தலைவர் சம்பந்தன் வந்தபோது அவரைப் பேச வைத்திருக்கலாம்.


அவ்வாறான முயற்சிகள் எதையும் முன்னெடுக்காது தெற்கிலே கரங்களை இணைத்து இணைக்க அரசியலுக்காகத் தமிழரசுக் கட்சித் தலைமையும் அவர்களுக்குச் சார்பானவர்களும் நடந்து கொள்கிறார்கள். மாகாண சபையில் முப்பது உறுப்பினர்களைப் பெரும்பான்மையாக் கொண்டு நான்கு அமைச்சர்களுடனும் தவிசாளர்,


முதலமைச்சர் மற்றும் ஏனையவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடபுலத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து ஒரு பொதுக்கலந்துரையாடலுக்கு ஏன் வரக்கூடாது என்ற கேள்வியை வடபுலத்தின் கணிசமானோர் எழுப்புகின்றனர்.

இன்று தமிழ்த் தேசியத்தைத் தாரகமந்திரமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ள நான்கு கட்சிகளாயினும் சரி அவற்றுக்கு அப்பாலான தமிழர் தரப்புக் கட்சிகளாயினும் அடிப்படையில் தமது கொள்கை, கோட்பாட்டு நிலையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

இவர்கள் எல்லோரும் முன்னெடுக்கும் தமிழ்த் தேசியம் என்பதனுள் ஜனநாயகமோ சமத்துவமோ கிடையாது.

ஆதிக்கம் மிக்க வர்க்க, சாதிய ஆணாதிக்கப் பெண்ணடிமைச் சிந்தனைகளே மிகக் கெட்டியாக இருந்து வருகின்றன.

அவை பற்றிய சமூக, விஞ்ஞான அடிப்படையிலான புதிய மதிப்பீடு முன்னெடுக்கப்படாது விடின் வெறும் செக்கிழுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான்.

எனவே, தமிழ்த் தேசியம் என்பது முற்போக்குத் தேசிய ஜனநாயகம் என்ற தடத்திற்கு மடைமாற்றம் பெறுவது காலத்தின் தேவையாகும். அதுவே யதார்த்தத்தோடு இணைந்த தூரநோக்கு அரசியலாகவும் தமிழ் மக்களின் விடுதலையாகவும் அமையமுடியும்.

நன்றி- தினக்குரல் புதிய பண்பாடு

0 Responses to தமிழரசுக் கட்சியினரின் முதலமைச்சருடனான இணக்க அரசியல் எப்போது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com